

அரசனா, ஆண்டவனா யார் பெரியவன் என்று இடக்கான ஒரு கேள்வியை எழுப்பி அவரை மடக்க நினைத்தார்கள் சிலர்.
“அரசனுக்கு உரியதை அரசனுக்குக் கொடுங்கள். ஆண்டவனுக்கு உரியதை ஆண்டவனுக்குத் தாருங்கள்” என்று யேசுபிரான் அன்று சொன்ன விடை இன்றைக்கும் பொருந்தும். அரசனுக்கு மட்டுமல்ல, ஆத்திகர் நாத்திகர் என்னும் இருதரப்பினருக்கும் அந்த வாக்கியம் மெத்தப் பொருந்தும்.
பணிவும் செயல்விளைவும்: இறைவன் உலகைப் படைத்தான் என்பது பணிவால் விளைந்த பார்வை. இறைவனே உலகானான் என்பது அறிவார்ந்த பார்வை. எது எப்படியோ, மனிதர்களைப் படைத்தது ஒரு மகாசக்தி. ஆனால், ஏற்றத் தாழ்வுகளை அது படைக்கவில்லை. வறுமைக்கும் வஞ்சனைக்கும் மனிதனே பொறுப்பு. சாதி, நிறம், பொருளாதாரம் போன்ற பேதங்களுக்கெல்லாம் மனிதனே காரணம். இறைவன் நீர்வளம், நிலவளம், தாவர வளம் போன்ற இயற்கைச் செல்வங்களுக்குக் காரணம்.
உணவு வகைகள், பயிர், பாசனம் இவையெல்லாம் மனிதனின் செயல்விளைவுகள். வியாபாரம், சாதி, மதம் இவை இறைவனிடமில்லை. மனிதனைத் தவிர மற்ற உயிரினங்களிடமும் இல்லை. வியாபாரமும் கொள்ளையும் குடிசையிலும் உண்டு, கோயிலிலும் உண்டு. அதற்கு இறைவன் எப்படிப் பொறுப்பாவான்? இவையெல்லாம் நம் அறிவு, குயுக்தி போன்றவற்றின் விளைவுகளே.
பகிர முடியாத அனுபவம் - ‘நம்புவதே வழி’ என்று பாரதி சொன்னது மனிதர்கள் தாங்கள் கண்டுகொள்ள வேண்டிய வழியேயன்றி, இறைவன் சொன்ன வழியன்று. இறை என்பது அப்பட்டமான சத்தியம். ஆனால், அது அந்தரங்க அனுபவம். பணம், துன்பம், இன்பம் இவற்றைப் பகிர்ந்துகொள்வது போல இறையைப் பகிர்ந்துகொள்ள வழியில்லை. அது நமக்கு மட்டுமே உண்மையான நம்முடைய அனுபவம். அது அனுபூதியாக வேண்டும். நீந்துவது அனுபவம். நீராவது அனுபூதி.
நம்முடைய செயல்களின் விளைவை இன்றில்லை எனினும் நாளை கட்டாயம் அனுபவித்தே தீருவோம் என்பதுதான் நமக்குக் கற்பிக்கப்பட்ட பாடம். இதற்கு மேல் இன்னொரு பாடத்தை பாரதி அநாயசமாகப் பாட்டில் சொல்கிறார், ‘பயன் கருதாமல் உழைக்கச் சொன்னாள். பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்’ என்று.
சலனமில்லாத அமைதி: உழைப்பு என்பது பிறருக்கு நன்மை செய்வது. அதற்குப் பயனாக எதையும் எதிர்பார்க்காமல் இருப்பதே மனிதப் பண்பின் உன்னதம். இந்த மனப்பான்மை நமக்கு வாய்க்கப் பெற்றால், நாம் எதற்கும் தலை கிறுகிறுத்துக் கிறங்க மாட்டோம். எதனாலும் துவண்டு போகவும் மாட்டோம். ‘கடலளவே கிடைத்தாலும் மயங்கமாட்டேன், அது கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன்’என்று கவியரசர் இதைத்தான் எளிதாகப் பாடலில் சொன்னார். ‘You must be unconditionally good. Then only, you can be called a human being,’ என்பார் என் குருநாதர்.
அப்படி வாழ்ந்தால், நீங்கள் எதை இறைவனின் மீது சுமத்துவீர்கள்? எதை நீங்கள் உங்களுடையது என்று ஏற்பீர்கள்? சரணெய்திய ஒருவன் சஞ்சலம் கொண்டால் அவன் சரணெய்தவில்லை என்றல்லவா பொருள்? எல்லாம் இறைவன் செயல் என்று முழுமையாக நம்புகிறவன் இன்பம் - துன்பம், வெற்றி - தோல்வி, வரவு - இழப்பு போன்ற இருமைகளால் சலனப்படாமல் அமைதியாக இருப்பான்.
ஏதேனும் ஒருவிதமாக, எப்போதும் பிறருக்கு உதவிசெய்து வாழ்வதற்காக வழங்கப்பட்ட வாய்ப்பே இந்த வாழ்க்கை என்கிற உறுதியான நிலைப்பாட்டில் மிருதுவாக வாழ்வான். அவனுக்கு இறைவன் அந்நியமாக இருக்க வாய்ப்பே இல்லை. அவன் இறைவனைத் தேடுவதுமில்லை.
அவனுக்கு ஆத்திக நாத்திகப் பிரச்சினைகளில்லை. எப்போதும் சுவாசித்துக்கொண்டே இருப்பதால்தான் நாம் உயிர் வாழ்கிறோம். அதை நாம் எப்போதாவதுதான் ஆழமாக உணர்கிறோம். அவனோ தான் இறைவனுடன் வாழ்ந்துகொண்டிருப்பதை எப்போதும் உணர்ந்தவனாக இருக்கிறான்.
பகையும் உறவும்: நாம் உலக வாழ்வில் காண்கிற வேற்றுமைகள், ஏற்றத் தாழ்வுகள் எதற்கும் காரணங்கள் வெளியே இல்லை. நம்முடைய மனக் கோளாறுகளின் விளைவே அவை. நாம் கொள்கைகள், சித்தாந்தங்கள், ‘இஸ’ங்கள் என்று ஒருவருக்கொருவர் பிரிந்தும், பிளவுபட்டும், ஓயாமல் சண்டையிட்டும் அமைதியின்றி வாழ்வதெல்லாம் நம்முடைய மனப்பூசல்களின் விளைவேயாகும்.
இவனுக்கோ உள்ளே பகையில்லை. வெளியே உறவுமில்லை. தேவைகள் இல்லாதவனுக்குத் தேவைப்படாதவன் எவனும் இல்லை. இவனுக்குப் புன்னகையுண்டு. இவனிடம் இனிய சொற்களே உண்டு. பெயர் சொல்லிக் கூப்பிட்டால், ‘என்ன?’ என்று திரும்பித்தான் பார்க்கிறான். எதனாலும் பாதிக்கப்படாத இவன் கொம்பு முளைத்துத் திரிவதில்லை. நம் வீதியில் எல்லோரையும்விடச் சாதாரணனாக நடந்து செல்கிறான்.
உள்ளம் மிகநுண்மை, தம்பி
உண்மையும் அதுபோலே
கள்ளம் உள்ளேதான், தம்பி
கடவுளும் அதுபோலே
மாறாதே தெளிவு, தம்பி
மாயமும் அதுபோலே
கூறாதே கூறு, தம்பி
கும்ப முனிபோலே
வினாவில் விடைபோலே, தம்பி
விநாடி நொடிபோலே
கனாவில் முகம்போலே, தம்பி
கடவுளும் அதுபோலே
- என்று மென்மையாகப் பாடிக்கொண்டே செல்கிறான். அவன் தோளில் ஒரு சின்னத் துந்தனா தென்படலாம். அந்தத் தெருவின் முனையில் ஒரு வளைவு உண்டு. அதில் அவன் திரும்பி மறையும் போதும், அவன் பாடல் சற்று தொடர்ந்து ஒலிக்கத்தான் செய்கிறது. அவன் நம்மைத்தான் பார்க்கிறான் என்றும் அவன் நம்மைப் பார்ப்பதே இல்லையென்றும் நம் எல்லாருக்கும் தோன்றுகிறது. அவன் கண்களுக்குக் கடவுள்தான் தெரிகிறான். நம் கண்களுக்கு அவனே கடவுளாகத் தெரிகிறான்.
(தரிசனம் நிகழும்)
- tavenkateswaran@gmail.com