

இந்தத் தொடர் குறித்து திரு. அருண் என்பவர் புலனத்தில் எனக்கு அனுப்பியுள்ள கருத்து / கேள்வி:
அய்யா வணக்கம். 2.11.23 வந்த கட்டுரையை இன்றுதான் படிக்க முடிந்தது. விலங்குகளுக்கு மனம் இல்லை என எழுதி இருந்தீர்கள். இன்றுகூட பத்திரிகையில் படித்தேன். கேரளாவில் பிணவறை முன் நான்கு மாதங்களாக ஒரு நாய் நிற்பதாக.
கவிஞர் கூட எழுதி இருப்பார்:
மாடப்புறாவில் ஜோடிப்புறா உண்டு
ஜோடியைப் பிரிந்தபின் வாழும் புறா இல்லை ஏன் ஏன்
அதுதான் மாயம்.
பறவை விலங்குகளுக்கு மனம் இல்லை என்பதை ஒப்ப மனம் மறுக்கிறது.
நன்றி அய்யா.
*******************************
மனிதர்களைத் தவிர மற்ற உயிரினங்களுக்கு மனம் என்பது இல்லை என்றுதான் அறிவியலும் சொல்கிறது. அவற்றுக்கு மனம் என்ற ஒன்று இருப்பதாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இதை ‘ஒப்ப மனம் மறுக்கிறது' என்று எழுதியிருக்கிறீர்கள். அதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
நாங்கள் நங்கநல்லூரின் ஒரு கோடியில் குடியிருந்தோம். பெரும்பாலும் வயல், பாழான பொட்டல்; சில மரங்கள்; ஆங்காங்கே மட்டும் வீடுகள். ஆடுகளை மேய்த்துக்கொண்டு ஓர் அம்மாள் வருவார். கொல்லைப் புறத்தில் காயப்போட்டிருக்கும் பருப்பு போன்ற தானிய வகைகளிலிருந்து ஒரு கை எடுத்துக் கொள்வார். நான் கண்டு கொள்ளாமல் இருப்பேன். வெட்டித் தின்பதற்காய் வளர்க்கப்பட்ட ஆடுகள்தான் அவை என்றாலும் அவற்றுக்கு அவர் பெயர் வைத்திருந்தார். ‘ஏ கருப்பீ!’ என்று அவர் அழைக்கும்போது அந்தக் கருப்பி திரும்பிப் பார்ப்பதைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். நாய்கள்தான் பெயர் சொல்லி அழைத்தால் புரிந்துகொள்ளும் என்றுதான் அதுவரை நினைத்திருந்தேன். பின்னாளில் இதை விளங்கிக்கொண்டேன்.
மனிதனைத் தவிர மற்ற உயிரினங்களுக்கு மனம் என்றவொன்று கிடையாது என்பது ஆன்மிகமும், அறிவியலும் சந்திக்கும் புள்ளி என்று புரிந்துகொண்டேன். பெயர்வைத்துக் கூப்பிட்டால் திரும்பிப் பார்ப்பது, கொஞ்சுவது, பொருள்களை அடையாளம் கண்டுகொள்வது, எஜமானன் இறந்த பின்னும் அவனுக்காகக் காத்திருப்பது போன்ற விலங்கினங்களின் பற்பல செய்கைகளுக்கு என்ன விளக்கம்?
என் குருநாதர் சொல்வார், ‘ஒரு பசுவுக்கு, தான் பசு என்பது தெரியாது.’ இன்றைய அறிவியலும் இதைத்தான் சொல்கிறது என்று படித்துத் தெரிந்துகொண்டேன். ஓரளவுக்குக் கணக்குக்கூடப் புரிகின்ற குரங்கினங்கள், விலங்கினத்தின் செயல்களில் சில மனம் என்னும் விளிம்புவரை வருகின்றன என்ற அளவில் அறிவியலால் ஏற்றுக்கொள்ளப்படு கின்றன. என்றாலும், ‘நான்’ என்னும் உணர்வு மனிதனுக்கே பிரத்யேகமானது. அதுவே தளைக்கும், அதுவே விடுதலைக்கும் காரண மாகிறது. அதுவே அறிவின் மூல ஊற்றாகவும், அறியாமையின் விரிவுக்குக் காரணமாகவும் இருக்கிறது. சித்தம் consciousness அதாவது ‘நான் – நான் இன்னவன்’ போன்ற தனித்த உணர்வுகள் மனிதனைத் தவிர வேறெந்த உயிரினத்திற்கும் இல்லை.
வியக்கவைக்கும் விலங்கினங்கள்: நாம் விலங்கினங்களின் செயல்களைப் பார்க்கப் பார்க்க, இதை நம்புவது கடினமாகிக் கொண்டே வருகிறது! அவற்றுக்கு ‘எனது’ என்னும் உணர்வு இருக்கிறது. அதனால்தான் பாசமும், சண்டையும் வருகின்றன. ஆனால் ‘நான்’ இல்லை. இது எப்படி சாத்தியம்?
அவற்றைச் செலுத்துவது உள்ளுணர்வு என்னும் instinct. மனிதனைச் செலுத்துவது உள்ளறிவு என்னும் intuition. தான் என்ற உணர்வு இல்லாமலேயே, மனம் என்னும் கருவி இல்லாமலேயே, வகைபட்ட சிந்தனை என்ற ஒன்று தேவைப்படாமலேயே அவை வாழ்கின்றன. Animal instinct – divine intuition என்று சொல்லிச் சிந்தித்துப் பாருங்கள், வேறுபாடு தெளிவாக விளங்கும். நான் – மனம் இவை இல்லாமலேயே, அவை இயங்கும்படியாக programme செய்யப்பட்டிருக்கின்றன. இன்று வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவுபோல.
உடம்பு எனும் எந்திரம்: புத்தி என்பது சரி-தவறு என்ற சிந்தனைக்கான தளம். அது கூர்மையாக இருந்தால் அறிவு செறிவாக இருக்கிறது. ஆனால், புத்தி தேவைப்படாமலேயே ஓர் அறிவியக்கம் மனிதர்களாகிய நமக்கும் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, சுவாசம். நாம் சுவாசிக்கிறோம். ஆனால் சுவாசத்தை நாமா நடத்துகிறோம்? நாம் உண்கிறோம், நாமா செரிமானம் செய்கிறோம்? ரத்த ஓட்டம், இதயத் துடிப்பு, செரிமானம், சத்து பிரித்தல், வெளியேற்றம் இவற்றையெல்லாம் நாமா செய்கிறோம்? இல்லையே! அவை இயல்பாக நம்முள்ளே நடக்கின்றன. உடம்பு என்னும் எந்திரத்தோடேயே அந்த அறிவு intelligence பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இதற்கும் நாம் சிந்தித்துப் பெறுகின்ற எண்ணத் தெளிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
மற்ற உயிரினங்களில் இந்த உடலோடு வந்த அறிவுதான் body-intelligence அவற்றின் வாழ்க்கை முழுவதையும் நடத்துகிறது. மனிதர்களாகிய நம்மில், நம் உடம்பை இந்த சிந்தனையற்ற அறிவுதான் நடத்துகிறது. இத்தோடு நின்றுவிட்டால், மற்ற உயிரினங்களுக்கும் நமக்கும் வேறுபாடில்லை. நாம் நமக்கு வழங்கப்பட்டிருக்கின்ற individual consciousness, என்னும் தன்னுணர்வை, நம்முடைய சத்தியத்தை அறிந்துகொள்ளவும், நம்மைச் சுற்றி இருப்பவற்றைப் புரிந்துகொள்ளவும் பயன்படுத்த வேண்டும்.
எந்த உயிரினமும் எவ்வளவுதான் வியக்கும் படி நடந்துகொண்டாலும், அவை மனிதனுக்கு ஈடாக மாட்டா. மனிதன் விலங்கு நிலைக்குப் போகக் கூடாது. கடவுளாக உயரவேண்டும்.
அதற்கான வசதியும் ‘நான்’ உணர்வுதான். அதற்கான தடையும் ‘நான்’ உணர்வுதான். அதை வைத்துக்கொண்டே அதை வெல்வதுதான் வாழ்வாங்கு வாழும் வழி.
(தரிசனம் நிகழும்)
தொடர்புக்கு: tavenkateswaran@gmail.com