

குருநானக் ஜெயந்தி கடந்த நவம்பர் 27 அன்று சீக்கியர் உள்பட மனித நேயத்தை விரும்பும் அனைவராலும் கொண்டாடப்பட்டது. சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவராக இருந்தாலும் அவரின் சிந்தனைகள் மதங்களைக் கடந்து அனைவரையும் கவர்ந்தவை.
குருநானக் தம் வாழ்நாளில் நான்கு நெடும் பயணங்களை மேற்கொண்டார். இவருடைய நான்காவது பயணம் மேற்கு நோக்கி அமைந்தது. அது பாக்தாத் வரை நீண்டது. இவர் மெக்காவிலிருந்தபோது, ஒரு நாள் காபா இருக்கும் திசை நோக்கிக் கால் நீட்டிப் படுத்துத் தூங்குவதைக் கவனித்தார் ஒரு முல்லா.
அவர் கோபத்துடன், "கடவுளின் புனிதச் சின்னத்தை நோக்கிக் கால் நீட்டிப் படுப்பது தவறு" என்று கண்டித்தார்.
அதற்கு குருநானக், "கடவுள் இல்லாத திசை நோக்கி என் காலைத் திருப்பிவிடுங்கள்" என்று சொன்னார்.
குருநானக் கவிதை எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். அவரின் கருத்துகளைக் கவிதையாகவே வடித்தார். அந்தக் கவிதைகளை அவரின் சீடர் சுங்கத் தொகுத்தார். சீக்கியர்களின் ஐந்தாவது குரு உருவாக்கிய ஆதி கிரந்த் என்னும் சீக்கியரின் வேதத்தில் குருநானக்கின் பாடல்கள் இடம்பெற்றன.
எல்லா மொழியிலும் முதல் எழுத்தாக அகரம் இருப்பதுபோல், உலகம் கடவுளை முதன்மையாகக் கொண்டுள்ளது என்றார் குருநானக். "எல்லா உலகங்களுக்கும் கடவுள் ஒருவரே. இதை நான் நூறாயிரம் முறையும் சொல்வேன். இறைவன் தூய அறிவு வடிவானவன். அறிவின் நெடுமுடியான இறைவன் மிக உயர்ந்த உண்மையானவன். இறைவனுடைய வழிகாட்டும் பாதையில் நடப்பவர் அவருடைய மாளிகைக்குள் ஏறிச் செல்வர். அவருடன் இரண்டறக் கலப்பர்.
ஒருவன் தன்னுடைய உலகச்செயல்பாடுகளை விடவேண்டிய தில்லை, அவன் காட்டிற்கோ, மலைக்கோ செல்ல வேண்டிய தில்லை, அங்கே அமர்ந்து தியானம் செய்ய வேண்டியதில்லை, அவன் தன் கடமைகளை உண்மையான முறையில் செய்ய வேண்டும்" என்றார்.
தொகுப்பு: தங்க.சங்கரபாண்டியன், சென்னை.