

ஆணவம், கன்மம், மாயை என்கிற முக்குணங்களின் வசம் மனிதன் சிக்கிக்கொள்ளும்போது மனிதன், அசுரனாகிவிடுகிறான். இந்த மூன்று குணங்களை இறைவன் அழித்து குருவாய் வந்து ஆட்கொள்வதுதான் கந்தபுராண தத்துவம். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்தவர் முருகப்பெருமான். முருகப்பெருமான் அவதார நோக்கமே நமக்குள் இருக்கும் அசுரக் குணத்தை அழித்து குருவாக வந்து ஆட்கொள்வதுதான். இதுதான் கந்த சஷ்டி திருவிழா. ஐப்பசி மாத அமாவாசைக்கு அடுத்த திதியான பிரதமை திதியில் தொடங்கி சஷ்டி திதியில் சூரபத்மனை சம்ஹாரம் செய்வதுதான் கந்த சஷ்டி திருவிழா.
பார்வதி தேவியின் தந்தையான தட்சன், அடுத்த பிறவியில் சூரபத்மனாக அவதரித்தார். சிவபெருமானை நோக்கித் தவமிருந்து கேட்ட வரத்தைப் பெற்ற சூரபத்மன், தேவர்களை அழிக்கத் தொடங்கினார். சூரபத்மனின் சகோதரர்கள் சிங்க முகன், தாரகாசூரன். இந்த மூன்று பேரையும் வதம் செய்வதே முருகப்பெருமானின் அவதார நோக்கம். இவர்கள் மூன்று பேரும்தான் ஆணவம், கன்மம், மாயை. சூரபத்மனின் தம்பி தாரகாசூரன் ஒற்றைக் காலில் சூரியனை நோக்கி நூறு ஆண்டுகள் தவம் புரிந்து, ஈசனிடம் வரம் பெற்றவர். தாரகாசூரன் என்றால் ‘முக்தியின் அரக்கன்’ என்று பொருள். சூரபத்மனை வதம் செய்ய அம்மை அப்பனிடம் வேல் வாங்கிய முருகப்பெருமான் வீரமகேந்திரபுரியை நோக்கிச் சென்றார்.
செல்லும் வழியில் விந்திய மலை அடிவாரத்தில் மாயாபுரி என்னும் நகரத்தை ஆண்ட சூரபத்மனின் தம்பி தாரகாசூரன் பெரிய மலையாக உருமாறி அவரை வழிமறித்தார். முருகப்பெருமானுடன் வீரபாகு தலைமையிலான வீரர்கள் போர் புரிந்தனர். ஆனால், தன் தவ வலிமையால் வீரபாகு உள்ளிட்ட முருகப்பெருமானின் சேனைகளை தாரகாசூரன் சிறைப்பிடித்தார். இதையறிந்த முருகப்பெருமான் விந்தியமலை அடிவாரத்துக்கு வந்தார். கிரௌஞ்சம் என்கிற பெரு மலையாக இருந்த தாரகாசூரனைத் தன் கூர்வேலால் பிளந்து தாரகாசூரனை வதம் செய்து, அவரை ஆட்கொண்டார். வளர்பிறை பஞ்சமி திதியில் தாரகாசூரன் வதம் செய்யப்பட்டார். இந்நிகழ்வு தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் மட்டும்தான் நடக்கிறது. உற்சவர் கழுகாசல மூர்த்தி சப்பரத்தில் எழுந்தருளி வந்து, தாரகாசூரனை வதம் செய்வார்.
குடவரைக் கோயிலான கழுகுமலை கோயிலில் மூலவர் கழுகாசலமூர்த்தி தென்மேற்கு முகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தை ‘ராஜயோக ஸ்தலம்’ என்று கந்தபுராணம் அருளிய கச்சியப்ப சிவாச்சாரியாரால் போற்றப்பட்டுள்ளது. சித்தர்களுக்கு எல்லாம் சித்தநாதனாக முருகப்பெருமான் உள்ளார். அதனால், பொதிகை மலையில் அமர்ந்து அருள்பாலிக்கும் அகத்திய பெருமானுக்குக் காட்சி கொடுப்பதற்காக கழுகுமலையில் தென்மேற்கு திசையை நோக்கி முருகப்பெருமான், வள்ளி தெய்வானை அம்பாளுடன் அமர்ந்து கழுகாசலமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இங்கு அம்பாள்கள் இருவரும் சுவாமியை நோக்கி அமர்ந்திருப்பர். அருணகிரிநாதர் தனது திருப்புகழில் கழுகுமலை முருகன் குறித்துப் பாடியுள்ளார். சஷ்டி திருநாளின் ஆறு நாள்களும் விரதமிருந்து கந்த சஷ்டி கவசத்தைப் படித்துவருவோருக்கு, அவர்களது மனதில் உள்ள ஆணவம், கன்மம், மாயை என்னும் முக்குணங்கள் அழிந்து, முருகப்பெருமானின் பரிபூரண அருள் கிட்டும். இந்த விரதத்தில் நமக்குள் உள்ள நீசன் வெளியேறி, இறைவன் முருகப்பெருமான் ஈசன் வடிவில் குருவாக அருள்பாலிப்பார்.
- gomathivinayagam.s@hindutamil.co.in