

அறிவியல் வளர்ந்து நிற்கும் இன்றைய நிலையிலேயே எது நல்ல உணவு என்பதைப் பற்றி விவாதங்கள் நடக்கின்றன. குறிப்பாக, ஹலால் எனும் பதம் பலமுறை சர்ச்சைக்குள்ளாகிறது. ஹலால், ஹராம் ஆகிய சொற்கள் அரபு மொழிக்குச் சொந்தமானவை. ஆனால், அச்சொற்கள் குறிக்கும் பொருள் எல்லா மக்களுக்குமானவை இஸ்லாத்தைப் போல! தூய்மையானவை, அனுமதிக்கப்பட்டவை என்பதே ஹலால் என்கிற சொல்லின் பொருள். அதற்கு எதிர் பதம்தான் ஹராம். அதாவது அனுமதி மறுக்கப்பட்டவை, தூய்மையற்றவை.
எது தூய்மையற்றதோ அது ஆரோக்கியமற்றதுதான். எது தூய்மையானதோ அதுவே ஆரோக்கியமானது. “மனிதர்களே! பூமியிலுள்ள பொருள்களில் அனுமதிக்கப்பட்ட, தூய்மையானவற்றையே உண்ணுங்கள்” என்று திருக்குர் ஆன் வசனம் 2:168இல் அளவற்ற அன்பாளன் இறைவன் மக்களுக்கு அறிவுறுத்துகிறான். பொ.ஆ.(கி.பி.) 600களில் குறிப்பாக அண்ணல் நபி தோன்றிய அரபு மண்ணில் மனிதர்களின் உணவுப் பண்பாடு எவ்வாறு இருந்திருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பேரீச்சம் பழங்கள், பால், இறைச்சி போன்றவை பிரதான உணவாக இருந்தன. இறைச்சி உண்ணுவதற்கு மனம் விரும்பினால் அன்றைய அரேபியர்கள் நடப்பன, ஊர்வன என எதையும் விட்டுவிடாமல் உட்கொண்டிருக்கிறார்கள்.
ஒட்டகத்தின் காலை மட்டும் வெட்டிச் சமைத்துச் சாப்பிட்டிருக்கிறார்கள். வலியால் அந்த ஒட்டகம் துடித்தாலும் அதைப் பற்றிய பிரக்ஞை அவர்களுக்கு இருந்திருக்கவில்லை என்று வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். இவற்றை ஒழுங்குபடுத்தியது இஸ்லாம் எனும் இனிய மார்க்கம். அல்லாஹ் மீது நம்பிக்கையையும் மக்களின் மீது பேரன்பையும் கொண்டிருந்த அண்ணல் நபி, உண்ணும் உணவு எப்படி இருக்க வேண்டும் என்றுகூட மக்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். அதை எப்படி உண்ண வேண்டும் என்றும் கற்றுக் கொடுத்தார். மனிதர்கள், தாங்கள் நேர்வழியில் சம்பாதித்த பொருளை உண்ண வேண்டும் எனத் திருக்குர்ஆன் கூறுகிறது.
ஹலாலும் உணவும்: ஹலால் என்று கேட்டவுடன் நினைவுக்கு வரும் உணவு குறிப்பாக இறைச்சிதான். எப்படி அதைப் புசிக்க வேண்டும் என சில வரையறைகள் உண்டு. எந்த விலங்கின் மற்றும் மனிதனின் அங்கங்களையும் சிதைப்பதை அண்ணல் நபி தடைசெய்திருந்தார். ஸஹீஹூல் புகாரி பாகம் 6-5515 இல், “இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: பிராணிகளின் அங்கங்களைச் சிதைப்பவனை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.” உணவுக்காகவும் ஊட்டச்சத்துக்காகவும் இறைச்சியை நம்பியிருக்கும் ஒரு சமூகத்தில் அதன் நுகர்வை முறைப்படுத்த வேண்டிய அவசியத்தை அண்ணல் உணர்ந்திருந்தார். உணவுக்காகக் கொல்லப் படும் விலங்குகள், குறைந்தபட்ச வலியை உடனடியாக அனுபவித்துவிட்டு உயிரைவிடும் வழிமுறை என்ன என்பதையும் அவர் கற்றுக் கொடுத்தார்.
கோழி, ஆடு, செம்மறி ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவை இஸ்லாத்தில் உணவுக்காகக் கொல்ல அனுமதிக்கப்பட்ட விலங்குகள். இவற்றைக் கொல்லும் நேரத்தில், அவற்றின் கழுத்துப் பகுதி மிக மிகக் கூர்மையான ஆயுதத்தால் ஒரே மூச்சில் சட்டென்று அறுக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யும்போது அந்த விலங்குக்கு ஏற்படும் வலி உணர்வு குறிப்பிட்ட விநாடிகளுக்குத்தான் இருக்கும். விலங்கின் தலையை முழுவதுமாகத் துண்டிக்காமல் உணவுக் குழாய், மூச்சுக் குழாய், கழுத்து நரம்பு ஆகியவற்றை மட்டும் வெட்டும்போது உடலில் உள்ள ரத்தம் முழுவதும் வெளியேறி விடுகிறது. இஸ்லாமிய மார்க்கத்தில் ரத்தம் அசுத்தமானதாகக் கருதப்படுகிறது.
அதை உண்பதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது. ரத்தம் முழுவதும் வெளியேறிய பிறகே வெட்டப்பட்ட விலங்கு தூய்மை செய்யப்பட்டு உணவுக்கு வழங்கப்படுகிறது. இந்த முறையில் உருவாகும் இறைச்சி, தூய்மையானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும் என இன்றைய ஆய்வாளர்களே தெரிவிக்கிறார்கள். உணவுக்காக விலங்குகள் வெட்டப்படும் போது, “பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்” என்று மட்டும் சொல்லப்படுகிறது. இதன் பொருள், ‘அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன். அல்லாஹ் மிகப் பெரியவன்’ என்பதாகும். எந்தச் செயலைத் தொடங்கும் முன்பும் இஸ்லாமியர்கள் இறைவனின் திருப்பெயரால் தொடங்குகிறார்கள். அதைப் போன்றதே இதுவும்.
ஒப்பீட்டளவில் விலங்கின் வலி உணர்வைக் குறைத்து, உணவுக்காகக் காத்திருக்கும் மனிதனை ஒழுங்குமுறைப்படுத்தி இஸ்லாத்தில் ஹலால் சட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. “செத்த பிராணி, ரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயரால் பலியிடப்பட்டவை ஆகியவற்றைத்தான் அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான்” என்கிறது திருக்குர் ஆன். மனிதன் மீது அளவற்ற கருணை கொண்டவன் விலங்கின்மீதும் அதைக் கொண்டிருப்பானில்லையா? இறைச்சியில் ஹலால் முறை இவ்வாறு இருக்க, போதை ஏற்படுத்தாத உணவு வகைகளும் ஹலாலுக்குள் அடங்கும்.
மனித உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தாத உணவு வகைகள் ஹலால் உணவு ஆகும். ஹலாலின் அடிப்படை ஆரோக்கியம். இது மிகவும் எளிமையாகப் புரிந்துகொள்ளக்கூடியது. எல்லாத் தாய்களும் மருத்துவம் படித்திருப்பதில்லை. ஆனால், ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்தான் முதல் மருத்துவர். தன் மக்களுக்கு எது தேவை என்பதை அல்லாஹ்வே அறிந்தவன். வாழ்க்கை நெறியோடு அடிப்படை சுகாதார செய்திகளையும் திருக்குர் ஆனில் பெற முடியும்.
(தொடரும்)
- bharathiannar@gmail.com