

வீடுபேறு ஒன்றையே உயர்ந்த லட்சியமாகக் கொண்ட சைவ சமயத்தவர், எந்நிலையில் நின்றாலும், எக்கோலம் கொண்டாலும், உமையொரு பாகனை முழுமுதற் கடவுளாக வணங்கி வருவர். ஆகம விதிகளின்படி சிவபெருமானைப் போற்றி, மலர்களால் அர்ச்சித்து சிவபூஜை, திருமுறைகள் ஓதி எழில் ஞான பூஜை செய்து, வருடாந்திர பெருவிழாக்கள் உள்ளிட்ட சிவாலயத் திருப்பணிகளை மேற்கொண்டு வருவது வழக்கம். சைவ சமயத்தின் கோட்பாடு, கோயில் அமைப்பு, கோயில் வழிபாடு, மந்திர மொழிகள் ஆகியவற்றை உள்ளடக்கி ஆகமங்கள் இறைவனால் அருளப்பட்டவையாக கருதப்படுகின்றன.
இவை பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள் உண்மையை விளக்குகின்றன. இறைவனின் இயல்புகள், இறைவனை வழிபட்டு முக்தி அடைவதற்கான வழி ஆகியவற்றை ஆகமங்கள் விளக்குகின்றன. சைவ சமயத்தில் சிவபெருமானின் அங்கங்களாகக் கூறப்படும் 28 ஆகமங்கள் உள்ளன. அவையாவன, காமிகம், யோகஜம், சிந்த்யம், காரணம், அஜிதம், தீப்தம், சூஷ்மம், சகஸ்ரம், அம்சுமான், சுப்ரபேதகம், விஜயம், நிஷ்வாசம், ஸ்வாயம்புவம், அனலம், வீரபத்ரம், ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், பிம்பம், புரோத்கீதம், லளிதம், சித்தம், சந்தானம், சர்வோத்தம், பரமேஸ்வரம், கிரணம், வாதுளம் ஆகும். மொத்தம் 1,536 படலங்களைக் கொண்டு 93,261 ஸ்லோகங்களுடன் இந்த ஆகமங்கள் அமைந்துள்ளன.
28 ஆகமங்களில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களில் காமிக ஆகம முறைப்படியே பூஜைகள் நடைபெறுகின்றன. காமிகம் என்றால் ‘இஷ்ட சித்தி’ என்றும், ‘விரும்பியதைப் பெறுதல்’ என்றும் பொருள் கொள்ளப்படும். உலக உயிர்கள் வேண்டியதை வேண்டியபடியே வழங்கும் நோக்கில் சிவபெருமான், காமிக ஆகமத்தை அருளிச் செய்ததாகக் கூறப்படுகிறது. சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய 4 பாதங்களாக காமிக ஆகமம் அருளப்பட்டிருந்தாலும், தற்போது கிரியா பாதம் மட்டுமே கிடைத்துள்ளது. வக்தாரம், பைரவோத்ரம், நாரசிங்கம் (மிருகேந்திரம்) என்கிற 3 உப ஆகமங்களை உடைய கிரியா பாதம், பூர்வ காமிகம், உத்தர காமிகம் என்னும் இரு பாதங்களை உடையது.
பூர்வ காமிகம், ஆகமங்கள் தோன்றிய முறை, கர்ஷணம் (அஸ்தி வாரம் தோண்டுதல் முதல் கிராமம், நகரம், கோயில் முதலானவற்றை நிர்ணயம் செய்யும் முறை), சிவலிங்க பிரதிஷ்டை முறை, விமானம், கோபுரங்கள், ஸ்தாபனங்கள் என 75 படலங்களில் 5,174 ஸ்லோகங்களில் தொகுக்கப்பட்டுள்ளன. உத்தர காமிகம், துவார பூஜைகள், நித்திய நைமித்திக வழிபாடுகள், காமிக வழிபாடுகள், பிராயச்சித்த விதிகள், பரிவார தேவதைகளை ஸ்தாபிக்கும் முறைகளும் 98 படலங்களில் 7,265 ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளன.
ஆகமங்கள் இயற்றப்பட்டுள்ள சம்ஸ்கிருத மொழிக்கு, இரண்டு வகையான எழுத்து முறைகள் (லிபிக்கள்) இருப்பதாகக் கூறப்படுகிறது. அவற்றில் கிரந்தம் என்கிற எழுத்து வகையில் இந்த ஆகமங்கள் இயற்றப்பட்டன. வட இந்தியாவில் தேவநாகரி எழுத்து வகைகள் பிரபலம் அடைந்ததைப் போன்று கிரந்த எழுத்துகள் பிரபலம் அடையவில்லை. ஆகமங்கள் பற்றி உரைக்கும் ஓலைச் சுவடிகளும் சிவாச்சாரிய பெருமக்கள் வசமே இருந்ததால், அதை வெளிக் கொண்டு வரும் பணிகளில் தொய்வு இருந்தது.
தமிழகத்தில் உள்ள பல வேத பாடசாலைகளில் கிரந்த முறையில் இந்த ஆகமங்கள் இருப்பதை அறிந்து, இவற்றை மொழிபெயர்ப்புடன் நூலாக வெளியிட திருநாவுக்கரசு அறக்கட்டளை முடிவு செய்திருக்கிறது. அதன்படி மொத்தமுள்ள ஒரு லட்சம் சுலோகங்களை 1,000 சுலோகத்துக்கு, 500 பக்கம் கொண்ட ஒரு நூல் என்கிற ஒழுங்கில், 100 நூல்களை 5 ஆண்டுகளில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் முயற்சியாக, உரிய சம்ஸ்கிருத அறிஞர்களின் உதவியுடன், காமிக ஆகமத்தின் முதல் பாகம் வெளியிடப்பட்டுள்ளது.
காமிக ஆகமங்களை ஒரே நூலாக வெளியிட முடியாது என்பதால், பூர்வ காமிகம் 5 நூல்களாகவும், உத்தர காமிகம் 6 நூல்களாகவும் வெளிவரவுள்ளன. பூர்விக காமிகத்தில் முதல் பாகம் தந்த்ராவதாரம் 127 நூட்பாக்களையும், மந்த்ரோத்தாரம் 186 நூட்பாக்களையும், ஸ்நானவிதி 165 நூட்பாக்களையும், அர்ச்சனைவிதி 538 நூட்பாக்களையும் (மொத்தம் 1,016 நூட்பாக்கள்) கொண்டுள்ளதாக அமைகிறது. ஆகமங்களை அனைவரும் அறிந்து புரிந்து போற்ற வேண்டும் என்கிற நோக்கில், இவை நாகரி, கிரந்தம், ஆங்கிலம், தமிழ் ஆகிய நான்கு மொழி எழுத்துகளில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஓலைச்சுவடிகளில் இருந்தும், பழைய நூல்களில் இருந்தும், மூலங்களைத் திரட்டி, மொழி பெயர்ப்புடன் ஒவ்வொரு ஆகமமாக வெளியிடப்படுவது பாராட்டுக்குரியது.
இந்த நூல் வேத பாட சாலைகளுக்கும், நூலகங்களுக்கும், அடியார் பெருமக்களுக்கும், இலவசமாக வழங்கப்பட உள்ளது. கணினியில் மென்பொருள் தனியாக தயாரிக்கப்பட்டு, saivaagamas.comஎன்ற வலைதளத்தில் இந்நூலின் அனைத்து பக்கங்களும் மொழி வாரியாக படலம் வாரியாக சேமித்து வைக்கப்பட்டுள்ளன. உள்ளே சென்று அனைத்து சுலோகங்களையும், எந்த மொழியில் வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் பாராயணம் செய்யலாம். நகல் எடுக்கலாம். மற்ற மொழியில் மொழிபெயர்க்கலாம். இந்த நூலைப் பின்பற்றி, அகப்புறப் பூசனைகள் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சைவாகமப் பெருமழைத்
தொடர் நூல்கள்
காமிகாகமம் - முதல் பூர்வ பாகம்
பதிப்பகம்: திருநாவுக்கரசு அறக்கட்டளை,
க.க.எண்: 334, பொள்ளாச்சி
முக்கிய சாலை, மலுமிச்சம்பட்டி,
கோயம்புத்தூர் - 641050.
மின்னஞ்சல்: saivaagamas@gmail.com
அலைபேசி எண்: 9150041888.