

ஆதிசங்கரர் அருளிய சுலோகம் காலம் காலமாக மகிஷாசுர மர்தினியான அம்பிகையின் வீரத்தை, கருணையை, தீயதை அழித்து நன்மையை உலகுக்கு வழங்கும் பாங்கை வெளிப்படுத்தி வருகின்றது.
அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விச்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி
பூரிகுடும்பினி பூரிக்ருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
- என்னும் இந்தச் சுலோகம், அரிய பெரிய காரியங்களை எல்லாம் சாதிப்பவளே, விந்திய மலையில் வீற்றிருப்பவளே என்றெல்லாம் அம்பிகையின் சக்தியை, பராக்கிரமத்தை வார்த்தைக்கு வார்த்தை விவரிக்கிறது. இந்தச் சுலோகத்தை வாழையடி வாழையாக நாம் எல்லோரும் இயல்பாகப் பாடும் அதே மெட்டிலேயே பிரதான குரலில் மிகவும் பொருத்தமான ஸ்ருதி அளவில் பாடியிருக்கிறார் சௌரபா. சில இடங்களில் ராம் பிரகாஷின் குரலும் சேர்ந்து கொள்கிறது. சில இடங்களில் சமர்த்தன் சொல்லும் ஜதிக் கோவைகளும் புதிய அனுபவத்தைத் தருகின்றன.
இந்தியாவின் எந்தப் பகுதியில் இருக்கும் மக்களுக்கும் தெரிந்த பாடலுக்கு முற்றிலும் புதிதான ஓர் இசைப் பூச்சைக் கொடுத்து இந்த காணொளியை ஸ்டிரிங்க்ஸ் என்டர்டெயின்மென்டுக்காக இசை யமைத்து உருவாக்கியிருப்பவர் நிகிலேஷ், தேஜஸ் வள்ளாள். தேஜஸ் வள்ளாளின் கிதார், கௌஷிக்கின் பாஸ் கிதார், ஜோயலின் டிரம்ஸ், சமர்த்தனின் தபேலா, வருண் ராவின் புல்லாங்குழல் ஆகியவற்றின் கூட்டிசை நம் காதுகளுக்கு வாத்திய விருந்தை அளிக்கின்றன.
சக்தியை மையப்படுத்திய இந்த சுலோகப் பாட்டுக்கான காட்சிகளும் ரசனையைத் தூண்டும் விதத்தில் படமாக்கப்பட்டிருக்கின்றன. விளிம்பு நிலை மக்கள் முதல் சவாலான வேலைகளைச் செய்யும் பெண்கள், விளையாட்டில் முத்திரை பதிக்கும் பெண்கள் என பெரும்பாலும் பெண் சக்தியை மையப்படுத்தி காட்சிகளைத் தொகுத்திருப்பதில் மலைமகள் மட்டுமல்ல இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு பெண்ணுமே பெருமை வாய்ந்தவள்தான் என்பதையே சங்கரரின் ஸ்லோகம் மானசீகமாக அறிவிப்பதை உணர்த்துகிறது இந்தக் காணொளிப் பாடல்.
காணொளியைக் காண: https://shorturl.at/eOZ39