காமனின் தொழிலைச் செய்த அம்பிகை 

காமனின் தொழிலைச் செய்த அம்பிகை 
Updated on
2 min read

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஸ்ரீ காமகலா காமேஸ்வரர் ஆலயம், ஈசனின் திருவிளையாடலையும் அம்பிகையின் அவதாரத்தையும் பறைசாற்றுகிறது. ஒரு முறை தட்சன் ஒரு யாகம் செய்தான். அம்பிகை தட்சனின் மகளாகப் பிறந்து ஈசனின் மனைவியாக இருந்தும், தட்சன் தன் மருமகனையும் மகளையும் யாகத்துக்கு அழைக்கவில்லை. அந்த யாகத்துக்குப் போக வேண்டும் என்று ஈசனிடம் தாட்சாயணி மன்றாடினாள். அதற்கு அவர் உடன்படவில்லை. தன் கணவனின் அனுமதியில்லாமல் தனியாக அந்த யாகத்துக்கு அம்பிகை சென்றாள்.

தட்சன் தன் மகளைத் தகுந்த முறையில் வரவேற்காமல் அவமதித்தான். இதைக் கண்ட அம்பிகை கோபம் கொண்டாள். ஈசனும் வெகுண்டெழுந்து வீரபத்திரரைத் தோற்றுவித்து யாகத்தை அழித்து, தட்சனின் ஆணவத்தை அடக்கினார். ஈசனின் திருவிளையாடல்கள் பல. அதில் இதுவும் ஒன்று. பர்வதராஜனின் மகளாக அம்பிகை அவதரிக்க வேண்டும் என்பதற்காகவும் சூரனை அழிக்க ஒரு மகளைத் தோற்றுவிக்கவும் இந்தத் திருவிளையாடல் நடத்தப்பட்டது.

மாணிக்கவாசகர் தமது ‘திருச்சாழல்’ என்னும் பதிகத்தில், தட்சனுக்கு ஏற்பட்ட அழிவை,‘தக்கனையும் எச்சனையுந் தலையறுத்துத் தேவர்கணம் தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ’ என்று குறிப்பிடுகிறார்.

மன்மதனை அழித்த நெற்றிக்கண்: அதன்பின், அம்பிகை இமவானின் மகளாக அவதரித்தார். ஈசன் தென்திசை நோக்கிக் கல்லால மரத்தடியில் தன்னுடைய நயனங்களை மூடி யோகத்தில் அமர்ந்தார். சனகாதி முனிவர்களுக்கு மௌனமாக அமர்ந்தே உபதேசம் செய்தார். ஈசன் தட்சிணாமூர்த்தியாக அமர்ந்ததால் ‘அழித்தல்’ தொழிலைச் செய்ய யாருமில்லை. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களில் மூன்றாவது நிலை தடைபட்டது. இதனால், தேவர்கள் கவலையடைந்தனர்.

இந்தச் சமயத்தில் எண்ணற்ற வரங்களைப் பெற்ற சூரபத்மனின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. மும்மூர்த்திகளில் ஈசன் ஒருவரால்தான் இதற்கு முடிவுகட்ட முடியும் என்று தேவர்களுக்குத் தோன்றியது. தியான நிலையில் இருக்கும் ஈசனை, இயல்பு நிலைக்குக் கொண்டவர வேண்டும். அதை எப்படிச் செய்வது, யார் செய்வது என்று சிந்தித்து முடிவில் மன்மதனை அணுகினர். ஈசனின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால் மன்மதன் அதற்கு உடன்படவில்லை. தேவர்களின் கடும் முயற்சிக்குப் பிறகு மன்மதன் அதற்கு இசைந்தான்.

அம்பிகையின் அவதாரம்: காமனாகிய மன்மதன் கரும்புவில்லால் ஐந்து மலர்கள் (மல்லிகை, நீலோற்பலம், தாமரை, மா, அசோகம்) கொண்டு ஈசன் மேல் ஏவினான். அடுத்த நொடியே ஈசனின் நெற்றிக்கண் கோபத்தில் திறந்தது. மன்மதன் எதற்குப் பயந்தானோ அது நடந்துவிட்டது. ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து வந்த அக்னிப் பிழம்பால் மன்மதன் எரிந்து சாம்பலானான்.

தேவர்கள் பயந்து நடுங்கினர். ஈசனிடம் செல்ல எல்லாரும் பயந்தபோது ரதி மட்டும் தன்னுடைய மாங்கல்யம் பறிபோய்விட்டதே என்று ஈசனிடம் அழுது புலம்பினாள். ரதியின் கண்களுக்கு மட்டும் மன்மதன் தெரிவான் என்று ஈசன் தெளிவுபடுத்திய பிறகுதான், அதுவும் ஈசனின் திருவிளையாடல் என்று தேவர்களுக்குப் புரிந்தது. இந்த விளையாட்டு நடந்த சில நொடிகளில் மன்மதனின் தொழில் தடைபட்டது. அப்போது அம்பிகை காமாட்சியாகத் தோன்றி மன்மதனின் கரும்பு வில்லையும் மலர் பாணத்தையும் ஏற்று அந்தத் தொழிலைச் செய்ததாகப் புராணம் கூறுகிறது.

காமேஸ்வரன் - காமேஸ்வரி: காமனாகிய மன்மதனுக்குக் காலனாக ஆனதால் ஈசனுக்கு ‘காமகாலன்’ என்கிற பெயர் அமைந்தது. அம்பாள், மன்மதனின் தொழிலைச் செய்ததால், அவளுக்கு காமேஸ்வரி என்கிற பெயர் வழங்கலாயிற்று. சாஸ்திர ரீதியாக வரையப்பட்ட ஓவியங்களில் காமேஸ்வரன் உள்பட எல்லாரும் பெண் வடிவில் இருப்பார்கள்.

அம்பிகையின் கையில் அங்குசம், பாசம், கரும்புவில், மலர் பாணம் ஆகியவற்றை ஏந்தியிருப்பாள். சரஸ்வதியும் லட்சுமியும் அம்பிகைக்குச் சாமரம் வீசுவதுபோல் காட்டியிருப்பார்கள். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த காமேஸ்வரி, நாம் கேட்கும் வரங்களை அள்ளித் தரும் தெய்வமாகக் கருதப்படுகிறாள்.

ஆனால், திருவல்லிக்கேணியில் உள்ள கோயிலில் அம்பிகையை இந்த வடிவத்தில் காண முடியாது. ஈசன் லிங்க வடிவத்திலும் அம்பிகை நின்ற கோலத்தில் மற்ற கோயில்களில் உள்ள அம்பிகை போன்றே காட்சியளிக்கிறாள். புராணப் பெருமைகளையும் வரலாற்றுச் சிறப்புகளையும் பெற்ற இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் மன அமைதியும் கணவன் - மனைவிக்குள் ஒற்றுமையும் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்தக் கோயிலில் வருடம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள், விழாக்கள், உற்சவங்கள் நடைபெறுகின்றன. அவற்றுள் புரட்டாசியில் நடைபெறும் நவராத்திரி உற்சவம் விசேஷமானது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in