

யேசு, மக்களிடையே போதனை செய்து முடித்தார். பிறகு அவர்களை அனுப்பிவிட்டு, சீடர்களைப் படகில் ஏற்றித் தமக்கு முன்னே கடலின் மறுகரைக்குப் போகும்படி அனுப்பினார்.
அவர் ஒரு மலையின் மேல் தனிமையில் இருந்தார். அதற்குள் அவருடைய சீடர்கள் சென்ற படகு நடுக்கடலை அடைந்தது. அப்போது எதிர்க்காற்று மிகவும் பலமாக வீசியதால், படகு அலைகளின் சீற்றத்தால் மூழ்கும் நிலைக்குச் சென்றது. யேசுவும் தங்களுடன் படகில் இல்லாததால் சீடர்கள் மிகவும் பயந்தார்கள்.
நடு இரவில், யேசு கடலின்மேல் நடந்து அவர்களிடம் வந்தார். அவர் கடலின் மேல் நடந்ததைச் சீடர்கள் கண்டு கலக்கமடைந்து அது ஒரு ஆவி என்று நினைத்து பயத்தில் அலறினார்கள்.
உடனே யேசு அவர்களிடம், “திடம் கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள்” என்று சொன்னார். உடனே பேதுரு, யேசுவிடம்: “ஆண்டவரே! நீரேயானால் நானும் தண்ணீரின் மேல் நடந்து உம்மிடத்தில் வர அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டான்.
அதற்கு யேசு, “நடந்து வா” என்றார்.
அப்போது பேதுரு படகை விட்டிறங்கி, யேசுவினிடத்தில் போக தண்ணீரின் மேல் நடந்தான். சிறிது தூரம் சென்ற உடன் காற்று பலமாக அடித்ததைக் கண்டு பயந்து, தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தான். “ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்” என்று கதறினான்.
உடனே யேசு கையை நீட்டி அவனைப் பிடித்தார். “நம்பிக்கையற்றவனே, ஏன் சந்தேகப்பட்டாய்?” என்று கேட்டார்.
அவர்கள் படகில் ஏறினவுடனேயே அதுவரை சுழன்றடித்த புயல் காற்று நின்றது. கடல் அமைதியானது. அப்போது படகில் இருந்த யேசுவின் மற்ற சீடர்களும் வந்து மிகவும் ஆச்சரியப்பட்டு, “மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன்” என்று சொல்லி அவரைப் பணிந்தார்கள். அதுமுதல் யேசுவின் சீடர்கள் அவர்மேல் அதிக நம்பிக்கை வைத்தார்கள்.
கடலின் மேல் யேசு நடந்த இந்த அற்புதம் மிகவும் ஆச்சரியமானதாக இருந்தாலும், பெயருக்காகவோ புகழுக்காகவோ அல்லாமல், அவர் உண்மையாகவே இறைமகன் என்பதை அனைவரும் அறிந்து அவர்மேல் யாவரும் நம்பிக்கை வைத்து நித்தியப் பெருவாழ்வை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே யேசு இதுபோன்ற அசாதாரண அற்புதங்களைச் செய்தார்.