

இசையைப் பரிபூரணமாகக் கற்றுத் தேர்ந்தவர்கள் எவருமில்லை என்பதை உணர்த்தத்தான் அந்தக் கலைமகளையே வீணையை வாசிக்கும் மகளாக வரைந்தார் ஓவியர் ரவிவர்மா.
மேண்டலின் யூ. ஸ்ரீநிவாஸிடம் மிகவும் சிறிய வயதிலிருந்தே மேண்டலின் வாசிப்பதற்கு கற்றுக் கொண்ட சம்ஹிதா ஷிவ்ராம் மற்றும் ஷ்ரேயஸ் ஷிவ்ராம் இன்றைக்கு, இந்தியாவிலேயே மேண்டலின் உடன்பிறப்புகள் என்னும் பெருமையோடு வளையவருகின்றனர். மேண்டலினில் வீணையைப் போன்று கமகங்களை எளிதில் கொண்டுவர முடியாது. ஆனால், இந்தச் சுட்டிகளின் வாசிப்பில் கமகங்கள் கனஜோராக பளிச்சிடுவதோடு குழைவாகவும் நம் நெஞ்சை நிறைக்கிறது.
நான்கு தலைமுறையாக சங்கீதத்தில் ஊறித் திளைத்த குடும்பத்தைச் சேர்ந்த இந்தக் குழந்தைகளின் தந்தை ஷிவ்ராம்,மேண்டலின் ஸ்ரீநிவாஸிடம் பல ஆண்டுகள் மேண்டலின் வாசிப்பதற்கு கற்றவர். இசைப் பாரம்பரியமிக்க குடும்பத்தின் அடுத்த வாரிசாக சம்ஹிதாவும் ஷ்ரேயஸும் தங்களின் இசைப் பயணத்தை தொடர்கிறார்கள்.
மேண்டலின் யூ ஸ்ரீனிவாஸின் நேரடிப் பயிற்சியின் கீழ் தங்களின் இசைப் பயணத்தை தொடங்கிய இந்தக் குழந்தைகள், அதன் பிறகு மேண்டலின் ராஜேஷின் சீரிய பயிற்சியின் கீழ் தங்களின் இசைப் பயிற்சியை மெருகேற்றிக் கொண்டனர்.
கர்னாடக இசை, திரைப்பட இசை, கிழக்கும் மேற்கும் சேர்ந்த கலப்பிசை உள்ளிட்ட பல்வேறு இசைப் பாணிகளை தங்களின் குருவின் அடித்தடத்தில், மேண்டலின் என்னும் மேற்கத்திய வாத்தியத்திலும் வாசிக்க முடியும் என்பதை உலகுக்கு அறிவிக்கும் நம்பிக்கை நட்சத்திரங்களாகப் பிரகாசிக்கின்றனர்.
அவர்களின் அழகான மேண்டலினில் `மனவ்யாள கிஞ்சரா' தியாகராஜரின் கிருதியை வாசிக்கும் போது நளினகாந்தியாக அவர்களின் இசை பார்ப்பவர்களையும் கேட்பவர்களையும் வசப்படுத்துகிறது. முத்துசுவாமி தீட்சிதரின் `மகா கணபதிம்' இசைக்கும்போது கம்பீர நாட்டையாக அவர்களின் இசை வெளிப்படுகிறது. வாசிக்கும்போது பாரதியாரின் `சின்னஞ்சிறு' கிளியாக மேண்டலினும் கொஞ்சுகிறது.
இந்தியா முழுவதும் 750க்கும் மேற்பட்ட கச்சேரிகள் நடத்தியிருக்கும் இந்த இசை உடன்பிறப்புகள், மியூசிக் அகாடமி போன்ற மதிப்பு வாய்ந்த சபைகளிலும் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றனர்.
ஸ்ரீ சைலத்தில் உள்ள ஸ்ரீ மல்லிகார்ஜுனர் கோயில், திருமலை திருப்பதி தேவஸ்தானம், உடுப்பி கிருஷ்ணர் கோயில் மற்றும் திருவந்திபுரத்தில் உள்ள ஸ்ரீ தேவநாதசுவாமி கோயில் போன்ற இடங்களில் பக்தியோடு தங்கள் இசை சமர்ப்பணத்தை செய்திருக்கிறார்கள்.
கோயில் திருவிழாக்கள்,கும்பாபிஷேகங்கள் போன்ற புனித நிகழ்வுகளுக்கு தங்கள் இசையை அர்ப்பணித்துள்ளனர். காஞ்சி காமகோடி பீடம், சிருங்கேரி சாரதாம்பாள் பீடம், ஸ்ரீ சகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம், உடுப்பி மடம் உள்ளிட்ட போற்றுதலுக்குரிய ஆன்மிகத் தலங்களில் வாசித்து, அந்த மடத்தின் புனிதத் தலைவர்களின் ஆசிர்வாதங்களையும் பெற்றுள்ளனர்.
அண்மையில் ஸ்ரீ சகடபுரம் ஸ்ரீவித்யா பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமிகளால் பீடத்தின் ‘ஆஸ்தான வித்வான்கள்' என்கிற பட்டம் இவர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்களது குருவைப்போலவே 13 வயதிலேயே ஆஸ்தான வித்வானாக நியமிக்கப்பட்டது உடன்பிறப்புகளின் அர்ப்பணிப்பான இசைக்கு கிடைத்த புனிதமான அங்கீகாரம்.
ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மேண்டலின் உடன்பிறப்புகளுக்கு பல்வேறு பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வழங்க அறிவுறுத்தினார். இம்முயற்சி கலை, கலைஞர்களை பள்ளி மாணவர்களின் இதயங்களுக்கு நெருக்கமாக கொண்டு வருவது மட்டுமல்லாமல், 100க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு அவர்களின் இசையின் நாதத்துடன் இணையும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது.
- ravikumarcv@hindutamil.co.in