மூன்று கோலங்களில் அருளும் அழகு மன்னார்!

மூன்று கோலங்களில் அருளும் அழகு மன்னார்!
Updated on
4 min read

நம்பிக்கையோடும் பக்தியோடும் தன்னைச் சரணடைந்த பக்தர்களுக்கு நலம் யாவும் அருளும் நாராயணன் எழுந்தருளியுள்ள தலம் மன்னார்கோவில். இத்தலத்தின் ஆதிகாலப் பெயர் வேதபுரி. பொ.ஆ. (கி.பி) 10ஆம் நூற்றாண்டில் சோழர் ஆட்சிக் காலத்தில் வேதங்களைக் கற்றுத் தெளிந்த அந்தணர்களுக்கு இவ்வூர் தானமளிக்கப்பட்டது. எனவே, அந்நாளில் ராஜராஜ சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்ட இவ்வூருக்குத் தெற்கே, மும்முடிச் சோழப் பேராறு எனப்படும் தாமிரபரணியும் வடக்கே ராஜராஜப் பேராறு என்கிற கடனா நதியும் இருகரை தொட்டு ஓடி இப்பகுதியை வளமாக்குகின்றன.

ஆதியில் இந்த நதித் தீரத்தில் பிருகு முனிவரும் மார்க்கண்டேய மகரிஷியும் விஷ்ணுவின் திவ்ய தரிசனம் வேண்டி பல காலம் தவம் செய்தனர். அவர்களின் பக்தியை மெச்சி இத்தலத்தில் திருமால் அவர்களுக்குக் காட்சியளித்து அருள்புரிந்தார். இதனால் பரவசமடைந்த இருமுனிவர்களும் தேவி, பூதேவி சமேத வேதநாராயணப் பெருமாளை மூலிகைக் கலவை கொண்டு சிலையை உருவாக்கி, பிரதிஷ்டை செய்து, நாளும் வழிபட்டு வரலாயினர்.

ராஜேந்திர விண்ணகர்: பொ. ஆ. 1021இல் சேர மன்னன் ராஜசிம்மன் என்பவர் இச்சிலைகளை மூலவராக வைத்து, பாண்டிய நாட்டில் சோழர் கட்டிடக்கலைப் பாணியில் காண்போர் வியக்கும் வண்ணம் கற்றளி ஒன்றை எழுப்பினார். சோழனுடன் இருந்த நட்பின் அடிப்படையில் அதற்குச் சோழ மன்னனின் பெயரால் ‘ராஜேந்திர விண்ணகர்’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

மூலவர் விக்ரகங்கள், மூலிகைக்கலவை கொண்ட சிற்பங்கள் ஆதலால் தைலக்காப்பு அபிஷேகம் மட்டுமே தொன்று தொட்டு நடைபெற்றுவருகிறது. பிருகு முனிவரும் மார்க்கண்டேய மகரிஷியும் பெருமாளை பிரதிஷ்டை செய்து வழிபட்ட காரணத்தால், கருவறையில் இந்த இரு ரிஷிகளின் சிற்பங்களும் வணங்கிய நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

விஸ்வநாத குறடு: காலம் உருண்டோடியது பொ.ஆ.1558இல் நாயக்கர் ஆட்சியில் ‘விஸ்வநாத குறடு’ என்னும் உற்சவர் மண்டபம் கட்டப்பட்டு ராஜ கோபால சுவாமி, ஆண்டாள், கருடாழ்வார் ஆகியோரது உற்சவத் திருமேனிகள் உருவாக்கப்பட்டன. இந்த உற்சவர் ராஜகோபால சுவாமிக்கு ‘அழகிய மன்னார்’ என்கிற சிறப்புப் பெயர் உண்டு. எனவே, இந்தச் சுவாமியின் திருப்பெயரால் கோயிலுக்கும் ஊருக்கும் ‘மன்னார் கோவில்’ என்கிற பெயரே வழங்கப்படுகிறது.

குலசேகரரின் திருமொழி: சேர நாட்டின் திரு அஞ்சைக்களம் என்னும் திருத்தலத்தில் மன்னனாக ஆட்சி புரிந்தவர் குலசேகரப் பெருமாள். நல்லாட்சி நடத்தி மக்களின் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவராக விளங்கினார். ஆனால், ஒருகட்டத்தில் மெய்ஞ்ஞான அறிவு மிகுந்து அரசப் பதவியை விட்டு, துறவறம் பூண்டு தலயாத்திரையாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தீவிர விஷ்ணு பக்தரான குலசேகரர் ஸ்ரீரங்கம், திருப்பதி, திருவித்வக்கோடு, சிதம்பரம் ஆகிய திருத்தலங்களுக்குச் சென்று பாசுரங்கள் பாடி மகிழ்ந்தார். நாலாயிர திவ்யப்பிரபந்தப் பாடல்களில் குலசேகரப் பெருமாள் பாடிய பாசுரங்கள், பெருமாள் திருமொழி எனப்படும்.

முக்தித் தலம்: வடமொழியிலும் பாண்டித்தியம் பெற்று விளங்கிய இவர் எழுதிய நூலுக்கு ‘முகுந்த மாலை’ என்பதுபெயர். தேசாந்திரியாகத் தலங்கள் தோறும் சென்று பரந்தாமனைச் சேவித்தும் பாடியும் மகிழ்ந்த குலசேகரர் ஒருகட்டத்தில் மன்னார் கோவிலுக்கு வந்தார். அங்கே வேத நாராயணப்பெருமாளின் திவ்ய சொரூபத்தில் மயங்கி அவரது திருவடிகளை நாளும் சேவித்து அவருக்குத் தொண்டு செய்வதில் பெரிதும் விருப்பம் கொண்டு அவ்வூரிலேயே தங்கினார்.

முழுமுதற் கடவுளாக அந்தத் தாமோதரனையே அவர் உள்ளத்தில் பதிய வைத்ததால் காலப்போக்கில் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராக ‘குலசேகர ஆழ்வார்’ என மதிக்கப்பட்டார். தன் இறுதி மூச்சையும் இறை சிந்தையிலே வைத்து ஒரு தை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பரமபதம் அடைந்தார். எனவேதான் இத்தலம் பிறவிப்பயன் நீக்கி அருளும் முக்தித்தலமாக விளங்குகிறது.

பொ.ஆ.1209இல் சடையவர்மன் குலசேகரப் பாண்டியன் ஆட்சிக் காலத்தில் சேர நாட்டைச் சேர்ந்த வாசுதேவன் கேசவன் என்கிற செண்டலங்காரதாசர் என்னும் வைணவர் இத்திருக்கோயில் வடக்குச் சுற்றில் குலசேகர ஆழ்வாருக்குத் தனிச் சந்நிதி ஒன்றைக் கட்டி வைத்தார். அதோடு, ஊருக்குள் பெரிய குளம் ஒன்றை வெட்டி விவசாயம் செழிக்கப் பல திட்டங்களைச் செயல்படுத்தினார்.

இங்கே தை மாதம் திருவாதிரை நாளில் குலசேகர ஆழ்வாருக்குத் திருத்தேர் வைபவமும் மாசி புனர்பூச நாளில் கோயிலுக்கு எதிரே உள்ள தெப்பக்குளத்தில் குலசேகர ஆழ்வாருக்குத் தெப்ப உற்சவமும் நடைபெறுகின்றன.

இக்கோயிலுக்குச் சேரமன்னன் ராஜசிம்மன், அவனுடைய மகன் ராஜராஜ ராமன் அரங்கன், சோழ மன்னன் சடையவர்மன் சுந்தர சோழன், பாண்டிய மன்னர்கள் சடையவர்மன் குலசேகர பாண்டியன், மாறவர்மன் சுந்தர பாண்டியன், சடையவர்மன் வீரபாண்டியன், விஜயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள் ஆகியோர் நித்ய பூஜை பணிகள் மற்றும் விழாக்களுக்கான பல தர்மங்களை அளித்துள்ளனர்.

கிழக்குப் பார்த்த வண்ணம் சாலக்கோபுர வாசலுடன் கோயில் அமைந்துள்ளது. ஆறு படிகள் மேலே ஏறிச் சென்றால், பிரம்மாண்டமான வசந்த மண்டபம் காணப்படுகிறது. இம்மண்டப மையத்தில் கலைநயமிக்க அலங்கார மண்டபம் உள்ளது. இம்மண்டபத் திருப்பணி செய்த நாயக்க மன்னர்களின் உருவச் சிலைகள் மண்டபத் தூண்களில் காணப்படுகின்றன.

இம்மண்டபத்தை அடுத்து ஐந்து நிலை ராஜகோபுர வாசல் உள்ளது. இக்கோபுர நுழைவாயில் அதிஷ்டானம், கருவறை அதிஷ்டானம் முழுவதும் அதியற்புதச் சிற்பங்கள் உள்ளன. சோழர் காலப் பணியில் அமைந்து இச்சிற்பங்கள் காண்போரை மயக்கும் பேரழகு வாய்ந்தவை.

இது போன்ற சிற்பத் தொகுதியைச் சோழ நாட்டுக் கோயில்களில் மட்டுமே பார்க்க முடியும். கோபுரவாசல் தாண்டியதும் விரிந்து பரந்த வெளிச்சுற்றும் கொடிமர மண்டபமும் உள்ளன. பலிபீடம், செப்புத்தகடு போர்த்திய கொடிமரம், கருடாழ்வாழ்வார் சந்நிதி ஆகியவை பிரம்மாண்டமாக அமைந்துள்ளன.

இம்மண்டபத்தின் வடப்புறம் இவ்வூரில் அவதரித்த மணவாள மாமுனிகளுக்கு ஒரு சந்நிதியும் அருகே ராமானுஜருக்கு ஒரு சந்நிதியும் உள்ளன. அடுத்து மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்கிற அமைப்பில் மூலவர் சந்நிதி அமைந்துள்ளது.

மகாமண்டப வடப்புறம் ‘விஸ்வநாதக் குறடு’ எனப்படும் உற்சவர் மண்டபம் உள்ளது. அதில் ராஜகோபால சுவாமி, ஆண்டாள், கருடாழ்வார் விக்ரகங்கள் உள்ளன. அர்த்த மண்டப வாசலில் துவாரபாலகர் சிற்பங்கள் காட்சியளிக்கின்றன.

கருவறையில் வேதநாராயணப் பெருமாள்நின்ற திருக்கோலமாகவும் அவருக்குமேல் அஷ்டாங்க விமானத்தின் நடுத்தளத்தில்அமர்ந்த கோலத்திலும் மேல் தளத்தில் சயனக்கோலத்திலும் எழுந்தருளியுள்ளார். ஆதியில் வேதபுரி என அழைக்கப்பட்ட இத்தலத்தில் இன்றும் வேதங்கள் ஒலித்துக் கொண்டிருப்பதால் இங்குள்ள வேதநாராயணப் பெருமாளை வழிபட்டால் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்கின்றனர்.

குறிப்பாகக் கல்வியில் சிறந்து விளங்கவும் வாழ்வில் சோதனையான கட்டங்கள் வரும் சமயத்திலும் இத்தலத்து நாரணனை நம்பிக்கையோடு வணங்குகின்றனர். அதனால், வேண்டியது வேண்டியபடி நலமும் வளமும் கைமேல் பலனாய் கிடைக்கின்றன.

தினமும் வைகானஸ ஆகம முறைப்படி நான்கு கால பூஜை நடைபெறுகிறது. உள்சுற்று முழுவதும் திருமாளிகை அமைப்பில் எழிலான மண்டபமாகக் கட்டப்பட்டுள்ளது. தெற்குச் சுற்றில் யோக நரசிம்மர், தசாவதாரத் திருமேனிகள், வேதவல்லித் தாயார் சந்நிதி, வடக்குச் சுற்றில் புவனவல்லித் தாயார் சந்நிதி ஆகியவை உள்ளன.

வடக்குச் சுற்றில் பரமபத வாசல் உள்ளது. இவ்வாசல் கதவு சேர நாட்டுப் பாணியில் எழிலான சிற்பங்கள் நிறைந்து காணப்படுகிறது. வெளிச் சுற்றில் உள்ள நந்தவனத்தில் வாசமலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. குலசேகர ஆழ்வாரின் சந்நிதிக்கு அருகே திருவாதிரை மண்டபம் உள்ளது.

தலவிருட்சம் செண்பகமரம். குலசேகர ஆழ்வார் வாழ்ந்த காலத்தில் தினமும் அவர் பூஜை செய்து மகிழ்ந்த ராமர், சீதா தேவி, லட்சுமணர், அனுமன் ஆகிய விக்ரகங்கள் இப்போதும் கோயிலில் நித்யபூஜைகளுடன் பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட்டுவருகின்றன.

ஆவணித் திருவோணத்தில் பவித்ர உற்வசமும், புரட்டாசி சனிக்கிழமைகளில் கருட சேவை, கார்த்திகை மகாதீபம், வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீராமநவமி, ஆடிப்பூரம் ஆகிய உற்சவங்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.

வாழ்வில் துயர் நீங்கி நலமும் வளமும் பெற்று மகிழ்வுடன் வாழ மன்னார்கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்று மாலவனைத் தரிசித்து மகிழலாம்!

அமைவிடம்: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் - மன்னார்கோவிலுக்கு மினி பேருந்து வசதி நாள் முழுவதும் உள்ளது. நகரப் பேருந்தும் உண்டு. தரிசன நேரம் காலை 7.00 மணி முதல் பகல் 10.00 மணி; மாலை 5 மணி முதல் 8 மணி.

- vganesanapk2023@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in