

காவிரி நதியின் தென்கரையில் இருக்கிறது திருச்சோற்றுத்துறை. பாடல் பெற்ற கோயில். “காவிரி அறையும் சோற்றுத் துறைசென் றடைவோமே” என்பது சம்பந்தர் தேவாரம். சப்தஸ்தான தலங்களுள் ஒன்று. ஆலயத்தின் உள்ளே நுழையும் பக்தர்களை அப்படியே ஈர்த்துக் கொள்ளும் அமைதி அந்த ஆலயத்தில் நிலவுகிறது. இசைத்துறைக்கும் இந்த ஊருக்கும் முக்கியத்துவம் இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் தியாகராஜரின் கீர்த்தனைப் பிறந்த கதைகளை `தியாகராஜ அனுபவங்கள்' என்று சிறுகதைகளாக எழுதிய சுவாமிநாத ஆத்ரேயன், திருச்சோற்றுத்துறை நாகசுர வித்வான்கள் வாசித்த பஞ்சரத்ன மல்லாரியை தியாகராஜர் ரசித்துக் கேட்டதாக எழுதியிருகிறார்.
வரமு இராகத்தில் அமைந்த `மனசுலோனி மர்ம' என்கிற கீர்த்தனைப் பிறந்த கதையில் இச்சம்பவம் வருகிறது. தியாகராஜரின் ஒவ்வொரு கீர்த்தனையின் பின்னணியிலும் ஒரு நிகழ்வு இருக்கிறது. அந்நிகழ்வுகள் அவரைப் பாடத் தூண்டின என்பது ஆத்ரேயனின் வாதம். எழுத்தாளர்களான தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு ஆகியோரின் நண்பரான ஆத்ரேயன், கும்பகோணத்தில் இருந்தபோது உமையாள்புரம் சுவாமிநாத பாகவதரிடம் இசை கற்றுக்கொண்டார். “இதில் சொல்லப்படும் சம்பவங்கள் அனைத்தும் உண்மை. உமையாள்புரம் ஸ்வாமிநாத பாகவதரும் எம்பார் ரங்காசாரியாரும் தியாகராஜரின் சீடருக்குச் சீடர்கள். அவர்களிடம் நான் கேட்டறிந்தவை” என்று தன்னுடைய சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் ஆத்ரேயன் தெரிவிக்கிறார்.
தியாகராஜரின் சமாதியில் சலைவைக்கல்லில் கீர்த்தனைகளைப் பதிவு செய்தபோதும் நிறைய விசயங்களைத் தெரிந்துகொண்டதாக தெரிவிக்கும் அவர், அவற்றின் ஆதாரத்தில் கட்டுக்கோப்பாகக் கதைகளாக எழுதியவை `சுதேசமித்திரன்' தீபாவளி மலர், சிவாஜி ஆண்டு மலர், பாகவத தர்மம், அமரபாரதி ஆகிய இதழ்களில் வெளியானதையும் குறிப்பிடுகிறார். மொத்தம் 12 கதைகள். பன்னிரண்டு கீர்த்தனைகளின் பிறப்பைத் தெரிவிக்கின்றன. இக்கதைகளில் குறிப்பாக, `மனசுலோனி' கீர்த்தனைகளைப் படிக்கையில், தியாகராஜர் பஞ்சரத்ன கீர்த்தனைகளை எழுதுவதற்கு நாகசுர வித்வான்களின் பஞ்சரத்ன மல்லாரி தூண்டுகோலாக இருந்ததா?' என்கிற கேள்வியும் எழுகிறது. அந்த நிகழ்ச்சியை கதையில் இப்படி விவரிக்கிறார் ஆத்ரேயன்.
“தியாகராஜர் இரவு ஆகாரம் முடித்துக் கொண்டு, தம் சிஷ்யர்களுடன் அமர்ந்து ராமனுக்கு வழக்கம் போல டோலாத்ஸவக் கீர்த்தனைகளை சிஷ்யர்கள் பாட, ராமனுக்கு பால் நிவேதிதம் செய்து, தாம்பூலம் சமர்ப்பித்து, ஊஞ்சல் ஆட்டிக் களைப்பு தீர நீலாம்பரியில் `உய்யால லூகவையா', ரீதி கௌளையில் படலிகதீர– பாடி சயனத்தில் அமர்த்தித் திரை இட்டு மங்கள ஆரத்தி எடுத்து வணங்கினார்.
கோயிலில் அதிர்வேட்டுச் சத்தம் கேட்டது.
“அண்ணா ஸ்வாமி புறப்பாட்டிலே இன்னிக்கு திருச்சோற்றுத்துறை நாயனக்காரர்கள் பஞ்சரத்ன மல்லாரி ரொம்ப நன்னா வாசிப்பாளாம். போவோமா?” என்றான் இராமராயன்.
தியாகராஜர் சுந்தர பாகவதரையும் க்ருஷ்ண பாகவதரையும் பார்த்தார்.
“போவோமா”
நான்கு பேர்களும் திருமஞ்சன வீதி தாண்டி கூட்டத்தில் கரைந்தார்கள்.
அவர்கள் சந்நிதி தெருவுக்கு வந்த போது கூட்டம் தெரிந்தது. கோபுர வாசலில் பனையோலைச் சப்பரத்தில் ரிஷப வாகனத்தில் அமர்ந்திருக்கும் தர்மஸம்வர்த்தனீ ஸமேத பஞ்சநதீசருக்கு தீபாராதனை நடந்தது.
பிறைசூடிய பெருமானை தாரக நாமமான ராம நாமத்தை உபதேசிக்கும் பரமகுரு என்கிற பாவனையுடன் தியாகராஜர் வணங்கினார். நாட்டையில் மல்லாரி மலர்ந்தது. நான்கு நாயனங்கள். மந்த்ர ஸ்தாயியில் இரண்டு. தார ஸ்தாயியில் இரண்டு. பலமுறை ஒத்திகைப் பார்க்கப்பட்டு கொஞ்சம் கூட பிசிறு இல்லாமல், துத்தகாரத்தில் ஸ்வரஸ்தானங்களின் முனை மழுங்காமல் கச்சிதமாக ஒலித்தன. அந்த ஆறு தவில்களும் சொற்கட்டுகளைத் துளியும் தப்பாமல் ஒரே த்வனியில் முழங்கின. அந்த இசை மக்கள் அனைவரின் மனங்களையும் ஒடுக்கி ஒரே நாதமயமான நிலையில் நிறுத்தியது.
கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீ ராகங்களில் காற்றில் தவழ்ந்தது மல்லாரி. கீழவீதி முனையில் தவில்காரர்களின் தனி ஆவர்த்தனம். இதன் பின்னர் நடந்த ஒரு சம்பவம் `மனசுலோனி' கீர்த்தனைக்கு வழி வகுத்ததாக இக்கதை கூறுகிறது. பஞ்சரத்ன மல்லாரியே பஞ்சரத்ன கீர்த்தனைகளுக்கு அடிப்படை என்பதை ஆத்ரேயனும் தெரிவிக்கவில்லை. தியாகராஜரில் ஆழங்காற்பட்ட அறிஞர்களும் இது குறித்து எதுவும் எழுதவில்லை. கரகரப்பிரியாவில் அமைந்த `இராமா நீயெட' கீர்த்தனை உருவான கதையில் ஒரு சிறு குறிப்பை ஆத்ரேயன் தெரிவிக்கிறார்.
தியாகராஜரின் நண்பரான விஷ்வேசுவர கனபாடிகள் பாடும் கனமே பஞ்சரத்ன கீர்த்தனைகளுக்கு அடிப்படை என்று தெரிவிக்கிறார். அச்சம்பவம் இப்படி நகர்கிறது. “நல்ல சங்கீத இரசிகர் (விஷ்வேசுர கனபாடிகள்). சுவாமிகளிடம் மிகுந்த அன்பு. மத்யான போஜனத்திற்குப் பிறகு ஒருநாள் கூட தவறாமல் சுவாமிகளிடம் வருவார். ஸ்வாமிகளுக்கும் அவரிடம் மிகுந்த மரியாதை. அடிக்கடி பிரஹதாரண்யத்தை கனம் சொல்லச் சொல்லி காது குளிரக் கேட்டு ரஸிப்பார். அவர் கனம் சொல்வதில் உள்ள ஸர்வலகு லயக்கட்டு வெகுவாக அவர் மனதைக் கவர்ந்தது. பஞ்சரத்னக் கீர்த்தனைகளை இயற்றுவதற்குக்கூட இதுதான் ஒரு வேகத்தை அளித்தது” அவருக்கு என்று அக்கதையில் எழுதுகிறார்.
மீண்டும் எழும் கேள்வி என்னவென்றால், பஞ்சரத்னக் கீர்த்தனைகள் வரிசையாக நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீ ராகங்களில் செய்யப்பட்டதா அல்லது தனித்தனியாக செய்யப்பட்டதா என்பதும் தெரியவில்லை. மற்றக் கீர்த்தனைகளை இயற்றுவதற்கு முன்னதாகவே `எந்தரோமகானுபாவலு' கீர்த்தனையை அவர் எழுதிவிட்டார் என்பதுதான் வரலாறு. கேரளத்தைச் சேர்ந்த ஷட்கால கோவிந்த மாரார் பாடுவதைக் கேட்டுத்தான் அவர் அப்பாடலை எழுதினார் என்று இராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருந்த சி. இராமானுஜச்சாரியார் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தியாகராஜரின் பெருமையைக் கேள்விப்பட்ட கோவிந்த மாரார் திருவையாற்றுக்கு வந்திருக்கிறார். அன்று ஏகாதசி. அஷ்டபதியில் இடம் பெற்ற `சந்தன சர்சித நீல களேபர' என்கிற பந்துவராளி ராகப் பாடலை, மாரார் ஆறு காலத்தில் பாடியதைக் கேட்டு வியப்புற்று உருகிய தியாகராஜர், ராகத்தில் `எந்தரோ மகானு' கீர்த்தனையை இயற்றிப் பாடினார். ஆறு காலத்தில் பாடும் திறம் இருந்தததால் கோவிந்த மாராருக்கு `ஷட்கால' என்கிற பட்டம் சூட்டப்பட்டது.
- kolappan.b@thehindu.co.in