

இமாச்சலப் பிரதேசம் என்றாலே மலைவாசஸ்தலங்கள், சாகச விளையாட்டுகள் என்று மட்டுமே பலர் நினைப்பர். ஆனால், உண்மையில் மற்றொரு விஷயத்திற்கும் அது மிக முக்கியமான பூமி. கடவுளின் பூமி. சக்தி பீடங்களின் தரிசனத்துக்கும், சிவனின் கோயில்களுக்கும் அது பிரபலமான இடம்.
இமாச்சலப் பிரதேசத்தில் பயணம் செய்வதற்கு உகந்த மாதங்கள் செப்டம்பர் முதல் ஜூன் வரை மட்டுமே. இந்த மாதங்களின் நடுவே வசந்த நவராத்திரி, சாரதா நவராத்திரி என இரண்டு நவராத்திரிகளைக் கண்டுகளித்துவிடலாம். இந்த மாதங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், கண்காட்சிகள் என அந்தப் பிரதேசமே அமர்க்களப்படும். சக்தி மிக்க பெண் தெய்வங்கள், தேவதாரு மரங்கள், தௌலாதார் மலைத் தொடர்கள் என நம்மை ஆச்சரியப்படுத்தும் விஷயங்கள் நிறைய அங்கே நமக்கு விருந்தளிக்கும்.
உலகின் பழைமையான கடோச் மன்னர்களின் கோட்டையை இன்றும் காங்கராவில் காணலாம். நாம் போக இருப்பது காங்கரா பள்ளத்தாக்குப் பகுதிக்குத்தான். இங்குள்ள சக்தி பீடங்கள் உலக அளவில் பேசப் படுபவை. பிரிஜேஸ்வரி, சாமுண்டா, பகலமுகி, குணால்புத்ரி, நைனாதேவி, ஜுவாலாமுகி, நாகர்கோடி, சிந்த்பூர்ணி, சீதலா, மாதா பீமா காளி ஆகியவை. இவற்றில் சில சக்தி பீடங்களைப் பற்றி விரிவாகவும் மேலும் சிலவற்றைப் பற்றி சுருக்கமாகவும் தெரிந்துகொள்வோம்.
ஸ்ரீவஜ்ரேஸ்வரி (பிரிஜேஸ்வரி) - காங்கரா கோட்டை அருகில் இது அமைந்துள்ளது. சதியின் இடது மார்பகம் விழுந்த இடம். ஒரு பக்தரின் கனவில் பிரத்யட்சமான தேவி, தான் இருக்கும் இடத்தைக் கூறி மறைந்தாள். அந்தப் பக்தரின் வழிநடத்தலில் குறிப்பிட்ட இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது, அங்கே ஒரு கல் (பிண்டி) கிடைத்தது. அதனைக் கொண்டுவந்து கோயிலில் பிரதிஷ்டை செய்தனர்.
சக்தியின் 51 பீடங்கள் பலவற்றிலும் கல் (பிண்டி) தான் அடிப்படை மூலவர். அதன் பிறகு, சக்தியின் வடிவத்தை அருகில் சிலையாகவும் செய்துவைப்பதுண்டு. பாண்டவர்களை இந்தக் கோயிலுடன் சம்பந்தப்படுத்தி இங்கிருக்கும் பக்தர்கள் குறிப்பிடுவதுண்டு. முகமதிய அரசர் ஒருவர் இந்தக் கோயிலைக் கொள்ளையடிக்க செய்த முயற்சியை தயான் பகத் என்னும் பக்தன் தன்னுடைய இன்னுயிரைத் துறந்து தடுத்திருக்கிறான். அந்தத் தியாகத்தைப் போற்றும் வகையில் அவரின் சிலை கோயில் வாசலில் உள்ளது.
வெள்ளை வண்ணப் பூச்சுடன் கூடிய சுவர்களைத் தாங்கியிருக்கும் கோயில், ஒடிசா பாணியில் எழுந்திருக்கும் பெரிய கோபுரம், இஸ்லாமியக் கட்டிடக் கலையை நினைவுபடுத்தும் தாழி விமானம், அரைவட்ட வளைவு கொண்ட விமானம் என நூதனமாகக் காட்சி தருகிறது.
கோயிலின் வாசலில் வெண் கலத்தால் செய்யப்பட்ட நான்கு சிங்கச் சிலைகள் நிற்கின்றன. பெரிய மணி, ஏராளமான பலகைகளில் கண்களைக் கவரும் ஓவியங்கள் சூழ, கருவறையில் கல் வடிவில் அம்மன் காட்சி தருகிறார். வெள்ளியில் செய்யப்பட்ட கஜலட்சுமி ஜொலிக்கிறார். இந்த அம்மனுக்குச் செய்யப்படும் வெண்ணெய்க் காப்பு அபிஷேகம் விசேஷம். மகிஷாசுரனை, சக்தி வதம் செய்தபோது, அம்மனுக்கும் காயம் பட்டதாம். அதனைக் குணப்படுத்திக்கொள்ள, வெண்ணெய் பூசினாளாம்.
1905இல் ஏற்பட்ட பூகம்பத்தில் கோயில் சேதமுற்றது. அதன் பின், அரசே கோயிலை மீண்டும் நிர்மாணித்தது. மகா சங்கராந்தி இங்கே கூடுதல் விசேஷமாக இருக்கும். அன்று அம்மனுக்குச் செய்யப்படும் வெண்ணெய்க் காப்பு பிரசித்தம். இந்தக் கோயில், காங்கரா ரயில் நிலையத்திலிருந்து இரண்டரை கி.மீ. தொலைவில் உள்ளது.
ஜுவாலாமுகி: இது காங்கராவிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. ஒரு இயற்கையான குகைக்குள் நிரந்தரச் சுடர் எரிகிறது. இதனை சதியின் ‘நாக்கு’ என வர்ணிக்கின்றனர். அதாவது சக்தியின் நாக்கு விழுந்த இடம் என்கின்றனர். இங்கே மொத்தம் ஏழு சுடர்கள் உள்ளன. இவற்றில் நிரந்தரச் சுடருக்குத் தினமும் ஐந்து முறை ஆரத்தி உண்டு. ஜுவாலாமுகி கோயில் இந்தோ-சீக்கிய பாணியில் எழுந்துள்ளது.
முழுவதும் பளபளப்பான கற்களில் கட்டப்பட்டுள்ளது. முதன்மைச் சந்நிதியின் மேலே தங்க முலாம் வேயப்பட்ட விமானம் உள்ளது. சந்நிதியின் உள்ளே வெள்ளி முலாம் பூசப்பட்ட விதானத்தில் அம்மனைப் பக்தர்கள் தரிசிக்கின்றனர். சதுரமாக அமைத்து, அதனுள் இந்தச் சுடர் தரிசனம்.
இங்கே மொத்தம் ஒன்பது சுடர்கள் உள்ளன. அவற்றின் பெயர்கள் மகாகாளி, அன்னபூர்ணா, சண்டி, ஹிங்லஜ், விந்தியவாசினி, மகாலட்சுமி, சரஸ்வதி, அம்பிகா மற்றும் அஞ்சனா. இங்கே ராப்ரி (பால் இனிப்பு) மற்றும் மிஸ்ரி முக்கிய பிரசாதங்கள்.
சாமுண்டாதேவி: பாலாம்பூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் பனர்கங்கா ஆற்றின் கரையில் உள்ளது இந்த ஆலயம். கருவறையில் அம்மன் சிவப்புப் புடவை போர்த்தி, முகத்தில் செந்தூரம் பூசி, கண்களில் ஆக்ரோஷம் பொங்கக் காட்சி தருகிறாள். இந்தப் பகுதி மக்களின் குலதெய்வம் இவள். இந்தப் பகுதியில் அக்கிரமங்களைப் புரிந்த சண்டா, முண்டா எனும் அரக்கர்களை வதம் செய்ததால், சாமுண்டா என அழைக்கப்படுகிறாள்.
நைனா தேவி: இந்த ஆலயமும் பிலாஸ்பூர் மாவட்டத்தில் மலைப் பகுதியில் உள்ளது. முதலில் பாதை. அதன்பின் கான்கிரீட் படிகளில் ஏறி மலையின் உச்சியை அடையவேண்டும். இந்த மலைப்பாதை கோயிலுக்குச் செல்ல ‘வின்ச்’ வசதியும் உண்டு. கருவறையின் உள்ளே இங்கும் கல் ரூபத்தில் நைனாதேவி காட்சி தருகிறாள். அன்னையின் கண்கள் மட்டுமே தரிசனத்தில் நாம் பார்க்க முடியும்.
கருவறையின் உள்ளே தங்கமுலாம் பூசப்பட்ட தகடுகள் பொருத்தப்பட்டு ஜொலிப்பாக இருக்கும். பிரமிட் வடிவில் உள் விமானம் இருக்கும். இந்த ஆலயத்தில் இரு நவராத்திரிகளும் விசேஷம். இங்குள்ள அரச மரத்தில் பக்தர்கள் மணிகளை வேண்டுதலாகக் கட்டுகின்றனர். இந்த ஆலயத்தில் நவராத்திரி விழாக்கள் விமரிசையாக நடக்கும். இந்த ஆலயம், சண்டிகரிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ளது.
பகலமுகி கோயில்: தேவியின் பத்து உருவங்களில் பகலமுகியும் ஒருவர். பக்தனின் தவறான சிந்தனைகளை, மாயைகளைப் போக்கிக் காப்பவள். இவளுக்கு பீதாம்பரமா என்கிற பெயரும் உண்டு. காங்கரா கோட்டை அருகில் பகலமுகி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சாதனா, சித்தி பூஜைகள் செய்யப்படுவது விசேஷம். துர்சக்திகளின் ஆதிக்கத்தை அடக்கும் சக்தி இவள்.
குணால்புத்ரி: காங்கரா மாவட்டத்தில் தௌலாதார் மலைத் தொடரில் குடிகொண்டிருக்கும் தேவி இவள். இது ஒரு பாறைக் கோயில். சுற்றிலும் தேயிலைத் தோட்டங்கள். கோயிலுக்குள்ளே இறைச் சிற்பங்கள் மிக அழகாக உள்ளன. இந்த இடத்தில் சதியின் மண்டை ஓடு விழுந்ததாகக் கூறப்படுகிறது. கோயிலுக்குள் இருக்கும் ஒரு பாறையின் மேல்பக்கம் எப்போதும் ஈரமாக இருக்கும். அந்த ஈரம் உலர்ந்தால், மழை பெய்யும் என்னும் நம்பிக்கை இந்தப் பகுதியில் இருக்கும் பக்தர்களிடம் இருக்கிறது.
இந்தக் கோயில்களைத் தவிர, காங்கரா பள்ளத்தாக்கில் பைஜ்நாத் கோயில் உள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயில் இது. ஆரம்பகால, இடைக்கால கட்டிடக் கலைக்கு இந்தக் கோயில் ஓர் எடுத்துக்காட்டு.
இவை தவிர மஸ்ரூர் கோயில், பாக்நாக் கோயில் எனப் பல விஷ்ணு - சிவன் கோயில்களையும் இந்தப் பகுதியில் காணலாம். இங்கிருக்கும் கோயில்கள் அனைத்துக்குமே பாத யாத்திரையாக செல்பவர்கள் ஏராளம். பக்தர்களின் இந்த யாத்திரையைப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
- radha_krishnan36@yahoo.com