

சுவாமி விவேகானந்தர், “மனிதனைப் பாவி என்று அழைப்பதுதான் பாவம்" என்பார். ‘கோடானு கோடி ஊமைச் சனங்களின் ஆசிகளே என் துணிவுக்குக் காரணம்' என்று தோள்தட்டி நெகிழ்ந்த அந்தத் துறவிகளின் சிங்கம் ஊமைச் சனங்களைக் கடவுளாகக் கண்டார். அந்தப் பார்வையை அவருக்கு வழங்கியவர் அவருடைய குருவான பரமஹம்சர்.
ஒரு குணம், திரியும்போது குறையாகிறது. அந்தக் குறையும் மனிதனைச் செயலில் தூண்டுகிறது. அதற்கு ஒரு விளைவும் ஏற்படுகிறது. அந்த விளைவே பாவம் என்று சொல்லப்படுகிறது. பெரும்பாலும் நம்முடைய குணங்கள் என்பவை, பழகிப் பழகி, செய்து செய்து, நமக்கு இயல்பாகிவிட்ட நம்முடைய தன்மைகளே. குறைகளும் அவ்விதம் இயல்பாகிவிட்டால் அவையே தவிர்க்க முடியாத குணங்களாகி விடுகின்றன.
எது சரி, எது தவறு என்று சிந்தித்து, விளைவுகளை ஆராய்ந்து, நாம் தேர்ந்தெடுத்த தன்மைகளே நமக்குக் குணங்களாக வேண்டும். இப்படிச் சிந்திக்கிறோம், அப்படிச் செயல்படுகிறோம் என்பது தவிர்க்க முடியாமல் எதனாலோ உந்தப்பட்ட நிகழ்வுகளாக இருப்பது சிலாக்கியமானதில்லை. ஒருமுறை, எங்கள் தெருவோடு மெல்ல நடந்து சென்றுகொண்டிருந்தார் எழுத்தாளர் லா.ச.ரா., அவர் யாரென்றே தெரியாத, யாருமாகவே இல்லாத நான் அழைத்ததும் கொஞ்சம்கூடத் தயங்காமல் வீட்டுக்குள் வந்தார்.
தன்னுடைய நரைத்த புருவங்களைச் சுருக்கிக் கொண்டு, ‘நீ இயல்பிலேயே நல்லவனாக இருக்கிறாய் என்று கொண்டாடிக் கொள்ளாதே! அது பிசகு. You must be consciously good. You must THINK noble thoughts,’ என்று சொல்லிக் காபி அருந்திச் சென்றார். இருபது வயதில் நான் கேட்ட இந்த அறிவுரை இன்றும் என்னைச் சிந்திக்க வைக்கிறது.
பிழை என்னும் மனப்பாங்கு: பிழைகள் செய்துசெய்து பழகி, அவையே ஒரு மனப்பாங்காக (thought pattern) ஆகி விடுவதே பாவம் எனலாம். இந்த நாட்டில் எந்தச் சிந்தனையிலும் ஓர் உச்ச கட்டத்தைத் தொட்டிருக்கிறார்கள். பாவத்தைப் பொறுத்தமட்டில், பொய், திருடு, ஏமாற்று என்றெல்லாம் பெரிய பட்டியல் போட்டுவிட்டு, உச்சகட்டமாக, ‘ஒன்றை இரண்டாய்க் காண்பது பாவம்’ என்றார்கள். `ஒன்றை இரண்டாய்க் காண்பது பாவம்' என்பது அதீதமான கோட்பாடு.
ஆனால், ஒரு நாள் எந்த ஆன்மிக ஆர்வலரும் ஒன்றை மட்டுமே காண்கின்ற நிலைமைக்கு உயர்ந்து, அந்த ஒன்றுதான் நான் என்பதையும் உணர்ந்து, ஒடுங்க வேண்டும். அந்த ஒடுக்கமே ஞானம். விரிவல்ல ஞானம். ஒரு ராகத்தின் அளவை குறைத்துக்கொண்டே போனால், அது மறைந்தே போகக்கூடும். ஒரு சத்தியத்தை நேரடியாக உணராமல் அதைப் பகுத்துப் பகுத்துப்பார்த்துக்கொண்டே இருந்தால் அது நீர்த்துப் போகும். இதுதான் கருத்து.
சரி, எந்தப் பிழையால் இந்தப் பாவம் விளைகிறது? - மனிதனின் அடிப்படை இயல்பு அமைதி. அதனுடைய வெளிப்பாடு ஆனந்தம். இதுதான் நாம். இதற்கு முரணான எதுவும் நாமல்ல, நமதுமல்ல. இதை மறப்பதே பிழை. அந்தப் பிழையே பாவத்திற்குக் காரணம். சரி, இந்த மறத்தலுக்கு என்ன காரணம்? நினைப்புக்கே பெரிதாகக் காரணம் இல்லாத போது, மறப்புக்குக் காரணம் தேடுவானேன்? மறப்பும் நினைப்பின் ஒரு பங்குதான். நினைப்பில் ஓர் அயர்ச்சி மறப்பு.
நினைப்பில் ஒரு தவறான பெயர்ச்சி மறப்பு. தான் யார் என்பதை மறந்துவிட்டு, தன்னில் இருக்கும் பொக்கிஷத்தைப் பார்க்காமல், நிம்மதி, மகிழ்ச்சி, இவற்றை வெளியே தேடுவதே பிழையின் தோற்றுவாய். மறப்பதே பிழை. பிரிப்பதே பாவம்.
நான் குறிப்பிட்ட அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும், அவை இல்லாது போவதற்கும் புறச் சூழ்நிலைகள் ஒருபோதும் காரணமாக இருக்க முடியாது. எந்த செளகரியத்தாலும் சாந்தி வராது. எந்தத் துன்பத்தாலும் அந்த அமைதி கெடாது. இதுதான் நம் அனைவருக்கும் அடிப்படை.
உலகத்தில் எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள் இருக் கின்றனவே?
ஆம், இருக்கின்றன.
எத்தனையோ அநியாயங்கள் நம்மைச் சுற்றி நடக் கின்றனவே?
ஆம், நடக்கின்றன. அவற்றையெல்லாம் பொருள் படுத்தாமல் என்ன அமைதி? எங்கே ஆனந்தம் என்று எழும் கேள்விகள் புரிந்துகொள்ளக் கூடியவைதான்.
தொலைப்பதால் என்ன பயன்? - இவற்றை மாற்றுவதற்கான எல்லா முயற்சிகளையும் எந்தத் தனிமனிதனும் எடுப்பது நியாயமே. அது தர்மமே. ஆனால், அடிப்படையில் அமைதிதான் நம்முடைய இயல்பு, ஆனந்தம்தான் அதன் விளைவு என்பதை மறந்துவிட்டு, அறவே மறுத்துவிட்டுச் செயலில் இறங்குவது அறிவுடைமை ஆகாது. ஒரு களேபரத்தில் நாம் நம்மையும் தொலைத்து விடுவது நாம் உள்பட யாருக்கும் எந்தப் பயனையும் நல்காது.
உள்ளே திரும்பி உண்மையில் திளைத்தபடி
உலகத்தில் செயலாற்ற வேண்டும்
முள்ளின் நடுவே முகையைப் போலே
முறுவல் பூத்திருக்க வேண்டும்
பள்ளம் மேடு பாதையில் உண்டு
பார்த்துத்தான் நாம் நடக்க வேண்டும்
பாதையைச் சபித்து மகிழ்ச்சியைத் தொலைத்துப்
பதறுவதைத் தவிர்க்க வேண்டும்
இத்தனை கூச்சல்கள், குழப்பங்கள், சண்டைகள், தீராத பகைகள் இவற்றின் நடுவே வள்ளலார், ரமணமுனி, சாயி போன்ற மாமனிதர்கள் அதெப்படி அவ்வளவு அமைதியாக, இனிமையாக இருந்தார்கள்? அவர்கள் சமூகப் பொறுப்பில்லாமல் இருந்தார்கள் என்றா நினைப்பீர்கள்?! அப்படி நினைப்பது அறவே தவறு.
அவர்கள் உலகத்தில்தான் இருந்தார்கள். உலகின் நலனையே விழைந்தார்கள். அதற்காகத்தான் பாடுபட்டார்கள். ஆனால், நாமறிந்த விதத்திலல்ல! நமக்கு எப்போதும் புரிந்த விதத்திலல்ல!
ஆம், அவர்கள் உலகத்தில்தான் இருந்தார்கள். ஆனால், அவர்களுக்குள் உலகம் இருந்ததே இல்லை. இதைக் கொஞ்சம் பதறாமல் சிந்தித்துப் பாருங்கள். உள்ளே நீங்கள் சந்தித்த கடவுளைப் பற்றி எனக்குச் சொல்வீர்கள்!
(தரிசனம் நிகழும்)
- tavenkateswaran@gmail.com