

முன்னொரு காலத்தில் நினிவே என்கிற பட்டணத்தில் வாழ்ந்த மக்கள் ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடிக்காமல் வாழ்ந்தனர். கடவுள் அவர்களை எச்சரிக்கும் பொருட்டு யோனா என்கிற தன்னுடைய திருப்பணியாளரை அழைத்து, “நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய் நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி” என்றார். அவ்வாறே யோனா புறப்பட்டு ஆண்டவரது கட்டளைப்படி நினிவேவுக்குச் சென்றார். யோனா நகருக்குள் சென்று உரத்த குரலில், “நீங்கள் அனைவரும் மிகவும் தீமையாக, பொல்லாத வழிகளில் நடப்பதால் இன்னும் நாற்பது நாள்களில் நினிவே அழிக்கப்படும்” என்று அறிவித்தார். நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள்.
இந்தச் செய்தி நினிவே அரசனுக்கு எட்டியது. அவன் தன் அரியணையை விட்டிறங்கி, அரச உடையைக் களைந்துவிட்டு, சாக்கு உடை உடுத்திக்கொண்டு சாம்பல் மீது உட்கார்ந்தான். மேலும் அவன் ஓர் ஆணை பிறப்பித்து அதை நினிவே முழுதும் கடைபிடிக்கச் செய்தான். “எந்த மனிதரும் உணவைச் சுவைத்துக்கூடப் பார்க்கக் கூடாது. ஆடு, மாடு முதலிய விலங்குகளும் தீனி தின்னவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது. ஒவ்வொருவரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும். தம் தீய வழிகளையும், தாம் செய்துவரும் கொடுஞ்செயல்களையும் விட்டொழிக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால், கடவுள் ஒருவேளை தம் மனத்தை மாற்றிக் கொள்வார். அவரது கடுஞ்சினமும் தணியும், நமக்கு அழிவு வராது” என்று அறிவித்தான். கடவுள் அவர்கள் செய்தவை அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதைக் கண்டு, தம் மனதை மாற்றிக்கொண்டு, அவர்களுக்குத் தாம் அளிப்பதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை. ஆனால், கடவுளின் இந்த முடிவு யோனாவுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. அவர் கடுஞ்சினம் கொண்டு கடவுளிடம் முறையிட்டார்.
“கடவுளே, நான் என் ஊரை விட்டுப் புறப்படும் முன்பே இதைத்தானே சொன்னேன்? நீர் கனிவு மிக்கவர், இரக்கமுள்ளவர், மிகுந்த பொறுமையும் அளவிலா அன்பும் உள்ள கடவுள் என்பது எனக்குத் தெரியும். அழிக்க நினைப்பீர்... பிறகு, உம் மனத்தை மாற்றிக் கொள்வீர் என்பதும் எனக்கு அப்போதே தெரியும். ஆகையால் ஆண்டவரே, என் உயிரை எடுத்துக்கொள்ளும். வாழ்வதைவிடச் சாவதே எனக்கு நல்லது” என்று வேண்டிக்கொண்டார். அதற்கு ஆண்டவர், “நீ இவ்வாறு கோபப்படுவது ஏன்?” என்று கேட்டு, “என்னுடைய எச்சரிக்கையைக் கேட்டு தங்கள் குற்றங்களுக்காக மனம் வருந்தி தங்களின் தீய வழிகளை மாற்றிக்கொண்ட இந்த நினிவே மாநகரில் லட்சத்து இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிறார்கள்.
வலக்கை எது, இடக்கை எது என்றுகூடச் சொல்லத் தெரியாத இவ்வளவு மக்களும், அவர்களோடு எண்ணிலடங்கா ஆடு மாடுகளும் உள்ள இந்த மாநகருக்கு நான் இரக்கம் காட்டாமல் இருப்பேனா?” என்றார். கடவுளின் கட்டளையைக் கேட்டு, தங்களின் தீய வழிகளை விட்டு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு, புதிய வாழ்க்கையை வாழ விரும்பும் அனைவருக்கும் கடவுள் தன்னுடைய அருளை அளிக்கிறார் என்று திருமறை போதிக்கிறது.
- merchikannan@gmail.com