

அண்ணல் நபியின் வியாபாரத் திறமை, நாணயம் ஆகியவற்றைத் தன் உறவினர் மூலம் கேட்டறிந்த கதீஜா, தனது வாணிபப் பொருள்களை சிரியாவுக்கு எடுத்துச்சென்று வியாபாரம் செய்ய அண்ணல் நபிக்குச் சம்மதமா என்பதைக் கேட்டுவர ஆளனுப்பினார். நபிகள் தனது வளர்ப்புத் தந்தை அபூதாலிப்புடன் கலந்து ஆலோசித்த பிறகு, கதீஜாவின் வியாபாரத்தில் பங்கேற்க சம்மதம் தெரிவித்தார்.
“இருபத்து ஐந்தாவது வயதில் கதீஜாவுக்காக (ரலி) மய்சரா என்கிற அடிமையுடன் சிரிய தேசம் சென்று நபி (ஸல்) வியாபாரம் செய்தார். மற்ற வணிகர்களுக்குக் கொடுத்து வந்ததைவிட சிறப்பான பங்கை (கூலி அல்ல) கதீஜா நபிகளாருக்குக் கொடுத்தார். அந்த வகையில் கதீஜாவின் வியாபாரப் பங்குதாரராக நபி மாறினார். இதில் நபிகளாரின் வியாபார நுணுக்கம் வெளிப்பட்டது.
மக்காவிலிருந்து கொண்டு செல்லும் பொருள்களை சிரியாவில் விற்பனை செய்த பின்னர், அந்தப் பணத்தில் சிரியாவிலிருந்து பொருள்கள் வாங்கி வந்து மக்காவில் விற்பனை செய்வார்கள். இதனால் நபி (ஸல்) அப்போதே இரட்டை லாபம் சம்பாதித்தார்கள்.” (ப.63, செல்வந்தர் நபிகள் நாயகம் (ஸல்). அண்ணல் நபியின் வாணிபத் திறமையை வியந்து, தான் வாக்களித்த தொகைக்கு அதிகமாகவே அவர்களுக்கு அளித்தார் கதீஜா. கதீஜாவின் அடிமையான மய்சரா, அண்ணல் நபி பற்றி கூறிய பெருமைகள், கதீஜாவின் மனதில் அவரைப் பற்றிய மதிப்பை இன்னும் அதிகமாக்கின.
திருமணம்: செல்வந்தர் பலர் தன்னை மணமுடிக்க அணுகியபோதும் அவர்களைத் தவிர்த்த கதீஜா, அண்ணல் நபியைத் தனது வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொள்ள எண்ணினார். தாய், தந்தை இல்லாத ஏழையை மணமுடிக்கும் முடிவை உறவினர் எவ்வாறு கருதுவார்கள் என்கிற தயக்கம் ஒருபுறம் இருந்தாலும், அண்ணல் நபியை மணந்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் கதீஜா தீர்க்கமாக இருந்தார். தனது பணிப்பெண் நஃபீஸா பின்த் முன்யா மூலமாக அண்ணல் நபியிடம் தனது எண்ணத்தைக் கூறியனுப்பினார்.
வர்த்தக முறையில் கதீஜாவின் மாண்பினை அறிந்திருந்த அண்ணல் நபி, தனது வளர்ப்புத் தந்தை அபூதாலிபிடம் நஃபீஸா கொண்டு வந்த செய்தியைக் கூறினார். அபூதாலீபும் திருமணத்திற்கு இசைவு தெரிவித்தார். திருமணத்தின்போது அண்ணலுக்கு வயது 25. கதீஜாவுக்கு 40 வயது. மேலும் கதீஜா, மெக்காவில் வாழும் செல்வந்தர்களில் குறிப்பிடத்தக்கவர்.
ஆனால் அண்ணலோ பெரிய குடும்பமும் சிறிய வருவாயும் கொண்டவர். எனினும் இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் இத்திருமணத்திற்குத் தடையாக இருக்கவில்லை. அண்ணலும் கதீஜாவும் எந்த ஏற்றத்தாழ்வையும் தங்களுக்குள் காணவில்லை. அவ்வுறவு இறைவனால் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்கு இரு குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்தனர்.
நகரின் முக்கிய நபர்கள் முன்னிலையில் திருமணம் நிகழ்ந்தது. மணமகனின் சார்பாக அபூதாலிப் எழுந்து ஏக இறைவனை வணங்கித் தனது சகோதரனின் மகன் முஹம்மது (ஸல்) பற்றி நல்வார்த்தைகள் பல கூறி மணப்பெண்ணுக்கு 500 தங்க நாணயங்களையும் 20 ஒட்டகங்களையும் மஹராகக் கொடுத்து திருமண பந்தத்தில் இருவரையும் இணைத்து வாழ்த்தினார்.
அவரைத் தொடர்ந்து, சபையில் எழுந்த கதீஜாவின் ஒன்றுவிட்ட சகோதரர் வரக்கா இப்னு நவ்ஃபல் (பின்னாளில் அண்ணல் நபியை இறைத்தூதர் என கதீஜாவிடம் தெளிவுபடுத்தியவர்) அபூதாலிபை வழிமொழிந்து கதீஜாவை அண்ணலுக்கு வாழ்க்கைத் துணையாக்கி தனது உரையினை நிறைவுசெய்தார்.
அண்ணலுக்குப் பாலூட்டி வளர்த்த செவிலித்தாய் ஹலீமாவும் திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். அவரைக் கெளரவிக்கும் விதமாக அவருக்கு 40 ஆடுகளையும் ஒரு ஒட்டகத்தையும் பரிசுப்பொருட்களையும் அண்ணலார் கொடுத்தனுப்பினார். திருமணம் முடிந்த பின், தங்களுக்கிடையே பொருளாதாரரீதியில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுவிடக் கூடாது என முடிவுசெய்து கதீஜா, தனது சொத்துக் களையும் அடிமைகளையும் அண்ணலாருக்கு எழுதிவைத்தார் என வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கி றார்கள். அண்ணலார் தனக்கு அளிக்கப்பட்ட அடிமைகள் அனைவரையும் விடுதலை செய்தார். ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தார்.
தன்னை வளர்த்த தந்தை அபூதாலிபின் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டார். அவரது புதல்வர்களுள் ஒருவரான அலியைத் தனது வளர்ப்பு மகனாக வளர்த்துவந்தார். மேலும், தனது மனைவியின் செல்வச்செழிப்பில் வாழாமல் வெளிநாட்டு வர்த்தகம் செய்ததோடு மெக்காவில் தானிய வியாபாரத்தையும் தொடங்கினார்.
அவரது வர்த்தக பங்குதாரர் கைஸ் இப்னு ஸைப் அண்ணலாரைப் பற்றி கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்: “அவர் வெளிநாடு சென்று திரும்பும்போது தன் சவுகரியத்தைக் கருதாது தன் பங்காளிகளுக்கு உரிய கணக்கு வழக்குகளைத் தீர்த்துக்கொடுத்துவிட்டே வீட்டுக்குச் செல்வார்.” (ப.97, இறைத்தூதர் முஹம்மத்).
அண்ணலாருக்கும் கதீஜாவுக்கும் இல்லற வாழ்வின் பயனாக ஆறு குழந்தைகள் பிறந்தனர். காஸிம், அப்துல்லாஹ் என்னும் இரண்டு ஆண் குழந்தைகளும் ஜைனப், ருகையா, உம்மு குல்தூம், ஃபாத்திமா ஆகிய நான்கு பெண் குழந்தைகளும் பிறந்தனர். ஆண் மக்கள் இருவரும் குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டனர்.
பெண் குழந்தைகளில் முதல் மூவரும் அண்ணலாரின் காலத்திலேயே இயற்கை எய்திவிட்டனர். நபிகளாருக்கு மிகவும் பிடித்தமான மகள் ஃபாத்திமா அவர் மறைந்த ஆறு மாதங் களுக்குப் பிறகு இறந்ததாகக் கருதப்படுகிறது. கதீஜா இறக்கும் வரை ஏறத்தாழ 25 ஆண்டுகள் அண்ணல் நபி வேறு திருமணம் செய்துகொள்ளவில்லை என்கிற செய்தியே அவர்களுக்கு இடையே இருந்த அன்பையும் காதலையும் வெளிப்படுத்த போதுமான சான்று!
(தொடரும்)
- தொடர்புக்கு: bharathiannar@gmail.com