

சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்னர், இஸ்ரவேல் நாட்டை சாலமோன் என்கிற ராஜா ஆண்டுவந்தார். ஒரு நாள் கடவுள் அவரின் கனவில் தோன்றி, “நீ விரும்புகிற வரத்தை என்னிடத்தில் கேள், அதை உனக்குத் தருவேன்” என்றார். உடனே சாலமோன், “உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று வரையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்” என்று வேண்டிக்கொண்டார்.
சாலமோன் இப்படியொரு வரத்தைக் கேட்டதில் கடவுளின் கருணை உள்ளம் மகிழ்ந்தது. கடவுள், “நீ உனக்கு நீண்ட ஆயுளைக் கேளாமலும் ஐசுவரியத்தைக் கேளாமலும் உன் பகைவரை வெற்றிகொள்ளும் வரத்தைக் கேளாமலும் நீ நியாயம் விசாரிக்கிறதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு வேண்டிக்கொண்டபடியால், உன் வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்.
இதிலே உனக்குச் சரியானவன் உனக்கு முன்னும் இருந்ததில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப் பின் எழும்புவதுமில்லை” என்று சொன்னார்.
அதனால், அந்நாள்களில் இருந்த ராஜாக்களுக்குள் சாலமோன் மிகவும் புத்திக்கூர்மை உள்ளவராகவும் ஞானமுள்ள ராஜாவாகவும் திகழ்ந்தார். இவரது ஆட்சியின் கீழ் ஜனங்களை நீதியாக நியாய விசாரணை செய்து, ஒருவருக்கு அடுத்தவரிடம் இருந்த பிரச்சினையை நியாயமாக விசாரித்துத் தீர்ப்பு வழங்கினார். தன்னிடம் வந்த மிகவும் சிக்கலான வழக்குகளுக்கும் கூட ஞானமாய் சரியான தீர்ப்பு வழங்கினார்.
ஒருமுறை இரண்டு பெண்கள் ராஜாவிடம் ஒரு வழக்கைக் கொண்டுவந்தார்கள். அவர்களில் ஒருவர், “என் ஆண்டவனே, நானும் இந்தப் பெண்ணும் ஒரே வீட்டிலே குடியிருக்கிறோம். நான் இவளோடு வீட்டிலிருக்கையில் ஆண் பிள்ளை பெற்றேன். நான் பிள்ளை பெற்ற மூன்றாம் நாளிலேயே, இவளும் ஒரு ஆண் பிள்ளையைப் பெற்றாள். நாங்கள் இருவரும் ஒரே வீட்டில் இருந்தோம், எங்கள் இருவரையும் தவிர வீட்டுக்குள்ளே வேறொருவரும் இல்லை.
இரவு தூக்கத்தில் இவள் தன் பிள்ளையின்மேல் புரண்டு படுத்ததினால் அது செத்துப்போயிற்று. அப்போது நான் தூங்குகையில் இவள் நடு இரவில் எழுந்து, என் பக்கத்திலே கிடக்கிற என் பிள்ளையை எடுத்துக்கொண்டு, செத்த தன் பிள்ளையை எடுத்து, என் அருகில் போட்டுவிட்டாள். என் பிள்ளைக்குப் பால்கொடுக்க நான் அதிகாலையில் எழுந்தபோது, அது செத்துக் கிடந்தது. பொழுது விடிந்தபின் நான் அதை உற்றுப்பார்க்கும்போது, அது நான் பெற்ற பிள்ளை அல்லவென்று கண்டேன்” என்றாள்.
அதற்கு இன்னொரு பெண், “அப்படியல்ல. உயிரோடிருப்பது என் பிள்ளை, செத்தது உன் பிள்ளை” என்றாள்.
முதல் பெண்ணோ, “இல்லை, செத்தது உன் பிள்ளை, உயிரோடிருப்பது என் பிள்ளை” என்றாள். இப்படி ராஜாவுக்கு முன்பாக இருவரும் வாதாடினார்கள்.
நன்கு யோசித்த சாலமோன் ராஜா, “ஒரு வாளைக் கொண்டு வாருங்கள்” என்றார். உடவே சேவகர் ஒரு வாளை ராஜாவிடம் கொண்டுவந்தார். ராஜா, “உயிரோடிருக்கிற பிள்ளையை இரண்டாகப் பிளந்து, பாதியை இவளுக்கும் மறுபாதியை அவளுக்கும் கொடுங்கள்” என்றார்.
அப்போது உயிரோடிருக்கிற பிள்ளையின் தாய், தன் பிள்ளைக்காக அவள் இதயம் அடித்துக்கொண்டதால், ராஜாவிடம், “ஐயோ, என் ஆண்டவனே.. உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்ல வேண்டாம்; அதை அவளுக்கே கொடுத்துவிடும்” என்றாள்.
மற்றவள் “அது எனக்கும் வேண்டாம், உனக்கும் வேண்டாம், பிளந்து போடுங்கள்” என்றாள்.
அப்பொழுது ராஜா, “உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்ல வேண்டாம் என்று தடுத்த பெண்ணுக்கே குழந்தையைக் கொடுத்துவிடுங்கள்; அவளே அந்தக் குழந்தையின் உண்மையான தாய்” என்று தீர்ப்பளித்தார். ராஜா தீர்த்த இந்த நியாயத்தை மக்கள் எல்லாரும் கேள்விப்பட்டு, நியாயம் விசாரிக்கிறதற்குக் கடவுள் அருளின ஞானம் ராஜாவுக்கு உண்டென்று கண்டு, அவருக்குப் பயந்தார்கள்.
‘உங்களில் யாரேனும் குறைவான ஞானம் கொண்டிருப்பீர்கள் என்றால், கடவுளிடம் நம்பிக்கையுடன் வேண்டும்பொழுது அவர் ஞானத்தைக் கொடுப்பார். அவர் முகம் கோணாமல் தாராளமாக எல்லாருக்கும் கொடுப்பவர்’ என்று திருமறை போதிக்கிறது.
- merchikannan@gmail.com