கண்முன் தெரிவதே கடவுள் 25: எவரின் புரிதலிலும் இல்லை நான்!

கண்முன் தெரிவதே கடவுள் 25: எவரின் புரிதலிலும் இல்லை நான்!
Updated on
2 min read

தீயோ தீயாய் இருக்கிறது
திரியும் திரியாய் இருக்கிறது
நீயேன் நீயாய் இருப்பதில்லை
நினைத்துப் பாரேன் நினைப்புவிடும்!

நாம் நம்மைப் பற்றி நம்மிடமே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வியுண்டு. ஒரே கேள்விதான் உண்டு! நாம் நாமாக இருக்கிறோமா என்பதே அது. ‘நலமா?’ என்று விசாரித்தால், ‘நான் நலமே’ என்கிறோம். எந்த நான்? தந்தையாக, மகனாக, கணவனாக, தாத்தாவாக, சக ஊழியனாக, நண்பனாக, உறவினனாக, எழுத்தாளனாக இன்னும் எத்தனை எத்தனையோவாக இருக்கிறோமே இவற்றில் எந்த ‘நான்’, நான்? எந்த ‘நான்’, அந்த நான் எவருக்கும் தெரிவதில்லை. சொந்தபந்த வாழ்க்கையிலே சொக்கட்டான் முடிவதில்லை. எல்லாம் நான்தானே என்கிறீர்களா? இல்லை! நீங்கள் ஒரே ஆள்தான், ஆனால் எத்தனை வேடங்கள் புனைகிறீர்கள்! சரி, வேடங்கள் என்கிற வார்த்தை பிடிக்கவில்லையென்றால் கோலங்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்!

அன்றாடம் உறங்குகிறீர்கள். விழித்த பிறகுதான் உறங்கினோம் என்பதை உணர்கிறீர்கள். ஆழ்ந்த உறக்கத்தில் இந்த வேடங்கள், சரி கோலங்கள் எங்கே? அட, நீங்கள்தான் எங்கே? இதை விடுங்கள். இதுவரை நீங்கள் அறிந்ததென்ன? உடனே உங்கள் பள்ளிப் படிப்பிலிருந்து பட்டியல் போடாதீர்கள். என்ன கேட்கிறேன் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இதுவரை நீங்கள் படித்தது, பார்த்தது, கேட்டது இவை எதுவுமே இல்லாமல் நீங்களாகத் தெரிந்துகொண்டது என்ன? எவ்வளவு படித்திருப்பீர்கள்! அதைவிட, எவ்வளவு கேட்டிருப்பீர்கள்! அதைவிடவும் எவ்வளவு பேசியிருப்பீர்கள்! இவை எல்லாவற்றையும் அறவே மறந்துவிட்டு அல்லது அழித்துவிட்டு அல்லது ஒரு கணம் ஒதுக்கி வைத்துவிட்டு உங்களுக்குள் நின்று, உங்கள் நெஞ்சில் கைவைத்து நீங்களே உங்களிடம் கேட்டுப் பாருங்கள், நீங்களாக இவை எதனுடைய துணையுமில்லாமல் தெரிந்துகொண்டது என்ன?

நீங்கள் உங்களைப் பற்றி என்னென்னவெல்லாம் நினைத்துக்கொண்டீர்கள்! மற்றவர்கள் உங்களைப் பற்றி எப்படி நினைக்கவேண்டும் என்று எப்படியெல்லாம் விரும்பினீர்கள்! உங்களைப் பற்றிய உங்கள் நினைப்புக்கும் உங்களைப் பற்றிய ஊரார் நினைப்புக்கும் உங்களைப் பற்றி இன்னின்னார் இப்படி இப்படி நினைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதற்கும் நடுவில் நீங்கள் யார்? நீங்கள் எங்கே? தூக்கத்தில் நான் யார்? இதுதான் நாம் தொடுக்க வேண்டிய, தொடுத்தால் விடாமல் நம்மைத் துளைக்கிற கேள்வி.

எது நான் என நான் நினைத்தேனோ அதில்

எதுவுமிங்கே நான் இல்லை.

இதுதான் நீங்கள் வரக்கூடிய முடிவு. இந்த முடிவுக்குதான் காணாமல் போய்விடுவோம் என்று அஞ்சுகிறது மனம். எனவே, இப்படி நாம் விசாரிப்போம் என்று மேற்கொள்ளும் முயற்சியை உடனே திசைதிருப்புகிறது, அதற்குத் தடை போடுகிறது, அது நமக்கு ஆபத்தானது என்று எச்சரிக்கிறது. இந்த விசாரணையால் வரும் முடிவே பொய்யென்று ஒரு தத்துவத்தைப் புகட்ட முயல்கிறது. மனம் என்பதை ஒடுக்க முடியாமல் போனாலும் சுய விசாரணையில் ஈர்ப்புகொண்டவன், மனத்தை அலட்சியம் செய்யும் ஆற்றலைப் பெறுகிறான். மனம், மனமாக அதாவது ஓயாமல் சலித்துக்கொண்டே (சஞ்சலமாக) இருந்தாலும் அதனோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் பழக்கத்திலிருந்து மெல்ல மெல்ல விடுபடுகிறான்.

நான் எனும் தேடல்: சிந்திக்க முடியாத, எல்லாம் மறந்துபோகிற ஆழ்ந்த உறக்கத்தில்தான் ‘நான் யார்?’ என்கிற கேள்விக்கான தீர்வும் ஞானக்கோயிலுக்கான திறவுகோலும் இருப்பதை உணர்கிறான். சிதையும் தேகம் நானில்லை; சிதறச் செய்யும் புலன்கள், பொறிகள் இவை நானில்லை; சிறிதும் ஓய்வின்றி ஓடிக்கொண்டே இருக்கும் மனம் நானில்லை; சிந்தித்துத் தவறோ, சரியோ முடிவுகளை எடுக்கும் புத்தியும் நானில்லை என்பதையெல்லாம் மிகச் சுலபமாகவே புரிந்துகொள்கிறான். இருந்தாலும், நான் யார் என்கிற விசாரணை இன்னும் முடியவில்லை என்பதையும் புரிந்துகொள்கிறான்.

கதவு சற்றே திறந்திருக்கிறது

கண்ணும் உள்ளே உற்றுப் பார்க்கிறது

இதற்கும் மேலே என்னதான் என்று

இதயம் பாவம் பரபரக்கிறது.

‘இதற்குப் பிறகு காலை இன்னும் எடுத்து வைப்பதல்ல முன்னேற்றம். இனிமேல் திரும்பாதிருப்பதே முன்னேற்றம்’ என்ற குருநாதரின் வாசகம் இதயக் குகையில் ஒலிக்கிறது.

இந்த நிலையிலிருந்து நாம் தெரிந்துகொள்ளும் எதுவும்இதுவரை நாம் கற்ற, கேட்ட, எழுதிய, பேசிய எதன் விளைவுமில்லை. இன்னும் சொல்லப்போனால் இது சிந்தனையால் வருகிற வெற்றியல்ல. சிந்தனை கனிந்து முடிந்துவிட்ட பிறகு நேர்கின்ற விடிவு!

அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம், சைவம், வைணவம், சமணம், பெளத்தம், பிற நாடுகளிலிருந்து இந்த நாட்டில் நுழைந்த மதங்கள், அவற்றின் போதகர்கள், அவர்களுடைய வாதங்கள், வாசகங்கள், இவை எல்லாவற்றையும் மறுத்தவர்கள் – இவர்களோ இன்னும் பிறரோ எவரும் அங்கே இல்லை. ஆழ்ந்த உறக்கமே இதற்குச் சான்று! அதில் இவை எதுவுமில்லையே!

ஒரு நிலைக்குமேல் காத்திருப்பதே தவம் என்பது புரிந்து, அந்தத் தவமே இயல்பாகிறது. ஏதோ ஒரு விசித்திரக் கணத்தில் இதயத்திற்குள்ளே குரு புன்னகை செய்கிறார். கையை உயர்த்தி மறைகிறார். அங்கே நமக்குப் பரிச்சயமான கடவுளின் வடிவங்கள் அல்லாமல் கூசாத ஒரு பேரொளி தோன்றுகிறது.

கண்களைத் திறந்து பாருங்கள், அந்த ஒளியே உங்கள் முகமாகவும் தெரியக்கூடும்!

வெளி புனைந்த நீலம் வானம்

வேடம் களைந்த விடிவே ஞானம்

(தரிசனம் நிகழும்)

- tavenkateswaran@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in