விஷ்ணுபிரியாவான பிருந்தா!

விஷ்ணுபிரியாவான பிருந்தா!
Updated on
3 min read

குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தின் வடகிழக்கில் மெஸ்வோ நதிக்கரையில் ஷாமலாஜி கோயில் உள்ளது. 1,500 ஆண்டு பழைய கோயில் எனக் கூறப்பட்டாலும், நமக்குத் தெரிந்த தகவல்களின்படி கோயில் நிர்மாணிக்கப்பட்டது 15, 16ஆம் நூற்றாண்டில்தான் எனக் கருதப்படுகின்றது. இதனை ஒட்டி சரணாலயம் உள்ளது. அதனுள் 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அற்புதமான பள்ளிகொண்ட விஷ்ணு சிலை உள்ளது. சுற்றிக் கோட்டம் உள்ளது. சோசாலை உள்ளது. கோயிலைச் சுற்றி அடர்ந்த வனங்களைக் கொண்ட மலைகள் உள்ளன.

உயரத்தில் சமாதானம்: கோயில் மீது வெள்ளைக் கொடி பறப்பதால் இதனை `தஜாவலே' எனவும் அழைக்கின்றனர். முழுவதும் வெள்ளை, சிவப்பு காரைக் கல் மற்றும் செங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. சுற்றுச்சுவர் கட்டப் பட்டுள்ளது. கோயிலின் உயரம் 320 அடி. பிரம்மாண்டமான இந்தக் கோயிலின் பின்னணியில் ஒரு கதை இருக்கிறது. இங்கு ஒரு சமயம், விஸ்வகர்மா ஓர் இரவுக்குள் கோயிலை கட்டிமுடித்து அதனை தேவ உலகிற்கு எடுத்துச் செல்ல விரும்பினாராம். ஆனால் கட்டிமுடித்த போது, விடிந்துவிட்டதாம். இங்கேயே விட்டுவிட்டுச் சென்று விட்டாராம்! அதனால்தான் இந்தக் கோயில் இவ்வளவு அழகு என்கின்றனர் அந்தப் பகுதியில் வாழும் மக்கள்.

புழங்கும் புராணக் கதைகள்: இந்தக் கோயில் சார்ந்து மேலும் இரண்டு கதைகள் சொல்லப்படுகின்றன. ஒரு சமயம், பிரம்மா புனித தீர்த்தம் கண்டுபிடிக்க பூமிக்கு வந்தார். பல இடங்களைப் பார்த்துவிட்டு ஷாமலாஜி வந்தார். அங்கேயே பல காலம் தங்கி தவம் செய்தார். அவர் தவத்தை மெச்சிய சிவன் அவரிடம் ஒரு யாகம் செய்யப் பணித்தார். பிரம்மாவும் யாகத்தைச் செய்தார். அதில் விஷ்ணு தோன்றினார். உடனே பிரம்மா, "தாங்கள் இங்கேயே தங்கி சுபிட்சம் தரவேண்டும்" என வேண்டினார். அதற்கு விஷ்ணுவும் சம்மதித்தார்.

இந்தப் பகுதியிலிருக்கும் பில்ஸ் மலைப்பகுதியில் வாழ்ந்த பழங்குடியினர் இருந்தனர். அதில் ஒருவர் நிலத்தை உழுதபோது, சிலை ஒன்று கிடைத்தது. அதனை அங்கேயே வைத்து அவர் தினமும் பூஜை செய்து வந்தார். அந்த ஆண்டில் அவருக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது. இதனை அறிந்த வியாபாரி ஒருவர், தன் செலவில் கோயில் எழுப்பினார். கிடைத்த சிலை, கறுப்பு கிருஷ்ணரின் சிலை. அதாவது, கறுப்பு சிலை தெய்வம். அதுதான் ஷாமலாஜி என அழைக்கப்பட்டது. பிறகு இந்த இடத்தை ஆண்ட இதார் மன்னர்கள் பல தடவை கோயிலை புதுப்பித்துக் கட்டினர். இனி கோயிலுக்குள் செல்வோம்.

முக்கிய வைணவ ஆலயம்: இரண்டு அடுக்கு கோயில். அதற்கு மேலே ஏராளமான தாழிகள். அதற்கும் மேலே பிரமிட் வடிவில் உயர்ந்து நிற்கும் கோபுரம். அதற்கும் மேலே வெள்ளைக் கொடி பறக்கிறது. முதல் அடுக்கில் சுற்றி சிங்கம். யானைகள், குதிரைகள், விலங்குகள், மனிதர்கள், வில், அம்புடன் மனிதர்கள் எனப் பலவற்றையும் அழகிய சிற்பங்களாக வடித்துள்ளனர். வாசலில் கான்கிரீட்டால் ஆன இரண்டு யானைகள் நம்மை வரவேற்கின்றன. இவற்றின் அழகுக்காகவே இரவில் வண்ண ஒளி விளக்குகளை ஒளிரவிடுகின்றனர். இரண்டு அடுக்குகளையும் சுற்றித் தூண்கள் தாங்குகின்றன. முதல் அடுக்கில் ஜன்னல்கள் அடைக்கப் பட்டுள்ளன. இரண்டாவது அடுக்கில் ஜன்னல்கள் திறந்த வண்ணம் இருக்கின்றன.

வைஷ்ணவர்கள் விஷ்ணுவின் 144 ஸ்தலங்களில் இதை மிக முக்கியமான ஒன்றாகக் கருதுகின்றனர். சுமார் 20 படிகள் ஏறவேண்டும். கோயிலைச் சுற்றிலும் மாடங்கள் அமைத்து அதில் சிறிய வடிவில் அழகழகான சிற்பங்களை வடித்திருக்கின்றனர். அதேபோல், நடு மாடத்தைச் சுற்றி விநாயகர் நிறைந்திருக்கிறார். கோயிலின் கருவறையில் கிருஷ்ணன் கையில் குச்சியும் வாயில் புல்லாங்குழலும் வைத்துள்ளார். சின்ன கிருஷ்ணர். தலையில் கிரீடம் கம்பீரமாக உள்ளது. தினமும் புது ஆடை, நகைகள் அணிவிக்கின்றனர். இந்தக் கோயிலின் மற்றொரு சிறப்பு, இங்கு பசுமாட்டுடன் கூடிய மேய்ப்பராக கிருஷ்ணன் இருக்கிறார். அவரையும் வழிபடுகிறார்கள். வசுதேவர், கணேஷ் ஆகியோரும் ஆலயத்தினுள் இருக்கின்றனர்.

தீபாவளிக்குப் பின் துளசி திருமணம்! - இங்கு துளசி திருமணம் விசேஷம். பத்ம புராணம் பிருந்தாவின் கதையைக் கூறுகிறது. பிருந்தா, சிறந்த விஷ்ணு பக்தை. சலந்தர் என்னும் அசுரனை அவள் மணந்து கொள்கிறாள். சலந்தர் நாளடை வில் அனைவரையும் துன்புறுத்துகிறான். சிவன் முதலானவர்கள் சண்டையிட்டும் அவனை வெல்ல முடியவில்லை. காரணம், பிருந்தாவின் ஆன்மிக பலம். அதுவே அவனை கவசம் போல் காக்கிறது. ஆக, தேவ, அசுர போரை முடிவுக்குக் கொண்டுவர, விஷ்ணுவை நாடுகின்றனர். அவரும் சம்மதிக்கிறார். சிவனுக்கும் சலந்தருக்கும் போர் நடக்கிறது. அந்த நேரத்தில், விஷ்ணு, சலந்தராக மாறி பிருந்தாவிடம் வருகிறார். அவரை தன்னுடைய கணவர் என நம்பி, அவரின் கால்களில் பிருந்தா விழுந்து நமஸ்காரம் செய்கிறாள்.

இதனால் பதியின் மீதான அவளுடைய பலம் குறைகிறது. இதனால் சலந்தர் பாதிக்கப்படுகிறான். இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி சிவன், சலந்தரின் தலையை வெட்டுகிறார். சலந்தரின் தலை பிருந்தாவின் அருகே வந்து விழுகிறது. அதனைப் பார்த்து திடுக்கிட்ட பிருந்தா, வந்திருந்தது தன் கணவரல்ல; விஷ்ணுதான் என்று உணர்கிறாள். உடனே விஷ்ணுவை சாளக்கிராமமாக போகக் கடவது என்று சபித்துவிடுகிறாள். மேலும், என் கணவனின் மரணத்துக் குக் காரணமாகிவிட்டாய்... என்னுடைய அடுத்த பிறவியில் நீயே என்னுடைய கணவனாக வேண்டும் என்னும் வேண்டுதலையும் விஷ்ணுவிடம் பிருந்தா வைக்கிறாள். அதற்கு விஷ்ணுவும் சம்மதிக்க, அந்தப் பிறவியை அப்போதே முடித்துக் கொள்கிறாள் பிருந்தா.

பிரபோதினி ஏகாதசி சிறப்பு: விஷ்ணுவும் பிருந்தாவின் அடுத்த பிறப்பான துளசியை தன் மனைவி யாக ஏற்கிறார். இதனால்தான் விஷ்ணு கோயில்களில் துளசி திருமணம் பிரம்மாண்டமாகக் கொண்டாடப் படுகிறது. கோயில்களில் கிருஷ்ணனுக் கும் துளசிக்கும் திருமணம் செய்து வைக்கப்படுகின்றது. பொதுவாக இந்தத் திருமணம் கார்த்திகை பூர்ணிமா அன்று நடத்தப்படுகின்றது. சில கோயில் களில் மூன்று நாள்களுக்கு விழாவும் பிரம்மாண்டமாக எடுக்கப்படுகின்றது. தீபாவளிக்குப் பிறகு பதினைந்து நாளில் துளசி திருமணம் நடக்கிறது.

மிகச் சரியாக பிரபோதினி ஏகாதசி அன்று நடக்கிறது. பெரிய கோயில்களில் 56 வகையான பண்டங்கள் வைத்து, திருக்கல்யாணம் முடிந்து ஆரத்திக்குப் பின் அவற்றைப் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கின்றனர். சில கோயில்களில் சாளக்கிராமத்துக்கும் துளசிக்கும் திருமணம் நடத்தப்படு கின்றது. கிருஷ்ணன் பொம்மைக்கும் துளசிக்கும் சில கோயில்களில் திருமணம் நடத்தப்படுகின்றது. துளசி, நெல்லிக்காய் செடியை இணைத்தும் திருமணம் நடக்கிறது. துளசிக்கு இதனால் விஷ்ணுபிரியா என்கிற செல்லப் பெயர் உண்டு.

துளசியை, லட்சுமியின் வடிவமாக வைஷ்ணவர்கள் ஏற்கிறார்கள். பெண் குழந்தை இல்லாதவர்கள் துளசியைப் பெண்ணாக ஏற்று, துளசிக்கு திருமணம் செய்துவைக்கிறார்கள். திருமணமானவர்கள் அமைதியான வாழ்க்கைக்கு துளசி, விஷ்ணுவை வழிபடுகிறார்கள். இந்தக் கோயிலுக்கு நவம்பர் முதல் பிப்ரவரி வரை பக்தர்கள் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து தரிசனம் செய்வதற்கு வருகின்றனர். மாதம்தோறும் பௌர்ணமி நாளில் இங்கு சிறப்பான ஆராதனைகள் நடைபெறுகின்றன.

- radha_krishnan36@yahoo.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in