

பொ.ஆ.(கி.பி.) 610இல் சரியாக அண்ணல் நபிக்கு 40 வயதாகும்போது இஸ்லாம் எனும் மார்க்கம் தோன்றியது. எழுதவோ படிக்கவோ தெரியாத, அனுபவ அறிவாலும் நன்னடத்தையாலும் மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றிருந்த ஒருவர், ஆகப்பெரும் மனித குலத்துக்கே வாழ்வியல் நெறியைக் கற்பிக்கும் பேராசானாக மாறினார். ஏக இறைவனின் தேர்வாக அவர் இருந்ததற்கு அவரது ஒழுக்கம்தான் அடிப்படை.
இஸ்லாத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவும் அண்ணல் நபியின் நற்பண்புகளே முதற்காரணம். ஒழுக்கம், ‘உயிரினும் ஓம்பப்படும்’ என்ற வள்ளுவர் கூற்று சாதாரணமானதல்ல. இறையச்சம் இஸ்லாத்தின் அடிப்படை. இறையச்சம் கொண்டவர்கள் ஒழுக்கத்தைப் பேணுபவர்கள். நற்பண்புகளைப் பெற்றவர்கள்.
‘ஓதுவீராக’ என்று எந்த மதமும் அதுவரை தன் மக்களுக்குச் சொல்லவில்லை. ஓதுவதில் பாரபட்சம் இல்லாமல் எல்லோரும் ஓதும் இறைவேதமாக இருக்கிறது திருக்குர்ஆன். ஆண், பெண், குழந்தைகள், வறியவர், எளியவர், வசதி படைத்தவர் என எல்லோருக்குமானது திருக்குர்ஆன் எனும் வாழ்வியல் நெறி. இறுதி இறைத்தூதர் முஹம்மது நபியைப் பொறுத்தவரை ஏக இறைவனால் நிகழ்த்தப்பட்ட அற்புதங்களில் ஒன்று திருக்குர்ஆன். ஏகத்துவம், மறுமை, வாழ்வியல் ஒழுக்கங்கள் ஆகியவை திருக்குர்ஆனில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன.
அழைப்புப் பணி: மக்களை இஸ்லாத்துக்கு அழைக்கும் பணியை மெக்காவில் இருந்து 13 ஆண்டுகளும் மதீனாவிலிருந்து 10 ஆண்டுகளும் அண்ணல் நபி மேற்கொண்டார்.
இறைவனிடமிருந்து முதல் வேதவெளிப்பாடு வெளிப்பட்டு, ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு, ஏக இறைவனின் மேன்மையை மக்களுக்கு எடுத்துரைக்கும்படி அண்ணலாரிடம் மீண்டும் ஜிப்ரில் கூறுகிறார். முதல் வேதவெளிப்பாட்டில் உள்ளம் திகைப்புற்று நடுக்கத்தில் இருந்த அண்ணல், கதீஜாவிடம் தன்னைப் போர்த்தும்படி கூறினாரல்லவா? அப்படிப் போர்த்திக் கொண்டவரிடம் அடுத்த திருக்குர்ஆன் வசனங்கள் வந்திறங்கின.
“போர்வையைப் போர்த்திக் கொண்டவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக. உமது இறைவனைப் பெருமைப்படுத்துவீராக. உமது ஆடையைத் தூய்மையாக வைப்பீராக. அசுத்தத்தை விட்டுவிடுவீராக. உதவி செய்துவிட்டு அதற்குரிய பலனை அதிகமாக எதிர்பார்க்காதீர். உமது இறைவனுக்காகப் பொறுமையை மேற்கொள்வீராக.” (திருக்குர்ஆன் 74:1-7)
ஏக இறைவனை அடையும் வழியை மக்களுக்குச் சொல்லிவிட்டு அந்த உதவிக்காகப் பலனை அதிகமாக எதிர்பார்க்காதீர் என்ற வசனத்திலும் இறைவனுக்காகப் பொறுமையாக இருப்பீர் என்ற வசனத்திலும் அழைப்புப் பணியில் அண்ணல் நபி எதிர்கொள்ளப்போகும் சவால்கள் மற்றும் துன்பங்களை இறைவன் முன்கூட்டியே அவருக்கு அறிவித்திருந்தான்.
அழைப்புப் பணிக்கு அனுமதி கிடைத்தவுடன், தன்னை முழுமையாக நம்பும் தன் சுற்றத்தாரிடம் அண்ணல் இஸ்லாத்தைப் பரப்புரை செய்தார். கதீஜாவுக்குப் பிறகு, அபூதாலிப்பின் மகன் அலி, அண்ணலின் உற்ற தோழன் அபூபக்கர் மற்றும் அண்ணலிடம் அடிமையாக இருந்து விடுதலை செய்யப்பட்டப் பின்னரும் அவருடனேயே இருந்த ஸைத் ஆகியோர் இஸ்லாத்தைத் தழுவினார்கள்.
நபித்துவம் பெற்ற மூன்றாண்டுகள் அழைப்புப் பணி விரிவாக்கப்படவில்லை. குறிப்பிட்ட எல்லையிலேயே இருந்தது. அடுத்தகட்டமாக, குறைஷ் இன மக்களை அழைத்து ஸஃபா மலைக் குன்றின் மீது நின்றுகொண்டு அண்ணல் பகிரங்கமாக இஸ்லாத்தைப் பரப்பத் தொடங்கினார்.
இந்நிலையில், அல் அமீன் சொல்வதெல்லாம் உண்மை என்று நம்பியிருந்த மெக்காவாசிகள் இரண்டு பிரிவாகப் பிரிந்தார்கள். ஒரு பிரிவினர் அல் அமீனின் சொற்களுக்குச் செவிமடுத்தார்கள். தொடக்கத்தில் இவர்கள் மிகச் சொற்ப எண்ணிக்கையினர்தான்.
மெக்காவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இஸ்லாம் எனும் புதிய மார்க்கத்தைப் பற்றிய செய்திகள் மெல்லப் பரவின. அண்ணல் நபியின் உபதேசங்களை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் பிற பகுதிகளில் இருந்து மக்கள் மெக்கா வந்தனர். அவர்களும் அங்கு துன்பங்களைச் சந்தித்தனர். குறைஷிகளால் விரட்டியடிக்கப்பட்டனர்.
பொ.ஆ.7ஆம் நூற்றாண்டு வரை அரேபியச் சமூகத்தில் இருந்த பல தெய்வ வழிபாட்டு முறை, அதனால் விளைந்த தீமைகள் எல்லாம் இஸ்லாம் எனும் மார்க்கத்தால் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது. ஏகத்துவத்தை முன்மொழிந்த முன்னோர் இறைத்தூதர் இப்ராஹிம் வழி வந்த ஹாஷிம் இனத்தவரே தங்களுள் ஒருவரான அண்ணல் நபிக்குப் பெரும் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.
காஃபாவை வழிபட வரும் மக்களுக்கு உணவு, நீர், இன்னபிற வசதிகளைச் செய்துதரும் பொறுப்புகளில் குறைஷிகள் இருந்தார்கள். அதனால் அவர்களுக்குச் சமூகத்தில் மதிப்பு இருந்தது. அதை அவர்கள் இழக்க விரும்பவில்லை. ஏற்றத்தாழ்வான சமூகத்தில் அவர்கள் ஆதாயம் அடைந்திருந்தனர்.
அல் அமீனான அண்ணல் நபியைச் சித்தம் கலங்கியவர் என்றும் மக்களைத் தவறாக வழிநடத்துபவர் என்றும் குற்றம் சாட்டினர். அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தனர். காஃபாவின் பொறுப்பாளர்களாக இருந்த சிலை வணக்கத்தினர், அண்ணலின் வளர்ப்புத் தந்தை அபூதாலிப்பிடம் முறையிட்டனர். அபூதாலிப் அண்ணலிடம் பேசினார். அதற்கு அண்ணல், ‘ஒரு கையில் ஒரு சூரியனும் ஒரு கையில் சந்திரனும் என் கையில் வைத்தாலும் ஏகத்துவத்தை பரப்புவதை விடமாட்டேன்’ என்றார்.
ஏகஇறைவன் மீதிருந்த நம்பிக்கை ஒருபுறம். மக்களை இழிநிலையிலிருந்து மீட்டு ஒரு குடையின்கீழ் கொண்டுவரும் உறுதி ஒருபுறம். காஃபாவில் அண்ணல் தமது பரப்புரையைத் தொடங்கினார். அங்கு தொழுகையை நடத்தினார். குறைஷிகளின் எதிர்ப்பு இன்னும் அதிகமானது. நபித்துவத்தின் 4-5ஆம் ஆண்டுகள் இவ்வாறு நகர்ந்தன.
மெக்காவில் அடுத்த ஐந்தாண்டுகள், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்கள் மீதும் குறைஷிகள் தாக்குதல் தொடுக்கத் தொடங்கினர். சுடும் மணலில் கிடத்தி அவர்கள் மீது பெரிய கற்கள் வைத்து விடுவது, அவர்களுக்கு உணவு கிடைக்காமல் செய்வது எனத் துன்பங்கள் தொடர்ந்தன. அண்ணலார் செல்லும் பாதையில் முட்களை வீசுவதில் தொடங்கி அவரைக் கல்லால் அடிப்பது, தொழுகை நடத்தும்போது அவர்மீது ஒட்டகத்தின் குடலைப் போடுவது எனப் பல இழிசெயல்களை மெக்காவாசிகள் செய்தனர்.
இவ்வாறு மொத்தம் பத்து ஆண்டுகள் கடந்த பிறகு, மெக்காவில் இறுதி 3 ஆண்டுகள் மிகமிக துன்பங்களை அனுபவிக்கும் காலமாக அண்ணல் நபிக்கு இருந்தது! வளர்ப்புத் தந்தை அபூதாலிபும் தன்னை முழுமையாக நம்பி, உள்ளத்தாலும் பொருளாலும் உவகையுடன் பெரும் ஆதரவை அளித்த கதீஜாவும் பொ.ஆ.619இல் ஒருவர் பின் ஒருவராக மறைந்தனர். அண்ணல் இவ்வாண்டை துக்க ஆண்டாக அறிவித்தார். அதிலிருந்து மூன்று ஆண்டுகள், இறைத்தூதரும் அவரைச் சார்ந்தவர்களும் மேலும் பலப்பல இன்னல்களுக்கு ஆளானார்கள்.
உன்னத மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மார்க்கம்: நபித்துவம் பெற்று 13 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணல் நபி மதீனாவுக்குச் செல்ல முடிவுசெய்தார். இவ்வாறு மெக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்ற நிகழ்வைத்தான் ஹிஜ்ரத் (பொ.ஆ.622) என்கிறார்கள். இஸ்லாமிய நாள்காட்டி இங்கிருந்துதான் தொடங்குகிறது.
மதீனாவுக்குச் சென்ற இரண்டாம் ஆண்டிலேயே குறைஷிகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் பத்ரு என்ற இடத்தில் போர் நடைபெற்றது. அதில் இஸ்லாமியர்கள் வென்றார்கள். தொடர்ந்து உஹத், மக்கா, ஹுனைன் எனப் பல முக்கியப் போர்கள் நடைபெற்றன. இப்போர்கள், தற்காப்புக்கான போர்கள் என்றே அறியப்படுகின்றன.
போர்களும் சமாதான உடன்படிக்கைகளும் மதீனா வாழ்நாள்களில் இஸ்லாம் பரவக் காரணங்களாக இருந்தன. மதீனாவிலிருந்து உலகம் முழுதும் இஸ்லாம் இறை அடியார்களால் எடுத்துச் செல்லப்பட்டது. ஏற்றத்தாழ்வுகளற்ற புதிய வாழ்வியல் மார்க்கம் உலகம் முழுவதும் உள்ள உன்னத மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இஸ்லாமிய மார்க்கத்தில் இறைவன் ஒருவனே வணக்கத்திற்குரியவன். யாரும் யாருக்கும் உயர்ந்தவரும் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை. ‘பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ என்ற மானுட சமத்துவம்தான் அது.
நபிகள் பிறந்த ஆண்டு அல்லது அவர் நபித்துவம் பெற்ற ஆண்டு என எதையும் இஸ்லாமியர் கொண்டாடுவதில்லை. ஏக இறைவனை வழிபட எத்தகைய குறுக்கீடும் இருக்கக்கூடாது என்ற நபிகளின் உறுதி வியப்பிற்குரியது. தனக்கு முன்வந்த இறைத்தூதர்களை மக்கள் காலப்போக்கில் இறைவனுக்கு இணையாக வணங்கி ஏகத்துவத்தை மறந்திருந்தார்கள்.
இதனை அறிந்திருந்த அண்ணல் நபி, மீண்டும் அவ்வாறு நடக்காத வண்ணம் நுட்பமாகச் செயல்பட்டார். ஈகையும் தியாகமும் மட்டும் இஸ்லாம் மார்க்கத்தில் திருநாள்களாகக் கொண்டாடப்படுகின்றன. அண்ணல் முஹம்மது நபி எனும் நல்வழிகாட்டியால் மட்டுமே அது சாத்தியமானது!
(தொடரும்)
- bharathiannar@gmail.com