

சைவத் தலங்களில் திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோயில் முக்கியமானதாகும். மக்களின் வழிபாட்டில் நீக்கமற நிறைந்துள்ள இத்தலம், பாடல்பெற்ற தலங்களில் 42ஆவது தலமாகும். தற்போது நண்டாங்கோவில் என்று அறியப்படும் இது, முன்காலத்தில் திருந்துதேவன்குடி என்று அழைக்கப்பட்டது. இத்தலத்து இறைவன் மேல் சம்பந்தர் பாடிய பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது.
‘மானமாக் குவ்வன மாசுநீக் குவ்வன / வானையுள் கச்செலும் / வழிகள்காட் டுவ்வன / தேனும்வண் டும்மிசை பாடுந்தே வன்குடி / ஆனஞ்சா டும்முடி யடிகள்வே டங்களே’ என்பது சம்பந்தர் வாக்கு.
ஆன்மிகத்தில் ஆடி மாதத்தைக் கடக மாதம் என்பார்கள். கடக மாதத்தில் கடகம் வழிபட்ட தலம் இதுவாகும். கும்பகோணம் - பூம்புகார் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இக்கோயிலின் மூலவர் கற்கடேஸ்வரர் ஆவார்.
ஈசனின் சாபத்தால் நண்டாக மாறிய அம்பிகை, இந்தத் தலத்துக்கு வந்து இறைவனைத் தாமரை மலர் தூவி வழிபட்டுவந்தாள். அதேநேரம் தான் கொண்ட ஆணவத்தின் காரணமாக இந்திரப் பதவியை இழந்த தேவேந்திரனும் குரு பகவானின் ஆலோசனையின்படி இந்தத் தலத்துக்கு வந்து தினமும் 1,008 தாமரை மலர்களால் இறைவனை வழிபட்டுவந்தான்.
இந்த நிலையில்தான் அகழியில் மலரச் செய்த தாமரை மலர்களை நண்டு ஒன்று பறித்து வந்து இறைவனை அர்ச்சிப்பதைக் கண்டு கோபம் கொண்டான் இந்திரன். தனது வாளால் அந்த நண்டை வெட்டித் துண்டாக்கினான். அவனது வாளின் முனை சிவலிங்கத்தின் மீது பட்டு சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தியது. இறைவன் நண்டின் வடிவமாக இருந்த அம்பிகையைத் தன்வயப்படுத்திக்கொண்டார்.
நண்டு வடிவத்தில் வந்தது அம்பிகைதான் என்பதை உணர்ந்த இந்திரன் தனது தவறுக்காக மனம் வருந்தினான். அதன் காரணமாக இத்தலத்துக்கு ‘திருந்துதேவன்குடி’ என்னும் பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சிறந்ததொரு பரிகாரத் தலமாக இக்கோயில் சொல்லப்படுகிறது. ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் தங்களின் பிறந்த நட்சத்திரத்தில் அல்லது தேய்பிறை அஷ்டமி நாளில் இங்குள்ள இறைவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.
நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும் வண்ணம் வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம் அவர் மருந்து தயாரிப்பது போல சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இத்தலத்தில் தேவர்களின் வைத்தியரான தன்வந்திரிக்கும் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
நோய் தீர்க்கும் அருமருந்தம்மை: இத்தலம் முற்காலத்தில் மூலிகைவனமாக இருந்ததால் இவ்வூர் இறைவனுக்கு ‘மூலிகைவனேஸ்வரர்’ என்கிற பெயரும் உண்டு. சிவனை நண்டு வழிபடும் சிற்பம் ஒன்று கோயிலுள்ள கல்தூணில் செதுக்கப்பட்டுள்ளது. சோழ மன்னன் இத்தலத்தில் ஆலயத் திருப்பணி செய்தபோது அம்மன் சிலை இல்லாததால் புதிதாக ஒரு சிலையைச் செய்து வழிபட்டான். தனக்கு ஏற்பட்டிருந்த பக்கவாத நோயை இத்தல இறைவனும் இறைவியும் மருத்துவராகவும் மருத்துவச்சியாகவும் வந்து தைலமும் தீர்த்தமும் கொடுத்து குணப்படுத்தியதால் அம்மனுக்கு ‘அருமருந்தம்மை’ என்று பெயரிட்டு வழிபட்டான். பின்னாளில் பழைய அம்மன் சிலை கிடைத்தபோது அதையும் ஆலயத்தில் நிறுவி ‘அபூர்வ நாயகி’ என்று பெயரிட்டான். கோயிலின் கருவறைக்கு மேற்குப் பக்க உள்பிரகாரத்தில் கணபதி, முருகன், கஜலட்சுமிக்கு சந்நிதிகள் அமைந்துள்ளன. கருவறை கோஷ்டத்தில் தென்திசை நோக்கி தட்சிணாமூர்த்தியும் வடதிசை நோக்கி துர்க்கையும் உள்ளனர்.