

வீடு, நிலம், பணம், தங்கம் ஆகியவையே சிறந்த செல்வம் என்று கருதி அவற்றைச் சம்பாதிக்கப் போராடுகிறோம். ஆனால், ‘சமாதானமும் மன அமைதியுமே உண்மையான செல்வம்’ என்கிறது புனித விவிலியத்தின் யோபு புத்தகம். இதை இறைமகன் யேசு தனது மலைப்பொழிவு உரையில் தன்னைத் தேடிவந்த மக்களுக்கும் சொல்லிக்கொடுத்திருக்கிறார். அவர்: “சமாதானம் செய்துகொள்கிறவர்கள் பாக்கியவான்கள்; சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைத் தங்களுடையதாக மாற்றிக்கொள்வார்கள்” (மத்தேயு 5:5-9) என்று கூறினார்.
அதாவது, ‘எல்லோருடனும் சமாதானமாக இருக்க விரும்புகிறவர்கள் சாந்த குணமுள்ளவர்களாக இருப்பார்கள், மன அமைதியே அவர்கள் விரும்புகிற சிறந்த செல்வமாக இருக்கும். அமைதியாகவும் பதறாமலும் ஒரு செயலைச் செய்யும் யாரும் அதை முழுமையாகவும் தவறின்றியும் செய்ய முடியும்.
அப்படிப்பட்ட மனிதர்கள், வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்களாக இருப்பார்கள்’ என்பதையே யேசு எடுத்துக் கூறியிருக்கிறார். ஆக, மனித வாழ்க்கையை நடத்துவதற்கான வீடு, நிலம், பணம், தங்கம் ஆகியவை சமாதானத்தை விரும்பி அமைதியான வழியில் உழைக்கிறவர்களைத் தானே வந்தடையும் என்பதை அறிந்துகொள்ளலாம்.
‘யேசு சொல்லிக்கொடுத்த சமாதானத்தை, போட்டியும் பொறாமையும் சச்சரவுகளும் நிறைந்த இந்தக் காலத்தில் கடைப்பிடிக்க முடியுமா?’ என்று நினைக்கலாம். ஆனால், நம்மிடம் இருக்கும் முரண்பாடுகளைக் களைந்து வெளியேற்றுவதன் மூலம் மிக எளிதாகக் கடைப்பிடிக்க முடியும். முரண்பாடுகளைக் களைந்தெறிந்த மனம் அமைதியாக இருக்கும். அதனால்தான், ‘மன அமைதி உடல் நலம் தரும்’ என்று நீதிமொழிகள் (14:30) புத்தகம் கூறுகிறது.
கோபப்படுகிறவர்களுக்கும் பகைமை பாராட்டுகிறவர்களுக்கும் பக்கவாதம், மாரடைப்பு ஆகியன ஏற்படும் ஆபத்து அதிகமென மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. சரி, அமைதியான சுபாவம் கொண்டவர்களாக நாம் மாறிவிடுகிறோம். ஆனால், நம்மைச் சுற்றி அநீதி நடக்கும்போதும் அந்த அமைதியைத் தொடரவேண்டுமா, அப்போது பொங்கியெழ வேண்டாமா என்று கேட்கிறீர்களா?
அந்தக் கவலையே உங்களுக்கு வேண்டாம். ஏனென்றால், ‘நீதியை நான் நேசிக்கிறேன்; அநீதியாளரை எவ்வாறு தண்டிப்பேன் என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டாம்’ (ஏசாயா 61:8) என்று கடவுள் பைபிளின் வழியாகக் கூறுகிறார். மற்றொரு வசனம், ‘நியாயத்தையும் நீதியையும் நேசிக்கும்’ கடவுள் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தார்' (சங்கீதம் 33:5) என்று கூறுகிறது.
அதனால், உங்கள் அமைதியான மனநிலையைத் தக்க வைத்துக் கொள்ள, ‘தீமையை விட்டு விலகி, நன்மை செய்; சமாதானத்தைத் தேடி அதைத் தொடர்ந்துகொள்’ (சங்கீதம் 34:14) என்று கடவுள் கூறுவதாக பைபிள் சொல்கிறது.
கடவுளின் இந்த நீதி பரிபாலனத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால், ‘வாழ்க்கையில் மலை போன்ற சோதனைகள் வந்தாலும் நம்முடைய இந்தச் சமாதானத்தை யாராலும் குலைத்துப் போட முடியாது’ என்று (பிலிப்பியர் 4:6-7) சொல்கிறது. ஆக, ‘சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்’ என்று யேசு சொன்ன வார்த்தைகள் இந்தக் காலத்துக்கும் பொருந்தக்கூடியவை என்பதையே பைபிள் எடுத்துக்காட்டுகிறது.