வாமனபுரீஸ்வரர் ஆலயம்: திரையிலேயே துலங்கும் அதிசயம்!

வாமனபுரீஸ்வரர் ஆலயம்: திரையிலேயே துலங்கும் அதிசயம்!
Updated on
3 min read

ஆலயங்களில் பொதுவாகத் தெய்வத் திருமேனிகளுக்கு அபிஷேகம் செய்வித்து, அலங்காரங்கள் முடிந்து திரைச்சீலையை அகற்றியவுடன் இறைவனின் தரிசனம் கிடைக்கும். ஆனால், திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் ஆலயத்தின் திரைச்சீலைக்குப் பின்னே ஒரு புராணக் கதை விரிகிறது! காஷ்யபருக்கும் அதிதிக்கும் குழந்தை வாமனனாகப் பிறந்த திருமால், தேவர்களின் துயர் தீர்க்க மாவலியிடம் மூவடி மண் கேட்டு உலகளந்து நின்றது நாம் அறிந்ததுதான். தர்மத்தை ரட்சிக்க மன் நாராயணன், மாவலியின் சிரத்தில் பாதம் வைத்து அவனைப் பாதாளத்திற்கு அனுப்பினார். இருந்தாலும், தீராத பழியாலும் தோஷத்தாலும் நாராயணன் அல்லல்பட்டார். தனது துயர்தீர்க்க வேண்டி, கெடில நதிக்கரையில் ஈசனை மனமுருகப் பூசித்தார்.

திருமாலின் பக்தியால் மகிழ்ந்த ஈசன், திருமாலுக்கு அருள்காட்சி தந்தார். “மாலே! மணிவண்ணா! மாயவனே! திருமகள் நாயகனே! வேண்டும் வரம் யாது? எது வானாலும் தருவதற்குச் சித்தமாக உள்ளோம்” என்று விடையேறி உமையோடு வந்த விண்ணவர் தலைவன் வாய் மலர்ந்து அருளினான்.

வரம் அருளிய ஈசன்: “மாவலியை வஞ்சித்ததால் ஏற்பட்ட தோஷத்தை, தங்களை வணங்கிய மாத்திரத்தில் நீங்கப் பெற்றேன். எனது இன்னல் அனைத்தும் தீர தங்கள் திருவருளே காரணம். அந்தத் திருவருளை வியந்தபடியே எப்போதும் தங்களைப் பூசித்தபடியே இருக்க விரும்புகிறேன். இமைப்பொழுதும் நான் இனி தங்களைப் பூசிக்காமல் இருக்கக் கூடாது. எனது பூஜைக்கு எந்தத் தடையும் வரக் கூடாது. பரம்பொருளே அதற்கு அருள்புரியுங்கள்” என்று வரம் வேண்டினார் வாமன மூர்த்தி. “வாமனரே கவலை வேண்டாம். நீர் எப்போதும் இங்கேயே என்னைப் பூசித்துக் கொண்டிருக்கலாம். பிரம்மச்சாரியாக வாமன அவதாரம் எடுத்து நீர் எம்மைப் பூசித்ததால், இத்தலம் திருமாணிக்குழி (மாணி என்றால் பிரம்மச்சாரி என்று பொருள்) எனப் பெயர் பெறும். உனது பூசையை யாரும் பார்க்கவும் முடியாது. தொந்தரவும் செய்ய முடியாது. எனது வாகனமான நந்திகூட இதில் அடக்கம்” என்றார் ஈசன். “புரியவில்லையே மகாதேவா” என்றார் மாலவன்.

அதைக் கண்டு ஈசன் இளநகை பூத்தார். தனது சடையைச் சற்றே சிலுப்பி அசைத்தார். அந்த அசைவில் ஈசனைப் போலவே வடிவம் கொண்ட ஒருவர் தோன்றினார். இடையில் புலி ஆடையும் முடியில் பிறையணியும் கொண்டு, முக்கண் தரித்திருந்தார். அவர் பதினொரு ருத்திரர்களில் ஒருவரான குபேர பீம ருத்திரர் ஆவார். அவரைப் பார்த்து புன்னகைத்த ஈசன், “பீம ருத்திரா! நீ திரையாக மாறி இந்தத் தலத்தில் எனது சந்நிதியை எந்நேரமும் மறைத்துக் கொண்டிருக்க வேண்டும். சந்நிதியின் உள்ளே வாமனர் எம்மைப் பூசித்துக்கொண்டே இருப்பார்.

நந்திக்குக்கூட எமது தரிசனம் தராமல் நீ எம்மை மறைத்துக்கொண்டிருக்க வேண்டும். எம்மைத் தரிசிக்க வரும் அடியவர்கள் உம்மைப் பூசித்து உம் அனுமதி பெற்ற பின்பே திரையை நீக்கி என் தரிசனம் பெற வேண்டும். அதுவும் இரண்டொரு நொடிகளுக்கு மட்டும்தான். பின்பு திரை மூடப்பட வேண்டும். என் ஆணையை ஏற்று இன்று முதல் இந்தத் தலத்தில் சந்நிதியின் முன்பு திரையாக மாறுவாயாக” என்று அபயக்கரம் காட்டி பீம ருத்திரருக்குக் கட்டளை இட்டார். அன்று முதல் திரைவடிவில் ஈசன் சந்நிதியை ருத்திரர் காவல் காக்கிறார். இந்த வரலாறு கோயில் சந்நிதியின் சுவரில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

காத்திருக்கும் நந்தி: ஈசனைத் தரிசிக்க வேண்டும் என்றால், இன்றும், திரை வடிவில் அருளும் பீம ருத்திரருக்குப் பூசைகள் செய்து அவர் அனுமதி பெற்றுத் திரையை விலக்குவார்கள். திரையை விலக்கிய அந்த இரண்டொரு நொடிகளில் கிடைக்கும் ஈசன் தரிசனத்தைக் காணக் கண் கோடி வேண்டும். நந்தி மற்ற கோயில்களில் சற்றே தலையைச் சாய்த்த கோலத்தில் இருப்பார். ஆனால், இந்தத் தலத்தில் நேரே ஈசனை நோக்கியபடி இருப்பார். நாம் ஈசன் தரிசனம் பெற ருத்திரருக்குப் பூசை செய்து வணங்கி அவர் அனுமதி பெற்ற பின்புதான் தரிசனம் செய்ய முடியும். நாம் தரிசனம் செய்யும் சில மணித்துளிகளில்தான் நந்திக்கும் ஈசன் தரிசனம் கிடைக்கும்.

அதனால் எங்கே தலையைத் திருப்பியிருந்தால் கிடைக்கும் தரிசனத்தை இழந்து விடுவோமோ என்கிற பயத்தில் நந்தி தலையைச் சாய்க்காமல் ஈசன் தரிசனத்துக்காக நம்மோடு இந்த ஆலயத்தில் காத்திருக்கிறார். மேலும், இத்தலத்து ஈசன் சந்நிதியில் அம்மையும் அப்பனும் எப்போதும் சேர்ந்தே இருப்பதால், சந்நிதியை பீம ருத்திரர் பாதுகாக்கிறார் என்றும் சொல்கிறார்கள். பீம ருத்திரர் திருவுருவம் சந்நிதியின் திரையில் பொறிக்கப்பட்டிருக்கிறது. இவருக்கே முதல் பூசை செய்யப்படுகிறது. சந்நிதியே பள்ளியறையாக இருப்பதால் இந்தக் கோயிலில் தனியாகப் பள்ளியறை கிடையாது.

காலத்தை ஆளும் அம்பிகை: மதுரையில் மீனாட்சியாகவும் காஞ்சியில் காமாட்சியாகவும் காசியில் விசாலாட்சியாகவும் நாகையில் நீலாயதாட்சியாகவும் இருக்கும் அம்பிகை இத்தலத்தில் அஞ்சனாட்சியாக அருள்பாலிப்பதால், அம்பிகையின் ஆட்சி பீடமாக இது கருதப்படுகிறது. அதாவது அம்பிகைக்குத்தான் அனைத்து ஆட்சியும் பெருமையும். இத்தலத்தில் அம்பிகை பகல் நேரத்தைத் தாமரைப் பூவாகவும் இரவு நேரத்தை நீலோத்பவ மலராகவும் கையில் ஏந்தி காட்சி தருகிறாள். அதாவது காலத்தை அடக்கி ஆளும் சக்தியாக அம்பிகை இங்கு விளங்குவது சிறப்பு. நான்கு வேதங்களும் நான்கு தூண்களாக மாறி ஈசன் சந்நிதியைச் சுமப்பது மற்றொரு சிறப்பு.

மகிஷனை வதம் செய்வதற்கு முன்பிருந்தே இங்கே துர்க்கை அருள்வதால், துர்க்கையின் பாதங்களுக்குக் கீழே மகிஷாசுரன் சிரம் இல்லை. அனைத்துத் தலங்களிலும் விநாயகர் முன் நிற்கும் மூஷிகம், பக்கத்திலேயே இருப்பது மற்றொரு சிறப்பு. ஆலய பைரவராக ஸ்வர்ணாகர்ஷண பைரவர் இருப்பது இன்னுமொரு சிறப்பு. திருவண்ணாமலையில் பரணி நட்சத்திரத்தில் தீபம் ஏற்றப்படும். ஆனால், இங்கு ரோகிணி நட்சத்திரத்தில் (கார்த்திகை) தீபம் ஏற்றுகிறார்கள். சம்பந்தர் பாடிய அற்புத ஈசன் இவர். இந்தத் தலத்து இறைவனை வணங்கினால் வளமை கூடும் என்பது நம்பிக்கை. அம்மையும் அப்பனும் எப்போதும் இங்கே சேர்ந்தே இருப்பதால், அம்மையப்பன் அருளால் கணவன் - மனைவி இடையில் ஒற்றுமை ஓங்கும் எனவும் நம்பப்படுகிறது. குழந்தை வரம் வேண்டி இத்தல அம்மனுக்கு வெண்ணெய் நிவேதனம் செய்து, அந்த நிவேதனப் பிரசாதத்தை உண்டால் குழந்தை பாக்கியம் ஏற்படும் என்பது நம்பிக்கை.

அமைவிடம்: கடலூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் ஆலயம். கடலூரில் இருந்தும் பண்ருட்டியில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.

- radhaekrishnamag1999@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in