

இறைவனுக்கு எதுவும் தேவை இல்லை. ஆனால் எல்லாருக்கும் இறைவன் தேவைப்படுகிறான். மனித சமூகத்தின் மிகப் பெரிய அறிவுக் கொடையாகிய குறளையும் குர் ஆனையும் ஒப்புநோக்கி, அந்த அறநூல்களின் வழியாக வாழ்வியல் விழுமியங்களை கற்றுத் தரும் நூல் இது.
`முதன்மையாவன்' என்னும் கட்டுரையில் தொடங்கி `இறைக் கட்டளை' வரை 83 கட்டுரைகளில் வாழ்வியலை இரண்டு அறநூல்களும் எப்படி அணுகுகின்றன என்பதை பொருத்தமான விளக்கங்களுடன் இந்த நூலில் விரிவாகப் படித்துப் புரிந்துகொள்ள முடிகிறது.
இல்லறத்தை நடத்தும் பாங்கு, இறைவனைத் தொழுவதால் ஏற்படும் நன்மைகள், கல்வியின் ஆகச் சிறந்த பயன் எது? இப்படிப் பல விஷயங்களைப் பற்றி குறளும் குர் ஆனும் ஒருமித்து வெளிப்படுத்தும் செறிவான கருத்துகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.
"இறைவனுடைய திருவடிகளைத் தொழாமல் இருப்பவர் கற்ற கல்வியால் என்ன பயன்?" என்கிறது திருக்குறள் (குறள்-2).
"கல்வியாளர்களே அல்லாஹ்வை பயந்து கொள்வார்கள்" (35:28) - என்கிறது திருக்குர்ஆன்.
இறைவனை `தனக்குவமை இல்லாதான்' என்னும் குறள்-7) திருக்குறள், அப்படிப்பட்ட உவமையில்லாத பண்புடையவனைச் சேராதவனின் மனக் கவலையை எவராலும் மாற்ற முடியாது என்கிறது. இதையே, "தனித்தவன்; உவமை இல்லாதவன் (அத்:112)" என்கின்றது திருக்குர் ஆன்.
"அல்லாஹ்வை மனதில் எண்ணிக்கொள்வோரின் உள்ளங்கள் மட்டுமே அமைதி கொள்கின்றன. (அத்: 13 வசனம்: 28)" என்னும் குர்ஆன் விளக்கும் நெறி, ஒரு ஆன்மா துன்பத்திலும் துயரத்திலும் வேதனை கொள்ளும்போது, நாம் அல்லாஹ்விடம் இருந்தே வந்திருக்கிறோம், அவனிடம் மட்டுமே திரும்பிச் செல்ல இருக்கிறோம்.
இந்த உலகத்தின் நிகழ்வுகளை மனதில் போட்டு குழப்பிக்கொள்ளக் கூடாது என்று அமைதியாகிவிடுவார்கள். இது திருக்குர்ஆனின் அழகிய போதனை. இங்கே திருக்குறளும் திருக்குர்ஆனும் ஒரே நேர்க்கோட்டில் கருத்துகளைக் கொண்டிருப்பதை இந்நூல் பதிவுசெய்கிறது.
இந்த நூல் பக்தி, ஒழுக்கம், எளிமை, தர்மம் என வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய உயர்ந்த நன்னெறிகளை குறள், குர்ஆன் வழியில் விளக்கும் ஆவணமாகத் திகழ்கின்றது.
குறளும் குர் ஆனும் கற்றுத் தரும் வாழ்வியல்
டாக்டர் M. அமீர் அல்தாப்,
ஆச்சார்யா கோபால்
பக். 580; விலை: ரூ.600.
வெளியீடு: புதிய சமுதாயம்
அறக்கட்டளை,
கோயம்புத்தூர் - 24.
அலைபேசி: 90870 46667.