

“உண்ணுங்கள், பருகுங்கள். ஆனால், வீண் விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வீண் விரயம் செய்வோரை நேசிக்க மாட்டான்” என்பது இறைவனின் வேதம். உணவை விரயம் செய்யாமல் பிறருக்கு அளித்து உண்பதையே அல்லாஹ் விரும்புகிறான்.
ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமானது. இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானது என்றார் அண்ணல் நபி. ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்தான் எல்லாவற்றைவிடவும் தலை சிறந்தது’ என்கிற அறமே அது. இறைவனின் நம்பிக்கையாளர் ஒரு குடலில் உணவு உட்கொள்வார். ஆனால், ஏக இறைமறுப்பாளரோ ஏழு குடலிலும் உணவை உட்கொள்வார் என்றும் அண்ணல் கூறுகிறார். ஹலால் - ஹராம் என்கிற பாகுபாடின்றி உண்போர் என்பதாகவும் சிறுகுடல் முதல் மலக்குடல் வரை வயிறு நிறைய உண்போர் என்பதாகவும் இதற்கு இருவகையில் விளக்கம் அளிக்கப்படுகிறது.
ஒருமுறை மதீனாவில் பஞ்சம் ஏற்பட்டபோது, அண்ணல் நபி குர்பானி (அல்லாஹ்வின் பெயரால் விலங்குகளைப் பலி கொடுத்தல்) கொடுக்கப்பட்ட இறைச்சியை மூன்று நாள்களுக்கு மேல் சேமித்து வைத்து உண்ணக் கூடாது என்று கூறினார். குர்பானியில் பகிர்ந்தவை போக, மீதமாகும் இறைச்சியில் உப்புக் கண்டம் தயாரித்து நாள்கணக்கில் வைத்துச் சாப்பிடும் வழக்கம் மக்களிடம் இருந்தது. இந்நிலையில் மீதமாகும் இறைச்சியை எளியவர்களுக்கு அளித்திடும் வகையில் அத்தகைய உத்தரவை அண்ணல் பிறப்பித்தார்.
உணவின் அருமை: இளம் வயதிலேயே வறுமையைக் கண்டவர் அண்ணல் நபி. நபித்துவம் கிடைத்த பிறகு மெக்காவிலி ருந்து மதீனாவுக்கு இடம்பெயர்ந்தபோது மெக்காவில் தனக்கிருந்த செல்வங்கள் எல்லாவற்றையும் அங்கேயே விட்டுவிட்டு வந்தார் அவர். கையில் எடுத்துக்கொள்ள முடிந்த பொற்காசுகள் மட்டுமே அவரிடம் இருந்தன. தன் மீது நம்பிக்கை கொண்டு தன்னிடம் மெக்கா மக்கள் கொடுத்து வைத்திருந்த பொருள்கள் எல்லா வற்றையும் திருப்பிக் கொடுத்துவிட்டு மதீனா வரும்படி அலிக்கு அறிவுரை வழங்கிவிட்டு மதீனா வந்தடைந்தார் அண்ணல் நபி. மதீனாவுக்கு வந்தவுடன் இறை இல்லத்தைக் கட்டினார். அங்கே வீடில்லா ஏழை இஸ்லாமியர்களும் தங்கிக்கொண்டார்கள். மதீனாவுக்கு வந்துவிட்ட தனது மனைவியருக்கும் சின்னஞ்சிறிய வீடுகளைக் கட்டிக்கொடுத்தார் நபிகள் நாயகம். அவ்வீடுகளின் வாசலில் கம்பளிதான் திரையாக இருந்தது.
இவ்வாறு இறை இல்லத்திற்கும் ஏழை இஸ்லாமி யருக்கும் செலவழித்தவை போக, அண்ணல் நபியிடம் அதிக அளவில் செல்வம் அப்போது இருக்கவில்லை. ‘இறைவன் எனக்காக மக்காவின் பள்ளத்தாக்குகளைத் தங்கமாக மாற்றிவிடுவதாகக் கூறினான். ஆனால், பசியோடு இருந்து அடுத்த வேளை உணவருந்தும் நிலை போதும் என இறைவனிடம் நான் கூறிவிட்டேன்’ எனத் தனது மனைவியரில் ஒருவரான ஆயிஷாவிடம் அண்ணல் குறிப்பிட்டிருக்கிறார். மதீனா வந்த பிறகு மூன்று நாள்கள் தொடர்ந்து அண்ணல் நபி வயிறு நிரம்ப உணவு உட்கொண்டதில்லை எனவும் ஆயிஷா கூறுகிறார். இதற்குப் பொருள், அவரிடம் போதுமான செல்வம் இல்லை என்பது அல்ல. ஏழை எளியவருக்கு அவர் வழங்கிய கொடைதான் அதற்குக் காரணம்.
இந்த நிலையை அண்ணலே தன் வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொண்டார். அவர் எண்ணியிருந்தால் செல்வச் செழிப்பில் புரண்டிருக்கலாம். ஆனால், மக்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த மாநபி, இப்படியான அறநெறிகளைப் பின்பற்றித் தன் வாழ்வையே பாடமாக்கி வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
எந்த உணவையும் நபி குறை கூறியதில்லை. அல்லாஹ்வின் திருப்பெயரைக் கூறி வலது கரத்தால் தட்டில் தன் கைக்கு அருகில் இருக்கும் உணவை அவர் எடுத்துண்ணக் கற்றுக்கொடுத்திருக்கிறார். அவரின் தோழர்கள் இல்லாமல் தனியாக நபி உணவருந்தியதில்லை.
ஒருவருக்கு யார் உணவைச் சமைக்கிறார்களோ அவர்களையும் தங்களுடன் அமரவைத்து உணவு உண்ணச் செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டாலும் ஒரு கவளம் உணவையாவது அப்போது அவர்களுக் குக் கொடுக்க வேண்டும். சிரமங்களை ஏற்றுக்கொண்டு சமைத்தவருக்குச் செய்யும் அன்பின் வெளிப்பாடாக அது இருக்கும் என்றார் அண்ணல் நபி. வீட்டில் பெண்கள் சமைத்து வைப்பதைத் தொலைக்காட்சியையோ அலைபேசியையோ பார்த்துக்கொண்டே விழுங்கும் இன்றைய நாகரிக மனிதனுக்கு மிகத் தேவையான அறிவுரை இது.
“இரவு உணவு உங்களுக்கு முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கத் தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லப் பட்டுவிட்டால், முதலில் உணவை உண்ணுங்கள். (பிறகு தொழச் செல்லுங்கள்)” என்று நபி கூறியதாக ஹதீஸ் ஸஹீஹுல் புகாரி 5463 சொல்கிறது. உணவு அருந்தாமல் தொழச் செல்லும்பட்சத்தில் தொழுகையின்போது மனம் உணவை நினைத்துக் கொண்டி ருக்கும். உணவை உண்டபின் தொழச் சென்றால் அமைதியுடன் இறைவணக்கத்தில் ஈடுபடலாம் என்பதற்காகவே இவ்வாறு அண்ணல் கூறியிருக்கிறார். மனிதனின் எல்லா ஏற்ற இறக்கங்களையும் அறிந்தவர் அண்ணல்.
எளிமை: தங்கம், வெள்ளிப் பாத்திரங்களில் உணவு, நீர் அருந்துவதை நபி தடை செய்தார். அவ்வாறு செய்வது, நரக நெருப்பை விழுங்குவதற்குச் சமம் என்றும் அவர் எச்சரித்தார். அன்றைய அரேபியாவில் தேன், பேரீச்சை, திராட்சை, கோதுமை, வாற்கோதுமை (பார்லி) ஆகியவற்றில் இருந்து மது தயாரிக்கப்பட்டது. இவற்றில் எதையும் பருகக் கூடாது எனத் தடை விதித்த நபி, போதை ஏற்படுத்தும் வகையில் மாறியிருக்காத பேரீச்சை, திராட்சைப் பழ ரசங்களை அருந்தலாம் எனவும் அறிவுறுத்தினார். நின்றுகொண்டு நீர் அருந்துவது, நீர் பருகும்போது பாத்திரத்தில் மூச்சு விடுவது ஆகியவை தடை செய்யப்பட்டன. உணவு உண்ணும்போது அதிலிருந்து கொஞ்சம் கீழே விழுந்து விட்டால் அதைச் சுத்தம் செய்து உண்ண அறிவுறுத்தப்பட்டது.
அனஸ் பின் மாலிக் எனும் நபித்தோழர், ‘தையற்காரர் ஒருவர் நபியை உணவு உண்ண அழைத்திருந்தார். அவர் வாற்கோதுமை ரொட்டியையும் சுரைக்காயையும் உப்புக்கண்டம் இருந்த குழம்பையும் நபியின் முன்னால் வைத்தார். நபி, உணவுத்தட்டின் நாலாபுறங்களிலும் சுரைக்காயைத் தேடுவதைப் பார்த்தேன். அன்றிலிருந்து நானும் சுரைக்காயை விரும்பிச் சாப்பிடுகிறேன்.’ என்று கூறியிருக்கிறார். அண்ணல் நபிக்குச் சுரைக்காயைப் போலவே, திராட்சையும் பிடித்தமானது. இனிப்புப் பண்டமும் தேனும் அவருக்கு விருப்பமானவை என ஆயிஷா கூறியிருக்கிறார்.
“கறுப்பு நிறப் பொருள்களான பேரீச்சம் பழம் மற்றும் தண்ணீரால் வயிறு நிரம்பியிருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இறந்தார்கள்” என்று ஆயிஷா சாட்சி சொல்வதில் இருந்து உத்தமர் அண்ணலின் எளிய, தூய வாழ்வை நாம் அறிந்துகொள்ளலாம். வரலாற்றில் முக்கிய மனிதர்களின் பட்டியலில் முதலிடத்தில் அண்ணல் நபி விளங்குவதற்கு இதுதான் முக்கியக் காரணம்.
(தொடரும்)