

நிலையாமை ஆள்கின்ற நிலத்து வாழ்வில்
நில்லாத பொல்லாத நினைவலைகள்
மலையுண்டு கடலுண்டு மழையுமுண்டு
மாறாத தெதுவுண்டு? மாற்றமொன்றே
அலைபோலே அரித்திருக்க அதிலே நாம்
ஆண்டவனா? மானிடனா? என்பதெல்லாம்
நிலையாமோ? விலைபெறுமோ? நேரமில்லை
நேசத்தில் தெரிவதுதான் நிசத்தின் எல்லை!
வாழ்ந்துதான் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதைப் புரிந்து கொள்ளும் முயற்சி முழுமை அடைவதற்கு முன்பே நம் ஆயுள் முடிந்துவிடுகிறது. வாழ்க்கை, தொடக்கமும் முடிவுமில்லாத ஒரு தொடர்ச்சியாகத்தான் தென்படுகிறது. வாழ்க்கையைப் புரிந்துகொள்வதும் நாம் யாரெனத் தெரிந்துகொள்வதும் ஒரு புள்ளியில் சந்திக்க வாய்ப்பிருக்கிறது.
மற்றவர்களும் நம்மைப் போன்றவர்களே என்று நினைக்கும் அடிப்படை நாகரிகம், மற்றவர்களும் நாமே என்னும் சத்தியத்தைத் தரிசனமாக்குகிறது. அந்தக் கணத்தில் உயிரெல்லாம் ஒன்றே என்னும் உண்மை, உணர்வில் ருசுவாகிறது.
இவ்விதம் வாழ்க்கை, நாம், சத்தியம் இவற்றைப் புரிந்துகொள்வது நமது பொறுப்பு. இதையும் சட்டமாக்க முடியாது. யார்மீதும் நிர்ப்பந்திக்கவும் கூடாது. இது சிலர் சாசனமாக்கி இருக்கிற அனுபவம். ‘நீங்களும் கவனித்துப் பாருங்கள். உங்களுக்கும் இப்படித் தோன்றலாம். வேறு விதமாகவும் தோன்றலாம்’ - இதுதான் வேத காலத்து முனிவர்கள் கடைப்பிடித்த பண்பு.
பிரித்தல் துரோகம்: சரி, இந்தப் புரிதல் அல்லது நிதர்சனம் அவர்களுக்கு எப்படிச் சாத்தியமாயிற்று? ஒரு தனி மனிதனுக்கு எது வாழ்வின் உண்மையைக் காட்டுகிறது? அன்புதான்! உயிர்கள் மீது அன்பு! அதுவும், செயல்பூர்வமான அன்பு! உயிரை நேசிக்காமல் மனிதன் உண்மையை உணர முடியாது.
உயர்வென்றும், தாழ்வென்றும், சாதியென்றும், சமயமென்றும், நிறமென்றும், திறமென்றும் வகை பிரிக்கிறவன் தன்னுடைய இருப்புக்கே துரோகம் செய்தவனாகிறான். படைப்பின் அடிப்படையான அன்பு என்னும் பண்புக்கே விரோதமாக நடக்கிறான்.
மூடனும் மானிடனும்: ஒரு மனிதனுக்கு எழுதப் படிக்கத் தெரியவில்லை என்றால் அது இளப்பமில்லை. ஒரு தத்துவமோ, சித்தாந்தமோ விளங்கவில்லை என்றால் அதனால் அவன் எதையும் இழந்து விடுவதில்லை. ஆனால், அன்பு என்னும் அருளை, உதவி என்னும் பண்பின் மூலம் வெளிப்படுத்தத் தெரியாமல் இருந்தால் அவனே மூடன். வெளிப்படுத்த முடிந்தால் அவனே மானிடன்.
ஒரு மனிதன், மனிதனாவதற்கும் அவன் மாமனிதனாக உயர்வதற்கும் அவனே இறைவனாகக் கனிவதற்கும் தேவை அன்பு ஒன்றுதான்.
என்ன செய்ய? சத்தியம் ருசிப்பதில்லை. அதற்கு நிறமில்லை. அதில் நாடகமில்லை. அது அம்பலத்தில் ரகசியமாக இருப்பதால், அதில் நமக்கு ஆர்வமில்லை. அது எங்கும் எதுவுமாகவும் இருப்பதால் நமக்கென்று பிரத்யேகமாக அது வசப்படுவதில்லை.
‘அன்பே சிவம்’ என்று அருளினார் திருமூலர். அது வெறும் சொற்றொடரா, துதியா, கவிதை வரியா? படைத்தவனும் படைப்பும் இரண்டாகக் குலவி, ஒன்றாகத் திளைத்திருக்கும் நேரத்தில், மானிடமும் தெய்வதமும் மார்புறத் தழுவும் தருணத்தில், இகமும் பரமும் இரண்டற இணையும் கணத்தில் விளையும் சத்திய அனுபவம்.
ஒன்றில் திளைத்தல் அனுபவம். அதுவாகவே ஆகுதல் அனுபூதி. அனுபவத்திற்கு மொழி கிடையாது. மொழிக்கு அனுபவம் கிடையாது. அனுபவத்திற்கே இப்படி என்றால் அனுபூதிக்கு? ஆனால், இதுவோ அனுபூதியில் விளைந்து, அனுபவத்தில் வருகிற திருமொழி. தமிழ் வழி.
‘நீ எதுவாக இல்லையோ அதுவாக இருப்பதாக நடிக்காதே!’ என்பது நான் பல ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட அறிவுரை. நாம் இடைவிடாமல் அதுவாகவும் இதுவாகவும் இருந்து அல்லல்பட்டுப் பிறரையும் அல்லலுக்கு ஆளாக்குவதை விட்டுவிட்டு, அன்பாக இருந்து பார்ப்போமே! மெல்ல மெல்ல அன்புதான் நம்முடைய உண்மை என்பது புரியவரும். இதை ஒரு பயிற்சி என்று சொல்வதைக் காட்டிலும் ஒரு பழக்கம் என்று சொல்வதே பொருத்தமாகும்.
அறிவதும் அறியாததும்: அறிவும் ஒரு பழக்கம்தான், அறியா மையைப் போலவே! அறியாமை மிகவும் பழகிவிட்டதால், அறிவு அந்நியமாகத் தோன்றுகிறது. அடைய முடியாத நிலையாகப் படுகிறது. மேன்மையில் நமக்கு எப்போது ருசி ஏற்படுகிறதோ, அப்போதுதான் அது பழக்கத்தில் வசமாகும். அல்லாமல், நானே சரியென்று வீம்பு பிடித்தால், எது சரி என்பதை அறிய முடியாமலே வாழ்க்கை முடிந்துவிடும்.
நமக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஒரே கடமை அன்பாக இருப்பதும், அன்பு செய்வதும்தான். இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தவை. ஒன்றன் மீது ஒன்று தாக்கம் செலுத்துபவை. மற்றவர்கள் நம் மீது பிரியத்துடன் நடந்துகொள்ளும் போதா நாம் அன்பைப் புரிந்துகொள்கிறோம்? இல்லை! நாம் மற்றவர் மீது நேயத்தை வெளிப்படுத்தும் போதுதான், நம்மில் இருக்கும் அன்பை நாம் உணர்ந்து கொள்கிறோம். இந்த அடிப்படை அன்பே, பிறகு எல்லாவற்றுக்கும் அடிப்படையான சிவமாக நம்மில் கனிகிறது.
அன்பு என்பது வெறும் உணர்ச்சியாகத் தொடங்கி, பண்பாக மலர்ந்து, பிறகு பரம சத்தியமாக மிளிர்கிறது. உதவி, தொண்டு, நன்மை, நன்றி, சேவை என்னும் சொற்களெல்லாம் அன்பைக் குறிப்பனவே. இவ்விதம், அன்பு என்பது வெளியே செய்யப்படுகிறது. உள்ளே உணரப்படுகிறது.
அண்டம் முழுவதும் எல்லாம் அந்தரத்தில்தான் தொங்கிக் கொண்டிருக் கின்றன. நம்முடைய உலகத்திற்கு ‘ஞாலம்’ என்று பெயர். ‘ஞாலுதல்’ என்றால் தொங்குதல். எந்தப் பிடிமானமுமில்லாமல் நம்முடைய உலகம் சுழன்றபடித் தொங்கிக் கொண்டிருக்கிறது. பிடிமானம்தான் இல்லையே அன்றி, ஆதாரம் உண்டு. அதுதான் அன்பு. அதுதான் அண்ட பகிரண்டங்களுக்கும் ஆதாரம். அந்த அன்பே ஆதியும் அறுதியுமான உண்மை. அதுவே சிவம்.
எதையும் அன்பாய்ச் செய்திடுவோம்;
என்றும் அன்பில் வாழ்ந்திடுவோம்
இதயம் என்பது அன்பில் நெய்தது
என்பதை நினைந்து நடந்திடுவோம்
எதிரே இறைவனை நிதம்காண்போம்!
(தரிசனம் நிகழும்)
- tavenkateswaran@gmail.com