

உலக அளவில் தோன்றிய மதங்களில் இளைய மதமாக இஸ்லாம் கருதப்படுகிறது. தற்போது உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 190 கோடி மக்கள் இஸ்லாமியர்கள். கிறித்துவ மதத்திற்கு அடுத்தபடியாக உலக மக்கள் பின்பற்றும் இரண்டாவது பெரிய மதம் இஸ்லாம். எதிர்காலத்தில் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மக்கள் இஸ்லாத்தை நோக்கி ஈர்க்கப்படுவதற்குக் காரணங்கள் பல உண்டு. ஏகத்துவம், அண்ணல் நபிகள், திருக்குர்ஆன், ஈகை, தியாகம், நீதி, சகோதரத்துவம், சமத்துவம், ஒழுக்கம், எளிமை போன்ற ஏற்றத்தாழ்வற்ற மக்கள் அனைவருக்குமான வாழ்வியல் நெறிகள்தாம் அவை. 1,400 ஆண்டுகளுக்கு முன்பு மிகத்துல்லியமானச் சான்றுகளுடன் ஆவணப்படுத்தப்பட்ட மானுட வாழ்வியல்நெறி இன்றளவும் மக்களை அறியாமை இருளில் இருந்து மீட்கும் சூரியனாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. ஏக இறைவனுக்குக் கீழ் பேதமற்ற ஒரே குலமாக மனிதன் வாழ இஸ்லாம் கற்றுக்கொடுக்கிறது.
23 ஆண்டுகளில் இறைத்தூதர் இயம்பியவை: வேத வெளிப்பாடு நிகழ்ந்த பின்னர் 13 ஆண்டுகள் மெக்காவிலும் 10 ஆண்டுகள் மதீனாவிலும் ஏக இறை மறுப்பாளர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியும், தாக்குதலை எதிர்த்துப் போரிட்டு வென்றும் இஸ்லாத்தை வளர்த்தார் அண்ணல். மெக்காவில் குறைஷிகளின் தாக்குதல் அதிகரித்து வந்தவுடன் அண்ணலின் அறிவுறுத்தலின்படி இஸ்லாமியர் உலகின் பல பகுதிகளுக்கு ஹிஜ்ரத் சென்றார்கள். தாங்கள் ஏற்றுக்கொண்ட கொள்கையைக் காப்பாற்றிக்கொள்ள பிறந்த நாட்டையும் இன்னபிற உடைமைகளையும் துறந்து வேறு இடத்தில் வாழச் செல்வதே ஹிஜ்ரத். ஏக இறை மறுப்பாளர்களுடன் போரிட்டுத் தாம் வென்ற நாடுகளை இஸ்லாமியருக்கான வாழ்விடமாக அமைத்துக்கொடுத்தார் அண்ணல். ஹிஜ்ரத் சென்றவர்களில் பலர் மீண்டும் தங்கள் பிறப்பிடத்திற்கே வந்து வாழ்ந்தனர். பலர் ஹிஜ்ரத் சென்ற நாடுகளிலேயே இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்து அண்ணலின் வழியில் வாழ்ந்தனர்.
ஒருபுறம் பகை, போர், வேத வெளிப்பாடு எனப் பல்வேறு நிலைகளுக்கு மத்தியில் இறைவனின் திருப்பெயரால் மக்களுக்கு ஒழுக்க நெறிகளைப் பயிற்றுவித்தார் அண்ணல். தன் சொந்த இனத்தாலேயே வெறுக்கப்பட்டு, போர்க்களத்தில் ரத்தமும் சதையுமாக நின்று ரத்த காயங்களுக்கு ஆளாகி இறைவனின் திருவசனங்களை மக்களிடையே மனம் தளராமல், அன்பான முறையில் பரப்பியவர் இறைத்தூதர் மொஹம்மத். ஏன் உலக அறிஞர்களும் மக்களும் அவரை உன்னத இடத்தில் வைத்துள்ளார்கள் என்பதற்கு இந்தக் காரணமே போதுமானது. மக்கீ சகாப்தம், மதனீ சகாப்தம் எனும் இரண்டு பிரிவாக வரலாற்றாய்வாளர்கள் அண்ணலின் இறைப்பணியின் காலத்தைக் குறிப்பிடுகிறார்கள்.
மக்கீ சகாப்தத்தில் இறைத்தூதர் அண்ணல் நபிக்கு இறைவனிடம் இருந்து வந்த வேத வெளிப்பாடுகள் பெரும்பாலும் ஏகத்துவம், மறுமை, நற்பண்புகளுக்கான அறிவுரைகள், அவற்றைச் செய்யத் தவறும்பட்சத்தில் மக்கள் அடையப்போகும் இன்னல்கள் பற்றிய எச்சரிக்கைகளாக இருந்தன. இவற்றை மக்களுக்கு அண்ணல் அறவழியில் போதித்தார். மதனீ சகாப்தத்தில், கடுமையான போர்ச்சூழலிலும் குடும்ப அமைப்பு, மணமுறை, சொத்துப்பங்கீடு, பெண்களுக்கான உரிமைகள், ஆதரவற்றோருக்கான உரிமைகள், பொருளாதார ரீதியிலான கொடுக்கல் வாங்கல், வட்டி வாங்குவதைத் தடை செய்தல், போதைப் பொருள்களைத் தவிர்த்தல், இறந்த விலங்குகளை உண்ணாதிருத்தல் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்கநெறிகள் மக்களுக்கு திருக்குர்ஆன் வழியாக அருளப்பட்டது.
இதன் மூலமாக இஸ்லாமிய சமூகம் ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாக உருவானது. ’திருக்குர்ஆனின் நான்காவது அத்தியாயம், ’அன்னிஸா’வும் ஐந்தாவது அத்தியாயம் ’அல்மாயிதா’வும் இந்தச் சூழலில் இறங்கின. இந்த அத்தியாயங்கள், இஸ்லாமியச் சமுதாயத்திற்கான சட்டதிட்டங்களைக் கற்றுத்தருகின்றன. கொலை, கொள்ளை, பாலியல் தொழில், ஏமாற்றுதல், புறம்பேசுதல், பொய்கூறுதல் போன்ற வெறுக்கத்தக்க நடத்தைகள் தடை செய்யப்பட்டன. இஸ்லாமியர்களுக்கான பண்பாடும் அரசும் ஹிஜ்ரி 7ஆம் (பொ.ஆ.628 (கி.பி)) ஆண்டுக்குப் பிறகு மெல்ல உருவாகி உறுதி அடைந்தது. பொ.ஆ. 622இல் தனது உற்ற தோழன் அபூபக்கருடன் மெக்காவில் இருந்து மதீனா செல்ல வெளியேறியவர், பொ.ஆ. 630இல் நடைபெற்ற தபூக் போருக்குப் (அண்ணல் கலந்துகொண்ட கடைசிப் போர்) பின்னர் மெக்காவுக்கு ஹஜ் சென்றபோது, ஒரு லட்சத்து நாற்பதாயிரம் நபித்தோழர்கள் அவருடன் இருந்தார்கள் எனக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளில் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் உருவாகிவிட்டது. இறைவனின் அருளாலும் இறைத்தூதர் மொஹம்மத் நபியாலும் இது சாத்தியமானது.
ஐந்து தூண்கள்: இஸ்லாம் மார்க்கத்தின் ஐந்து தூண்கள், கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத் (ஈகை), ஹஜ் (புனிதப்பயணம்) என்பவைதாம். ஐந்து கலிமாக்களின் என்பதன் சாரம், ’வணக்கத்திற்கு உரியவன் இறைவன் ஒருவனே, மொஹம்மத் நபியே அவனது திருத்தூதர். இறைவனுக்கு இணை யாரும் இல்லை. அவனே மிகப்பெரியவன். புகழ் அனைத்தும் அவனுக்கே உரியது. உயிர் கொடுப்பதும், மரணத்தைக் கொடுப்பதும் இறைவனே. பேராற்றல் கொண்டவன் இறைவன் ஒருவனே. பாவங்களுக்கு எல்லாம் மன்னிப்பு வழங்குவாயாக இறைவா’ என்பதாகும். ஏக இறைவனையும் இறைத்தூதர் நபியையும் ஏற்றுக்கொண்டதற்கான சாட்சி இது. இஸ்லாம் வகுத்த ஐந்து நேரத் தொழுகை, உடல் தூய்மையுடன் மனித மனத்தின் அழுக்குகளை நீக்குவதற்காக இறைவனால் கட்டளையிடப்பட்டது. சகோதரத்துவத்தை வலியுறுத்தும் இஸ்லாம், தனியாகத் தொழுகை செய்வதைவிடக் குழுவாக நின்று தொழுகை புரிவதை 27 மடங்கு சிறந்தது என்கிறது.
அரேபியர்களிடம் நோன்பு நோற்கும் வழக்கம் முன்பு இருந்தபோதிலும், திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட ரமலான் மாதத்தில் நோன்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. “உங்களில் நோயாளியாகவோ, பயணத்தில் இருப்பவராகவோ இருந்தால் அவர் வேறு நாள்களில் கணக்கிட்டு நோன்பு நோற்றுக்கொள்ளட்டும். அல்லாஹ்உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான்” என்கிறது திருக்குர்ஆன். பசியையும் தாகத்தையும் இச்சைகளையும் அடக்கிக் கொள்ளக் கற்றுத்தரப்பட்ட பாடம் நோன்பு என்றால் மிகையல்ல. பசியின் அருமையை உணர்ந்துகொண்டு இம்மாதத்தில் ஏழைகளுக்கு ஈகை செய்யும்பொருட்டும் கட்டளையிடப்பட்டுள்ளது. இஸ்லாம் கூறும் கடமைகளுள் மூன்று எல்லாருக்கும் கட்டாயமானது. பின்வரும் ஜகாத் மற்றும் ஹஜ் இரண்டிலும் சில விதிவிலக்குகள் இருக்கின்றன.
ஏழைகளுக்கும் வசதியற்றவர்களுக்கும் கடன்பட்டு அதனைத் திருப்பிச் செலுத்த முடியாதவருக்கும் அடிமைகளை மீட்டுக்கொள்ளவும் இறைவழிபாட்டிற்குச் செலவு செய்யவும் வழிப்போக்கருக்கும் ஜகாத் கொடுக்கப்படவேண்டும். இவர்களைத் தவிர ஜகாத் பெறுபவர்களை அண்ணல் கண்டித்தார். ஜகாத் கடமை என்பது செல்வம் உள்ளோரைத் தூய்மைப்படுத்துவதற்காகும். “அவர்களின் செல்வங்களிலிருந்து கடமையாக்கப்பட்ட தானதர்மத்தின் பங்கைப் பெற்று அதன்மூலம் அவர்களின் அசுத்தங்களை நீக்கி அவர்களைத் தூய்மைப்படுத்துவீராக” என்று திருக்குர்ஆன் வசனம் 9.103 கூறுகிறது.
“மக்களில் இறையில்லத்திற்கு (கஅபா) சென்றுவர சக்தி பெற்றவர் அல்லாஹ்வுக்காக அந்த இல்லத்திற்கு ஹஜ் பயணம் செய்வது கடமையாகும்” என்று திருக்குர்ஆன் (வசனம் 3.97) கூறுகிறது. உடல் வலிமையாலும் பொருளாதாரத்திலும் சக்தி பெற்றவர்களுக்கு இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடமைகளாக்கப்பட்டவற்றிலும்கூட ஏக இறைவன், மக்கள் மீது அளவற்ற கருணையாளனாக இருக்கிறான் என்பதை அறிந்துகொள்ள மேற்கண்டவையே ஆதாரம். மனிதகுலத்தை நுட்பமாக எல்லா வழிகளிலும் நேர்வழிப்படுத்தவே திருக்குர்ஆன் அருளப்பட்டிருக்கிறது. இறைவனால் அருளப்பட்ட பெரும்கொடை அது!
(தொடரும்)
- bharathiannar@gmail.com