

’இருக்கிறேன்’ என்பதற்கு நிரூபணம் தேவையில்லை
இதைத்தவிர வேறெதற்கும் விளக்கங்கள் போதவில்லை
இருப்பென்னும் மேடைமீது விருப்பொன்றின் நாட்டியமாய்
இரவின்றிப் பகலுமின்றி இவ்வாழ்க்கை நடக்கிறது!
அமைதி என்பது மனிதனுடைய அடிப்படை இயல்பு என்றாய். ஆனால், சஞ்சலம் என்பதல்லவா மனத்தினுடைய இயல்பாக இருக்கிறது? இந்த முரண்பாடு நியாயமாகத் தெரியவில்லையே? உண்மைதான். இந்தக் கேள்விக்குப் பின்னே இருக்கும் ஆதங்கமும் ஆத்திரமும் புரியத்தான் செய்கிறது. விளங்கிக்கொள்வோம் வாருங்கள்: அமைதி என்பது ஆன்மாவின் இயல்பு. சஞ்சலம் என்பது மனத்தின் இயல்பு. ஆன்மா என்பது அசையாதது. மனம் என்பதோ அங்கும் இங்கும் அசைந்துகொண்டே இருப்பது. அசையாமல் கிடக்கிறது வானம். அனைத்துவிதமான அசைவுகளும் ஆட்டங்களும் அதில்தான் நடக்கின்றன. ஆனால், ஒருபோதும் வானம் பாதிப்பு அடைவதில்லை. ஒருபோதும் இந்தச் சத்தங்களும் அசைவுகளும் நிற்பதுமில்லை.
முரண்பாடும் வேறுபாடும்: இது முரண்பாடாக இருக்கிறதா இல்லை இயல்பாகத் தோன்றுகிறதா? இருப்பாய் இருப்பது ஆன்மா. இல்லாமல் தீர்வது மனம். முரண்பாடு என்பது contradiction. ஆனால், contrast என்பது வேறுபாடு அல்லது வேறுபடுத்திக் காட்டும் பண்பு. உடையில் இருவேறு நிறங்கள் முரண்பாடல்ல, வேறுபட்ட பண்பு. ஆன்மாவை மனம் அறிய வில்லை. அறிந்தால் மனம் இருக்க வாய்ப்புமில்லை. ஆன்மா என்பது நாம். மனம் என்பது நமது. வள்ளுவர், அறிவையே கருவி என்றதை நினைவில் கொள் வோமாக. கருவியால் ஒருபோதும் கர்த்தாவை அறிய முடியாது. எழுத்தாளன் எழுதுகோலை சரி, இப்போது கணினி - அறிவான். கணினியா எழுத்தாளனை அறியும்? கணினிஇன்றியும் எழுத்தாளன் இருப்பதைப் போல மனம் என்பதொன்று இல்லாமலேயே ஒரு ஞானி, மனித உருவில் ஒரு சாதாரணனாக இயங்க முடியும்.
ஆன்மாவை ஒரு மலராகக் கருதினால், புத்தி - மனம் - உடம்பு இவையெல்லாம் இதழ்கள். இவற்றில் எது மலர்? எதுதான் மலரில்லை? தனித்தனியே இவற்றில் எதுவும் மலரில்லை. ஓரிதழ் மனம், ஓரிதழ் புத்தி, ஓரிதழ் உடம்பு. ஆனால், இவ்விதம் பகுக்கும்படியாக ஆன்மா இல்லையே! பகுத்தோ பிரித்தோ வரம்பு கட்டியோ தன்மைகள் கற்பிக்கக்கூடிய ஒன்றாகவோ ஆன்மா இல்லையே! நட்சத்திர மண்டலங்களையும் கோள்களையும் குறிக்க முடிகிறது. அவற்றுக்குப் பெயர்வைக்க முடிகிறது. அவை இருக்கும் திசையை நிச்சயிக்க முடிகிறது. ஆனால், வானத்துக்கு என்ன பெயர்? அதிலுள்ள பொருள்களை நீக்கினாலும் நீக்காமல் பார்த்தாலும் இருப்பது வெட்டவெளிதானே!
ஆன்மாவும் சித்தமும்: சரி, இதில் கடவுள் எங்கே? ஆன்மா, தானாய் இருக்கிறது. மனம் தன்னை அறியாது அலைகிறது. இடையே சித்தம் என்றவொன்று தன்னுணர்வோடு இருக்கிறது. ஆன்மாவும் சித்தமும் வெவ்வேறல்ல. அவை, விளக்கும் வெளிச்சமும் போல இரண்டு போலத் தோன்றும் ஒன்று. நாம் காணும் எல்லாக் காட்சிகளும் அறியும் அறிவுகளும் மனதில் அல்ல, சித்தத்தில் நிகழ்பவைதான். தன்னில் தானாய் இருப்பது ஆன்மா. அடையாளம் எதுவுமில்லாத தன்னுணர்வோடு இருப்பது சித்தம். ஏனென்றால் சித்தம், தன்னை இது, அதுவென்று கருதிக் கொள்வதில்லை. மனமோ எப்போதும் தன்னையும், பிறரையும், பிறவற்றையும் இது - அது - இவை - அவை என்று எத்தனையோ விதமாகக் கருதிக்கொள்கிறது. நம்முடைய அனைத்துவிதமான இன்பங்களுக்கும் துன்பங்களுக்கும் இதுதான் காரணம். படைப்பில் தனியாக இன்பமோ துன்பமோ கிடையாது.
இவ்விதம் அடையாளமயமாக இருப்பது மனம். அடையாளங்கள் எதையும் சுமக்காமலேயே ஒரே ரீதியான உணர்வோடு இருக்க முடியும் என்று காட்டுவது சித்தம். அப்படி இருப்பதே ஆன்மா. அடையாளக் களேபரத்திலிருந்து அடையாளமற்ற அமைதியை நாம் அடைவதற்கே நமக்குக் கடவுள் தேவை. மனத்தில் எல்லாம் எண்ணங்களாக எழுகின்றன. அவற்றின் தன்மை, நினைப்பின் தீவிரம் இவற்றைப் பொறுத்து அவை சித்தத்துள் நுழைகின்றன. கவலைப்படுவதில் தீவிரம் காட்டினால், சித்தம் கவலை மயமாகிறது. கடவுள் நினைப்பு தீவிரமானால் சித்தமே கடவுளாகிறது. வெளிச்சத்தின் முன்னே எதைக் காட்டினாலும் அது விளக்கமாகத் தெரிகிறதல்லவா!
கடவுள் நினைப்பு என்பது அன்பு, அறிவு, அமைதி போன்ற தன்மைகளின் கூட்டு. அந்த நல்ல தன்மைகள் சித்தத்தில் செழித்து வளரும். அவையே கனிந்து கனிந்து, அந்த அடையாளங்களும் தீரும். அப்போது மிஞ்சி இருப்பது எதுவோ அதுவே ஆன்மா. அதுவே சத்தியம். அதுவரை கடவுள். “மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு" என்றார் கவியரசர். மனம் கொடுக்கப்பட்டிருப்பது நல்லவற்றை நினைப்பதற்கு. எல்லா நன்மைகளின் தலைமையாகத்தான் நாம் கடவுளை நினைக்கிறோம். மனமின்றி நினைக்க முடியாது. சித்தம் கொடுக்கப்பட்டிருப்பது அதில் முழுவதும் அந்தக் கடவுளைப் பதியன் போட்டு வளர்ப்பதற்கே. “சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே” என்று கண்ணதாசனின் சுந்தரனார் பாடுவார்.
ஆன்மாவில் உருவம், வடிவம், தொழுதல், சிந்தித்தல் என்று எதுவும் கிடையாது. அவற்றுக்கும் ஆன்மாவுக்கும் முரண்பாடு, பூசல் இவை எதுவும் கிடையாது. ஆன்மாவரை செல்ல, அவையனைத்தும் தேவை. இது முரண்பாடா (Contradiction) வேறுபடும் பண்பா (Contrast) சொல்லுங்கள்! வெவ்வேறு நிறங்கள் இல்லாத உலகத்தில் வாழ முடியுமோ!
(தரிசனம் நிகழும்)
- tavenkateswaran@gmail.com