திருவிவிலிய கதை: தண்ணீரை திராட்சை பழரசமாக மாற்றிய யேசு
யேசு மக்களுக்கு போதனை செய்ய ஆரம்பித்திருந்த நாள்களில் கலிலேயா என்ற பகுதியில் இருந்த கானாவூரில் திருமணம் ஒன்று நடைபெற்றது. யேசுவின் தாயாரும் அந்தத் திருமண வீட்டில் இருந்தார். யேசுவும் அவருடைய சீடர்களும் அத்திருமணத்திற்கு அழைக்கப் பெற்றிருந்தனர். திருமண வீடுகளில் உயர்ரக திராட்சை ரசம் பரிமாறுவது யூதர்களின் வழக்கம். திருமண வீட்டில் திராட்சை ரசம் குறைவுபட்டாலோ அல்லது அனைவருக்கும் கிடைக்காமல் தீர்ந்து போனாலோ அது திருமண வீட்டாருக்கு மிகப்பெரிய அவமானமாக கருதப்படும்.
அன்றைய திருமண விழாவில் திராட்சை ரசம் எதிர்பாராத விதமாக தீர்ந்து போனது. யேசுவின் தாய் யேசுவிடம் வந்து, “திராட்சை ரசம் தீர்ந்துவிட்டது” என்றார். யேசுவோ தன் தாயாரிடம், “அம்மா, அதற்கு நாம் என்ன செய்யமுடியும்? அற்புதம் செய்ய நேரம் இன்னும் எனக்கு வரவில்லையே” என்றார். ஆனாலும், யேசு நிச்சயம் ஓர் அற்புதத்தைச் செய்வார் என்று நம்பிய யேசுவின் தாய், பணியாளரிடம் யேசுவைக் காட்டி, “அவர் உங்களுக்குச் சொல்வதை எல்லாம் செய்யுங்கள்” என்றார்.
அந்த நாள்களில் யேசு இன்னும் வெளிப்படையாக எந்த ஒரு அற்புதத்தையும் செய்திருக்கவில்லை. ஆகவே யேசு யார் என்றே பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. ஒவ்வொரு கல்தொட்டியும் இரண்டு அல்லது மூன்று குடம் தண்ணீர்கொள்ளும். யேசு பணியாளர்களிடம், “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று கூறினார். பணியாளர்கள் அந்த ஆறு கல்தொட்டி களையும் தண்ணீரால் நிரப்பினார்கள்.
அதன்பின் யேசு அந்தப் பணியாளர் களிடம், “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்” என்றார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். பந்தி மேற்பார்வையாளர் திராட்சை ரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார். இதுவரை அவர்கள் பந்தியில் பரிமாறிக் கொண்டிருந்த திராட்சை ரசத்தைவிட இது பல மடங்கு சுவை மிகுந்ததாக இருந்தது. ஆனாலும் `அந்த ரசம் எங்கிருந்து வந்தது?' என்று அவருக்குத் தெரியவில்லை. தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கு மட்டுமே அது தெரிந்திருந்தது.
ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, “எல்லாரும் நல்ல திராட்சை ரசத்தை முதலில் பரிமாறுவார்கள். யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த ரசத்தைப் பரிமாறுவர். நீங்களோ நல்ல ரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார். இதுவே யேசு தன்னுடைய வாழ்நாளில் செய்த முதல் அற்புதம் ஆகும். திருமண விருந்திற்கு வந்திருந்த யாவரும் மிகவும் விருப்பமுடன் அந்த திராட்சை ரசத்தை வாங்கிக் குடித்தனர். பின்னர், இது யேசு செய்த அற்புதத்தினால் வந்த திராட்சை ரசம் என்பதை அறிந்த மக்கள் அவரை பின்தொடர ஆரம்பித்தனர். இதனால் அவரது புகழ் எங்கும் பரவியது. தான் இருந்த இடங்களில் மக்களின் தேவையை அறிந்து தாமாகவே முன்வந்து பல அற்புதங்களைச் செய்து மக்களின் குறைகளை நீக்கினார் யேசுநாதர். இன்றும் தன்னைக் கூப்பிடும் யாவருக்கும் அவர் தமது அருளை அளிக்கிறார்!
- merchikannan@gmail.com
