

அண்ணல் நபியின் தோழர்களுள் அதிகமான நபிமொழிகளை அறிந்து அவற்றை மக்களுக்கு எடுத்துரைத்தவர் அபூ ஹுரைரா. ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட நபிமொழிகளை அவர் மக்களுக்கு அறிவித்தார் என்று சொல்வர். இறைவழிபாட்டில், வாழ்வியல் முறையில் ஏற்படும் சந்தேகங்களை நபிகளிடம் எத்தகையத் தயக்கமும் இன்றி துணிவுடன் கேட்டுத் தெளிவு பெற்றவர் அவர். அப்படிக் கேட்டுக்கொண்ட நபிமொழிகளை அவர் எழுதியும் வைத்தார். அவ்வாறு அவர் கூறிய நபிமொழிகளுள் ஒன்று, ‘ஈமான் (நம்பிக்கை) அறுபதுக்கும் அதிகமான கிளைகளைக் கொண்டதாகும்’ என்பது. `ஈமான்' என்கிற ஒற்றைச் சொல்லுக்குப் பல பொருள்கள் இருக்கின்றன.
ஈமான்: நம்பிக்கை என்கிற பொருளில் `ஈமான்' என்கிற சொல் பயன்படுத்தப்படுகிறது. எதன் மீது நம்பிக்கை இருக்க வேண்டும்? ஏக இறைவன் மீது, அவன் தூதன் அண்ணல் நபி மீது, இறைவேதமான திருக்குர்ஆன் மீது. இதுதான் நம்பிக்கையின் தொடக்கம். பிறகு இஸ்லாத்தின் தூண்களான தொழுகை, நோன்பு, ஈகை, ஹஜ் மீது நம்பிக்கை கொள்ளுதல் ஈமான் ஆகும். இவற்றில் நம்பிக்கைக் கொண்டாலே ஒரு மனிதன் அறவழியில் வாழமுடியும். அடிப்படையான ஈமானை ஒருவர் பின்பற்றினாலே அவர் நம்பிக்கையாளர் ஆகிவிடுகிறார். நபிகளார் கூறியபடி, ‘தங்கள் நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிறருக்குப் பாதுகாப்பு வழங்குபவரே இஸ்லாத்தை ஏற்றவர்.’ ஈமான் என்கிற சொல் இதை மட்டும் குறிப்பிடவில்லை.
பிறருக்கு நீர் அருந்தக் கொடுப்பதில் தொடங்கி, உணவளிப்பது, தமக்கு கிடைக்க வேண்டி, தான் விரும்பும் ஒன்று தனது சகோதரனுக்கும் கிடைக்க வேண்டும் என்கிற சமத்துவ எண்ணம், அறிந்தவரானாலும் அறியாதவரானாலும் யாராயிருப்பினும் அவர்கள் எதிர்பட்டால் சலாம் சொல்வது, பதில் சலாம் சொல்வது, கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவது, நல்லறமாக இல்லறத்தை நடத்துவது, பெற்றோரைக் கண்ணியமாகவும் கருணையுடனும் நடத்துவது, வறுமைக்கு அஞ்சி குழந்தைகளைக் கொலை செய்யாமல் இருப்பது, அடிமைகளை விடுவிப்பது, கல்வி கற்பது, கல்வியைக் கற்பிப்பது, தூய்மையாக இருப்பது, அல்லாஹ்வின் வழியில் அறப்போர் செய்வது, தீமை செய்ய அஞ்சுவது, சுற்றத்தாருடன் இணைந்து வாழ்வது, விருந்தோம்பல், சமாதானத்தை ஏற்படுத்துவது, வீண் செலவு செய்யாமல் இருப்பது, பொறுமையாக இருப்பது, இறந்த ஒரு இஸ்லாமியரின் ஜனாஜாவைப் பின்தொடர்ந்து அவர் நல்லடக்கம் செய்யப்படும்வரை அங்கே இருப்பது என இன்னும் பல செயல்கள் ஈமானில் அடங்கும்.
இறுதிச் சடங்கில் பங்கேற்றுக்கொள்ளுதல் மரணத்தை நினைவுபடுத்துவதாகும். ஒருவருக்கு இம்மையின் நிலையாமையை அறியப்படுத்த இதைவிட சிறந்த பாடம் இல்லை. இந்த வரிசையில் இறுதியாக, தீமை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை பாதையை விட்டு அகற்றிவிடுவதும் ஈமான் என்று அடையாளப்படுத்தப்படுகிறது. நடந்து செல்லும் பாதையில் முட்களோ, கற்களோ இருந்தால்கூட, நமக்கென்ன என்று நினைக்காமல் பொதுநலச் சிந்தனையோடு அவற்றை அகற்றுவதும் நம்பிக்கையாளர் செய்யும் செயலாகும். அல்லாஹ் மீது நம்பிக்கை கொள்பவர், அநீதியான காரியங்கள் எதையும் செய்யமாட்டார். அநீதியான காரியங்களைச் செய்பவர் இஸ்லாமியர் அல்லர். ஒருவருக்கு மறுமையில் சொர்க்கம் கிடைப்பதற்கு அவர்கள் செய்யும் செயலே உதவும். “உங்களுடைய செயல்களின் காரணமாக உங்களுக்குச் சொந்தமாக்கப்பட்ட சொர்க்கம் இதுதான்” (திருக்குர்ஆன் 43:72) என்று நற்செயல்களால் இறை அடியார்களுக்குக் கிடைக்கும் சொர்க்கத்தைப் பற்றி இறைவன் அறிவிக்கிறான்.
சொல்லிய வண்ணம் செயல்: ‘இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம். சத்தியத்தில் நிலைத்து நிற்கின்ற இஸ்லாமிய மார்க்கமே அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான மார்க்கம்’ என்று நபி கூறுகிறார். உள்ளத்தில் நம்பிக்கை கொள்வது மட்டும் போதாது. அவற்றைச் செயல்படுத்த வேண்டும். நல்லறங்களைச் செய்வது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு அவற்றைத் தொடர்ந்து செய்வதும் மிகமிக முக்கியமானது என்றும் அவர் கூறுகிறார். அவ்வாறு ஓர் இஸ்லாமியர் தொடர்ந்து நல்லறங்கள் செய்ய அல்லாஹ்வே நேர்வழியைக் காட்டுவான். நம்பிக்கையாளருக்குப் பாதுகாப்பாளனாகவும் அவன் இருப்பான். இவ்வாறு நேர்வழியில் செயல்படும் ஓர் இஸ்லாமியரின் வாழ்வு மேன்மையானதாக இருக்கும். இறைச்சிந்தனை அவருடைய வாழ்வின் முறையை மாற்றியிருக்கும். நற்சிந்தனை செயல்வடிவம் பெறும்போது அது முன்னுதாரணமாக மாறுகிறது. இவ்வாறே ஒரு நம்பிக்கையாளர் மற்றொரு நம்பிக்கையாளரை அடையாளம் காணமுடியும்.
இறைவன் மீது நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்பவர்களை இறைவன் நல்லவர்களிடத்தில் சேர்ப்பான். அவர்களிடம் பொதுப்பண்பு உருவாகியிருக்கும். இவர்கள் உண்மையாளர்கள் ஆவர். இவர்கள் இறையச்சம் என்கிற ஒற்றைப் புள்ளியில் இருந்து புறப்பட்டவர்கள். இறைவன் அவர்களுக்குச் சொர்க்கச் சோலையைப் பரிசாக வழங்குவான். “நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிவோருக்குச் சொர்க்கச் சோலைகள் உண்டு” என்கிறது திருக்குர்ஆன் 2:25. இறைவனின் அன்பிற்குப் பாத்திரமாவதற்கு, நம்பிக்கை யாளராக இருத்தலே போதுமானது. மிகமிக எளிமையான வழிமுறை இது. வாழ்வில் உண்மையை, சத்தியத்தை, அறத்தைக் கடைப்பிடித்தால் அல்லாஹ்வின் அருளைப் பெறலாம். நற்செயல் புரியும் நம்பிக்கையாளருக்குப் பெரும்கூலி உண்டென நற்செய்தி கூறுகிறது இறைத்தூதரால் இறக்கப்பட்ட வேதம்.
(தொடரும்)
- bharathiannar@gmail.com