கண்முன் தெரிவதே கடவுள் 22: நிம்மதிதான் ஆண்டவன் சந்நிதி!

கண்முன் தெரிவதே கடவுள் 22: நிம்மதிதான் ஆண்டவன் சந்நிதி!
Updated on
2 min read

நமக்குப் பகைநாமே! நற்றுணை நாமே!

சுமை நாமே! நாமே சுகம்!

அந்த சுகம்தான் கடவுள். அதில் இன்ப, துன்ப எக்களிப்பு இருக்காது. அப்படியா? எனில், இன்பம் கடவுளில்லையா? இல்லையென்று சொல்லவில்லை, இன்பமும் கடவுள் தான், துன்பம் போலவே! இது சரிப்படவில்லையா என்றால், இது ஒத்துவருகிறதா பாருங்கள்: கடவுளே இன்பம்.

எல்லாம் கடவுள் என்றால், அது ஒப்புக்குப் பேசுகிற உபசார வார்த்தையாக இல்லாமல், எ..ல்..லா..ம்.. என்று கொள்ளவேண்டும். ஆமாம், அறிவு மட்டுமா கடவுள்? அறியாமையும்தான். அழகு மட்டுமா ஆண்டவன்? அவலமும்தான். இருமையெனும் வலையில் சிக்கி இடர்படாமல், இடையில் நிலையாக இருந்தபடி ஒருமையைக் காண்பவனே கடவுளைக் காண்கிறவனாகிறான். அவன், உழவன் கால் மிதித்த சேற்றை உகந்த நீறாய் அணிவான். சிறுகோயில் கருந்தூணில் கண் பனிக்கச் சாய்ந்துமிருப்பான்.

ஓயாத இயக்கம்: இந்த உலகம் உயிர்மயமானது. உயிர்களெல்லாம் இங்கே ஓயாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த இயக்கத்தின் தலையாய அம்சம் அசைவு மட்டுமல்ல, நகர்வு (Movement) என்பதே உண்மை. இந்த நகர்வு, ஒரே ரீதியில் இருக்கிறதே! மழலை, விடலை, இளமை, முதுமை என்னும் இதில் மாற்றமே இல்லையே! சலிக்காதோ? ஒரு திரைப்படம் பார்க்கிறீர்கள். பிடிக்கவில்லையென்றால் எழுந்து வெளியே போய்விடலாம். வாழ்க்கையில் அப்படிச் செய்ய முடியுமா? முதுமை பிடிக்கவில்லை என்றோ மழலை மீண்டும் வேண்டுமென்றோ முரண்டு பிடிக்க முடியுமா!

போயிகிட்டே இருக்கணும் போயிகிட்டே இருக்கணும்

போகப் போகப் புரிவதுதான் வாழ்க்கை!

பாடிக்கிட்டே நடக்கணும் ஆடிக்கிட்டே பாடணும்

காலடியில் வளருவதே பாதை!

போகப் போக என்ன புரியும்? ஒன்றை இன்பமென்றும் இன்னொன்றைத் துன்பமென்றும் நாம் கருதிக் கருதிப் பழகியது எவ்வளவு பிழையானது என்பது புரியும். இன்பமே துன்பத்தில் முடிகிறது என்பதும் புரியவரும்.

“மனித ஜாதியில் துயரம் யாவுமே

மனதினால் வந்த நோயடா”

என்பார் கவியரசர் கண்ணதாசன். உலகில் எத்தனை விதமான உயிர்கள் இருக்கின்றன! புதிது புதிதாக இன்னும் பல உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுவருகின்றன. அதனால் உயிரினங்களின் வகைகளை இன்னும் கணக்கெடுக்க முடியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். இத்தனை உயிர்களில், மனிதனுக்குத்தான் மனம் என்பது இருக்கிறது.

கவலை எனும் கொடுநோய்: அல்லலும் ஆபத்துமே வாழ்க்கை யான இத்தனை உயிரினங்களில், மனம் என்னும் பிரத்யேகமான சக்தி படைத்த மனிதனுக்கு மட்டுமே கவலை என்னும் கொடுநோய் இருக்கிறது. மனிதனுக்குக் கவலைதான் மகத்தான அவமானம். கிட்டத்தட்ட ஆத்ம துரோகம்.

மனிதர்கள், பொருள்கள், கருத்து கள் இவைதான் நாம் அன்றாடம் தொடர்புகொள்ளும் தளங்கள். இவற்றோடு நாம் கொள்ளும் தொடர்புதான் உறவாக விளைந்து சூழ்நிலைகளாக விரிகின்றன. இந்தச் சூழ்நிலைகள் ஓயாமல் மாறிக் கொண்டே இருக்கும் இயல்புடையன.

வாழ்க்கை என்பது உறவுகளே, சூழ்நிலைகளே! - தொடர்பு புலன்வழி நேர்வது. ஆனால், உறவு மனவழி நேர்வது. எனவே, நம் அனுமதியின்றி ஒன்று இன்பமாகவோ துன்பமாகவோ தெரியாது. ‘அனுமதியின்றி உள்ளே வரக் கூடாது’ என்கிற எச்சரிக்கை வாசகம் ஓர் அலுவலகத்திற்கு எவ்வளவு தேவையோ, அதைவிடவும் நம் அந்தரங்கத்திற்குத் தேவை. அதில் யார் நுழையலாம், எவர் நுழையக் கூடாது என்பதை நாம்தான் நிர்ணயிக்க வேண்டும். கவனமில்லாமல் நம்முள் பலவற்றையும் அனுமதிப்பதன் விளைவுதான் - கவலை.

கவலை என்பது இருமையின் விசுவரூபம். ஓயாத உளைச்சலும் ஒழியாத எண்ணங்களும்தான் கவலை. இந்தக் கவலை மனித உறவுகள் மட்டுமல்ல, பொருள்கள் மீது கொள்ளும் பற்றால் மட்டுமல்ல, கருத்தின் மீது நமக்கிருக்கும் மோகத்தாலும் விளைவது. தத்துவம் – சித்தாந்தம் - இஸம் என்கிற விரிவுகளின் மீது முதலில் நாம் ஒரு பிடிப்பு கொண்டு பிறகு, நம் கழுத்துப் பிடரியைக் கவ்வியிருக்கும் கருத்துப் பிடிப்பு இருக்கிறதே அது மிகவும் கடுமையானது. கொடுமை யானதும்கூட. கடவுள் பெயரால் கலகம் செய்பவர்களும் கடவுளை மறுத்துக் கலகம் செய்கிறவர்களும் கைகுலுக்கிக்கொள்ளும் மடமைத் தளமே கவலை.

கடவுளை நம்புகிறவன் கவலைப்படவே கூடாது. கடவுளை விடுங்கள், மனிதன் என்பவன் கவலைப்பட்டால் அது மனிதன் என்னும் தன்மைக்கே இழுக்கு. பிறக்கும் கணத்திலிருந்தே பேராபத்தால் சூழப்பட்டு வாழ்கிற விலங்கினங்கள் நம்மைப் பார்த்துச் சிரிக்காதோ? எதையுமே அறிந்து அனுபவிப்பதற்காக வழங்கப்பட்டிருக்கும் அற்புதமான கருவி மனம். அதை, எப்போதும் கவலைப்படுவதற்காகவே பயன்படுத்து வது எவ்வளவு அவலமானது!

எல்லாரும் சஞ்சலமே மனத்தின் இயல்பென்கிறார்கள். அதைக் கொஞ்சம் மாற்றி சஞ்சலமில்லை, நகர்வே (Movement) மனத்தின் இயல்பென்போம். உயிரெல்லாம் நகர்ந்துகொண்டே இருக்கின்றன வல்லவா? அவை சலித்துக்கொள்வதே இல்லையல்லவா? சலிப்புதான், அழகிய நகர்வைச் சஞ்சலமாக மலினப்படுத்துகிறது.

அப்போது, நகர்வில் இருக்கும் ரீதி கட்டுக்குலைந்து இரைச்சல் விளைகிறது. இந்த இரைச்சலுக்கு நாம் வெட்கமின்றிப் பெயர்கள் சூட்டி நியாயம் கற்பிக்கிறோம். ஜேகே இதை Non stop chatter என்கிறார். ரமணமுனியோ இவையனைத்தும் ‘மனோ வியாபாரம்’ என்று அருமையான சொற்றொடரால் சுட்டுகிறார், சுடுகிறார்!

அறிவால் கவலையை வெல்லலாம். அல்லது பக்தியால் கவலைகளை பகவானுக்கு சமர்ப்பிக்கலாம். ஆம், கவலைகளையே ஆராதனைப் பொருளாகவும் ஆக்கலாம். ஏதோ ஒருவிதத்தில் நிம்மதி அடைவது நம்முடைய பொறுப்பு. அது நம் கையில்தான் இருக்கிறது. அந்த நிம்மதிதான் ஆண்டவன் சந்நிதி.

தன்னை உருக்கிக் கரைந்துபோகும்

தவத்தின் கனலில் கண்ணன்

தானிலாத லஹரியில் வந்து

தழுவும் உறவு கண்ணன்

கவலை யாவும் கன்னியராகி

அவர்கள் நடுவில் கண்ணன்

திசைதொலைந்து திணறும்போது

தெருவின் முனையில் கண்ணன்!

(தரிசனம் நிகழும்)

- tavenkateswaran@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in