

இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளும் முன் கதீஜா பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியம். இஸ்லாமியப் பெண்களுக்கு மட்டுமல்ல, உலகின் அனைத்துப் பெண்களுக்கும் முன்னுதாரணம் கதீஜா என்றே கூறலாம். சொர்க்கத்தில் உள்ள பெண்களைவிட மேலானவர்கள் என அண்ணல் நபி கூறும் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிப்பவர் கதீஜா. மற்ற மூவர், அண்ணல் நபியின் மகள் ஃபாத்திமா, ஈஸாவின் தாய் மர்யம், மூஸாவின் வளர்ப்புத் தாயான ஆஸியா ஆகியோர் ஆவர்.
அண்ணலும் கதீஜாவும் 25 ஆண்டுகள் ஒருதார மணத்தில் வாழ்ந்தனர். 1,400 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்நிகழ்வைச் சிறப்பான ஒன்றாகக் கருத வேண்டியிருக்கிறது. கதீஜாவின் இறப்புக்குப் பிறகே அண்ணல் மறுமணம் செய்துகொண்டார். பெண்களின் சம்மதம் கேட்டுத் திருமணம் செய்வதையே இஸ்லாம் வலியுறுத்தியது.
கதீஜா-அண்ணல் திருமணத்தில் ஒரு படி மேலேபோய் கதீஜாவே தனது விருப்பத்தை முதலில் கூறி அண்ணலைத் தேர்ந்தெடுத்தார். பொருளாதாரச் சுதந்திரத்துடன் தன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் சுதந்திரத்தையும் பெற்ற துணிச்சல் பெண் கதீஜா. அவரது சுயமரியாதை மிக்க பகுத்தறிவே, இஸ்லாம் எனும் வாழ்வியல் நெறியை உலகெல்லாம் பரப்ப அண்ணல் நபிக்கு அளவற்ற ஆதரவைத் தந்தது.
நம்பிக்கையாளர் என்பதிலிருந்து இறைத்தூதர்: நபியின் 35ஆவது வயதில் காஃபாவைச் சீரமைக்கும் பணி நடந்து வந்த நேரத்தில் இப்ராஹிம் நபியால் காஃபாவில் பதிக்கப்பட்ட ‘ஹஜருல் அஸ்வத்’ என்கிற கல்லை யார் மீண்டும் காஃபாவில் பதிப்பது என குறைஷிகள் குலத்தாரிடையே விவாதம் நடந்தது. அப்போது மறுநாள் அதிகாலை காஃபாவுக்குள் இறைவணக்கம் செய்ய வரும் முதல் நபர் யாரோ அவர் கூறும் முடிவை ஏற்பது எனத் தீர்மானம் ஆனது.
மறுநாள் அதிகாலையில் அண்ணல் நபி காஃபாவில் நுழைவதைக் கண்டவர்கள் பெரும் மகிழ்வுற்றனர். அண்ணல் நபி, ‘ஹஜருல் அஸ்வத்’ கல்லைத் தன் மேல்துண்டின் நடுவில் வைத்தார். முக்கியஸ்தர்களை மேல்துண்டின் நான்கு மூலைகளைப் பிடித்து எடுக்கச் செய்து காஃபாவில் தன் கரங்களால் அதைப் பதித்தார். அவரது முடிவை அனைவரும் ஏற்றார்கள். சச்சரவு முடிவுக்கு வந்தது.
இப்படியாக மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார் அண்ணல் நபி. எனினும் அவர் இறைத்தூதரானபின் ஏகத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கக் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. முதலில் தனக்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள அவருக்கே சில காலம் ஆனது. அப்புரிதலுக்குப் பக்கத்துணையாக இருந்தவர் கதீஜா.
அண்ணல் வயிற்றில் இருந்தபோது அன்னை ஆமீனா, தன் வயிற்றிலிருந்து ஒளி தோன்றியதுபோல் கனவு கண்டதும் அண்ணல் தன் வளர்ப்புத் தந்தை அபூதாலீபுடன் வாணிபத்துக்காக சிரியா சென்றபோது அங்கிருந்த கிறித்துவப் பெரியார், அண்ணல் நபியை இறைத்தூதராக அடையாளம் கண்டு கூறியதும் திருமணத்துக்கு முன்பு கதீஜாவிடம் காஹினா (குறி சொல்லும் பெண்கள்) இறைத்தூதரின் வருகை பற்றிக் கூறியதும் எனப் பல சிறு சிறு நிகழ்வுகள் அண்ணலாரை இறைத்தூதர் என முன்னறிவிப்பு செய்தவண்ணம் இருந்தன. அண்ணலாருக்கும் இனம்புரியாத சில நிகழ்வுகள் நடந்தன.
உறுதியாக, அண்ணலாருக்கு அவருடைய 40ஆவது வயதில் நேரடியாக இறைத்தூது வந்தது. மெக்காவிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் ஹிரா மலைக் குகையில், தன் மூதாதையர் இப்ராஹிமின் வழியான ஏகத்துவத்தைப் பற்றிய சிந்தனையில் அண்ணல் நாள்கணக்கில் ஆழ்ந்திருந்தார். ரமலான் மாதம் 27ஆம் நாளில் அவ்வாறு ஹிரா குகையில் இருந்தபோது, வானவர் ஜிப்ரில் அண்ணல் முன் தோன்றினார். ஒளிரும் சொற்கள் பொறித்த பட்டுத் துணியைக் காண்பித்து, “ஓதுவீராக!” என்றார் ஜிப்ரில்.
திகைப்படைந்த அண்ணல், “எனக்கு ஓதத் தெரியாதே!” என்றார். அண்ணலாருக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்கவில்லை. ஜிப்ரில் அண்ணலைக் கட்டியணைத்துவிட்டு மீண்டும் “ஓதுவீராக!” என்றார். மீண்டும் அண்ணல், “எனக்கு ஓதத் தெரியாதே!” என்றார். ஜிப்ரிலும் அண்ணலும் மூன்று முறை இவ்வாறு பேசிக்கொண்டார்கள். மூன்றாவது முறை ஜிப்ரில் அண்ணலைக் கட்டியணைத்துவிட்டு, “படைத்த உம் இறைவனின் பெயரால் ஓதுவீராக.
அவனே மனிதனைக் கருவிலிருந்து படைக்கிறான். உம் இறைவன் மாபெரும் கொடையாளி” (திருக்குர்ஆன் 96:1,2,3) என்று கூறினார். அதன்பின் அண்ணல் நபி அதைத் திரும்பக் கூறினார். மேலும் ஜிப்ரில், அண்ணலாருக்குத் தொழு கைக்கு முன் உடலைச் சுத்தம் செய்யும் முறையைச் செய்துகாட்டி தொழுகை செய்யும் முறையையும் கற்பித்தார். பிறகு “முஹம்மதே… நீங்கள் அல்லாஹ்வின் திருத்தூதர். நான் ஜிப்ரில் (தேவதூதன்)” என்று கூறிவிட்டு மறைந்தார்.
முதல் இஸ்லாமியர் - இஸ்லாமியர்களின் தாய்: வானவர் ஜிப்ரிலின் அறிவிப்புக்குப் பின் உடலில் மிகுந்த நடுக்கத்துடன் வீட்டுக்கு வந்த அண்ணல், கதீஜாவிடம் தன்னைக் கம்பளியால் போர்த்தும்படி கூறினார். பரிவோடு அண்ணலைச் சாந்தப்படுத்திய கதீஜா, அவர் கூறியதை ஆய்வுக்கு உட்படுத்தினார் என்றே கூற வேண்டும். காஹினா பெண்கள் கூறியதை நினைவில் வைத்திருந்த கதீஜா, அண்ணல் நபியுடன் சென்று வரக்கா இப்னு நவ்ஃபலைச் சந்தித்தார்.
வரக்காவைச் சந்தித்த பின்னர் ஏக இறைவனின் இறைத்தூதராக அண்ணல் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தம்பதியர் உறுதிசெய்தார்கள். மற்றொரு துறவி அத்தாஸை கதீஜா தனியே சென்று சந்தித்து வரக்கா சொன்னதை மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டார்.
அல்அமீனான கணவனை நம்பாமல் இருக்க முடியாது; அதே வேளையில் நடப்பவற்றை அறிவோடு அணுக வேண்டும் எனப் பகுத்தறிவுடன் செயல்பட்ட கதீஜாவைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. வரக்கா இப்னு நவ்ஃபலும் அத்தாஸும் தெளராத் மற்றும் இன்ஜில் வேதங்களைக் கற்ற துறவிகள். மூஸா நபியையும் ஈசா நபியையும் இறைத்தூதர்களாக அறிந்துகொண்டவர்கள். இறுதித் தூதரான முஹம்மது நபியின் வரவை எதிர்பார்த்திருந்தவர்கள். ஓரிறை வழிபாட்டு முறையைக் கண்டடையும் ஆய்வில் ஈடுபட்டிருந்தவர்கள்.
‘சிலை வணக்கத்தையும் அதனால் விளைந்த மூடநம்பிக்கைகள், ஒழுக்க நெறியின்மை ஆகியவற்றையும் தவிர்த்து இப்பிரபஞ்சத்தை தோற்றுவித்த இறைவன் ஒருவனே! அவனை மட்டுமே மக்கள் வழிபட வேண்டும்’ என்கிற கொள்கையை அண்ணல் பரப்ப ஆயத்தமானார். இஸ்லாம் எனும் மார்க்கம் தோன்றியது. இதை முதன்முதலில் ஏற்றுக்கொண்டவர் வேறு யாருமல்ல, கதீஜாதான். அதனால்தான் ‘இஸ்லாமியர்களின் தாய்’ என அவர் அழைக்கப்படுகிறார்.
குறிப்பிட்ட இடைவெளி விட்டு ஜிப்ரில், அண்ணலாருக்கு இறைச்செய்தியை அளித்தவண்ணம் இருந்தார். இப்போது தன்னை முழுமையாக நம்பிய கதீஜாவிடமே தனது முதல் ஏகத்துவப் பிரச்சாரத்தை மேற்கொண்டார் அண்ணல் நபி.
“லாயிலாஹா இல்லல்லாஹூ
முஹம்மது ரசூலுல்லாஹ்”
‘அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை. முஹம்மதே அல்லாஹ்வின் திருத்தூதர்’ என்று கூறி முதல் இஸ்லாமியர் ஆனார் கதீஜா. அது மட்டுமல்ல, தனது செல்வம் அனைத்தையும் அண்ணலாருக்கு கதீஜா கொடுத்து இஸ்லாமிய மார்க்கத்தைப் பரப்ப உறுதுணையாக இருந்தார். சமூகத்தில் மதிப்புமிக்க அபூதாலிப்பின் பாதுகாப்பும் கதீஜாவின் செல்வப் பின்புலமும் ஆத்மார்த்தமான ஆதரவும் அறியாமையில் ஆழ்ந்திருந்த அரபிகளிடையே ஏகத்துவத்தைப் பரப்ப அண்ணலாருக்கு உறுதுணையாக இருந்தன. இறைவனின் திட்டமிடல்களில் இதுவும் ஒன்று.
(தொடரும்)
- தொடர்புக்கு: bharathiannar@gmail.com