

கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் மீனச்சிலாற்றின் கரையில் உள்ள ஊர் திருவார்ப்பு. கேரளத்தின் பிரசித்தி பெற்ற வைணவத் தலங்களில் ஒன்றான ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் இங்குள்ளது.
பாண்டவர்கள் வனவாசத்தின்போது வழிபடுவதற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணனே தனது சிலை ஒன்றை அவர்களிடம் கொடுத்துள்ளார். வனவாசம் முடிந்து புறப்பட்ட பாண்டவர்கள், அப்பகுதி மக்கள் விரும்பிக் கேட்டதால் அந்தச் சிலையை அவர்களிடம் கொடுத்தனர். அதை வழிபட்டுவந்த மக்கள், சில இடையூறுகள் காரணமாகச் சிலையை ஆற்றில் வீசிவிட்டனர்.
ஆலயத்தின் பின்னணி: பல காலம் கழித்து அந்த வழியாக ஒரு மகான் (ஆதிசங்கரரின் சீடர் பத்மபாதராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது) படகில் சென்றபோது அந்தச் சிலையைக் கண்டெடுத்துள்ளார். அவர் செல்ல வேண்டிய திசைக்கு எதிர்த் திசையில் காற்றின் போக்கில் சென்ற படகு, மீனச்சிலாற்றின் கரையில் வந்து நின்றது. தர்ம சாஸ்தாவுக்காகக் கட்டப்பட்டு, சிலை வைக்கப்படாமல் இருந்த கோயிலில் அதை அவர் பிரதிஷ்டை செய்தார் என்றும் கூறப்படுகிறது.
வனவாசம் முடிந்ததும் அட்சய பாத்திரத்தையும், இந்த கிருஷ்ணர் சிலையையும் பாண்டவர்களே ஆற்றில் வீசி, மகான் மூலம் அந்தச் சிலை இங்கே வந்தடைந்ததாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது.
அர்ச்சகரின் கையில் கோடரி!: இக்கோயிலில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். கம்சனை சம்ஹாரம் செய்த பிறகு அந்தச் சோர்வு நீங்காமல் வந்து நின்ற மூர்த்தியாகக் கருதப்படுகிறார். அதனால், பசியுடனும் இருக்கிறார் சுவாமி.
பொதுவாகக் கோயில்களில் அதிகாலை 4.30 மணிக்குப் பிறகே நடை திறக்கப்படும். இங்கே, கிருஷ்ணனுக்குப் பசி வந்துவிடும் என்று அவசர அவசரமாக நள்ளிரவு 2 மணிக்கே நடையைத் திறக்கிறார்கள். இதில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் சுவாமி சந்நிதியின் கதவைத் திறக்கச் செல்லும் அர்ச்சகர், சாவியை மட்டுமின்றி ஒரு கோடரியையும் தயாராக வைத்திருப்பார். எதற்கு இந்தக் கோடரி தெரியுமா? ஒருவேளை, சாவியால் ஏதேனும் கோளாறு ஏற்பட்டுக் கதவைத் திறக்க முடியாமல் போய்விட்டால், தாமதமாகி சுவாமிக்குப் பசி வந்துவிடக் கூடாது என்பதால் கோடரியால் கதவை உடைத்துத் திறப்பதற்கும் அந்த அர்ச்சகருக்கு அதிகாரம் தரப்பட்டிருக்கிறது.
நடை சாத்தப்படாத ஆலயம்: உஷ பூஜையுடன் வழிபாடு தொடங்குகிறது. சுவாமிக்கு முதலில் அபிஷேகம் நடக்கும். உடல் முழுவதும் துடைத்து முடிக்கும் வரை சுவாமி பசி பொறுக்க மாட்டார் என்பதால், சுவாமியின் தலையை மட்டும் துடைத்துவிட்டு, உஷ பாயசம் நிவேதனம் செய்யப்படுகிறது. பசி சற்று அடங்கி கிருஷ்ணர் ஆசுவாசப்படுத்திக்கொண்ட பிறகுதான், உடம்பைத் துடைத்துவிடுகின்றனர். பிறகு, நாள் முழுக்கப் பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன. இரவு 8 மணிக்குத் தீபாராதனையுடன் திருநடை அடைக்கப்படுகிறது.
கிரகண காலத்தில் அனைத்துக் கோயில்களும் அடைக்கப்படுவது வழக்கம். இங்கும் அப்படித்தான் பின்பற்றி வந்துள்ளனர். ஒருமுறை, கிரகண காலத்தில் கோயில் நடை அடைக்கப்பட்டு மீண்டும் திறந்த பிறகு கிருஷ்ணரின் இடுப்பு ஒட்டியாணம் கழன்று கீழே கிடந்துள்ளது. ‘பசியால் சுவாமியின் இடுப்பு ஒட்டிப்போய்விட்டதோ?’ என்று அர்ச்சகர்களும் மக்களும் பதறிவிட்டனர். அது முதல் கிரகண காலத்திலும் இக்கோயில் நடை அடைக்கப்படுவது இல்லை. அதனால், 365 நாள்களும் இக்கோயில் திறந்திருக்கிறது!
பக்தனுக்கும் பசியாற்றும் ஆலயம்!: சுவாமி மட்டுமல்ல, பக்தர்களும் பசியோடு இருக்கக் கூடாது என்பது இங்கு ஐதிகம். தினமும் இரவில் நடை அடைக்கும்போது வெளியே வரும் அர்ச்சகர், ‘‘இங்கே யாரும் பசியோடு இருக்கிறீர்களா?’’ என்று சத்தம் போட்டுக் கேட்பார். எல்லாரது வயிறும் நிறைந்திருக்கிறது என்பதை உறுதிசெய்துகொண்ட பிறகே கோயில் நடை அடைக்கப்படும். இங்கே பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டவர்கள் வாழ்நாள் முழுக்கப் பசியால் வாட மாட்டார்கள்; சகல நலன்களோடு பெருவாழ்வு வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.