

அண்ணல் நபி அவரின் வளர்ப்புத் தந்தை அபூதாலிப்புடன் வாணிப நிமித்தம் சிரியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்வதும் வாணிபப் பயணம் இல்லாத காலத்தில் அரஃபா குன்றுகளுக்கு அருகில் கால்நடைகளை மேய்ப்பதுமாக நபிகள் அவரின் வாலிபப் பருவத்தைக் கழித்தார்.
வாணிபத்தில் அவர் சந்தித்த யூதர்கள், கிறித்துவர் உள்படப் பல்வேறு மனிதர்களுடன் அவருக்குக் கிடைத்த அனுபவங்களும் கால்நடைகளை மேய்ப்பதில் அவருக்குக் கிடைத்த நிதானமும் தனிமையும் பின்நாள்களில் மனிதர்களை நேர்வழியில் கொண்டுசெல்வதற்கு அவருக்கு உதவின.
வாணிபத்தில் ஏமாற்றப்படும் எளியோருக்கான நற்பணி மன்றமாகச் செயல்பட்ட ‘ஹில்ஃபுல் ஃபுசூல்’ எனும் அமைப்பில் அண்ணல் நபி அவரின் பதின்ம வயதில், இணைந்து செயல்பட்டார். இந்த மன்றத்தை அண்ணல் நபியின் பெரிய தந்தை ஸுபைர் நிறுவினார் என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். இம்மன்றம் வியாபாரத்தில் நாணயத்தை வலியுறுத்தியது. மக்காவில் நடைபெறும் வாணிபத்தைக் கண்காணித்தது. நீதி வழங்கும் மன்றமாகவும் செயல்பட்டது.
இவ்வாறு பக்குவப்பட்ட அண்ணல் நபி, 25 வயதை எட்டியபோது மக்கா மக்களின் நேசத்துக்கும் மரியாதைக்கும் உரியவராக விளங்கினார். குறிப்பாக, ஆதரவற்றவர்கள், அடிமைகள், எளியவர்கள் மீது அவர் மிகுந்த அன்பும் பரிவும் கொண்டவராக இருந்தார். தந்தையும் தாயும் அற்ற அண்ணல் நபி, தன்னை ஒத்த எளிய மனிதர்களிடம் இரக்கம் காட்டினார்.
“வாலிபமடைந்தவுடன் ஆடு மேய்ப்பதை விட்டுவிட்டு ஸாயிப் இப்னு அபூ ஸாயிப் அல்மக்ஜூமீ என்பவருடன் இணைந்து வணிகம் செய்யத் தொடங்கினார். அவருக்கு நம்பிக்கைக்குரிய மிகச் சிறந்த தொழில் நண்பராக நபி (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள்.” (ப.17. யார் இந்த முஹம்மது)
அண்ணலின் இத்தகைய குணநலனே பின்நாளில் கதீஜா பிராட்டியையும் கவர்ந்தது. எட்டு வயது வரை தனது தாத்தா அப்துல் முத்தலீப் அவர்களது அன்பிலும் பராமரிப்பிலும் வளர்ந்த அண்ணல் நபி, அவரது இறப்புக்குப் பிறகு தனது பெரிய தந்தை அபூதாலிப்பின் பாசத்தில் பாதுகாப்பாக இருந்தார். இவ்விருவரைப் போலவே அண்ணல் நபியின் மீது அன்பும் பாசமும் கொண்ட, கூடவே அளவற்ற நம்பிக்கையும் மதிப்பும் மிக்க ஒருவர் அவருக்குத் துணையாகக் கிடைத்தார். அவர்தான் கதீஜா.
தூய்மையின் உருவம் தாஹிரா: ‘குறைஷ்’ இனத்தைச் சார்ந்த குவைலித், மக்கா நகரில் பெரும் வணிகர். அவருக்குப் பிறந்த ஒரே வாரிசு கதீஜா. பொ.ஆ. 555இல் பிறந்த கதீஜா, பருவமடைந்த பிறகு நபாஷ் பின் தமீமீ அபூஹாலா என்பவருடன் திருமணம் ஆனது. அவர்களுக்கு ஹாலா, ஹிந்த் என்கிற இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.
அதில் ஹாலா சிறுவயதிலேயே இறந்துவிட்டார். முதல் கணவர் இறந்த பிறகு, அதீக் பின் ஆயத் மக்ஸூமி என்பவருடன் கதீஜாவுக்குத் திருமணமானது. இந்தப் பந்தத்தில் இவர்களுக்குக் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கும் ஹிந்த் என்றே பெயரிட்டனர். இரண்டாம் கணவரும் காலமாகிவிடவே கதீஜா மீண்டும் கைம்பெண்ணாகிவிட்டார்.
இந்நிலையில் செல்வந்தரான குவைலிதின் மகள் கதீஜாவைத் திருமணம் செய்யப் பலர் முன்வந்தனர். ஆனால் கதீஜா தனக்குத் திருமணம் வேண்டாம் என்கிற முடிவில் இருந்தார். குவைலித்துக்கு வயதான காரணத்தால் வாணிபப் பொறுப்புகள் அனைத்தையும் தன் ஒரே வாரிசான கதீஜாவிடம் ஒப்படைத்தார். அழகும் நல்லொழுக்கமும் மட்டுமல்ல, தைரியமும் நம்பிக்கையும் நிர்வாகத் திறமையும் நிறைந்தவர் கதீஜா. இஸ்லாமியப் பெண்களுக்கு முன்னுதாரணம் கதீஜா என்றால் அது மிகையல்ல.
கணவனை இழந்த பிறகு காஃபாவில் தியானத்தில் அமர்வதும் வாணிபத்தைக் கவனிப்பதும் கதீஜாவின் அன்றாடச் செயல்பாடுகளாக இருந்தன.
“கதீஜாவின் வியாபாரம் தென்னாட்டில் ஏமன் மாகாணத்துடனும், வட நாட்டில் ஸிரியா மாகாணத் துடனும் நடந்து வந்தது” (ப.15, கண்ணியத்தில் சிறந்த அன்னை கதீஜா).
இவை தவிர, இராக் நாட்டுக்கும் ஒட்டகங்கள் மூலமாக வாணிபப் பொருள்களை அனுப்பி வியாபாரம் செய்தார் கதீஜா. தொலைதூர நகரங்களுக் கும் கதீஜாவின் வாணிபம் பரந்து விரிந்திருந்தது. தந்தை சேர்த்து வைத்த சொத்துக்களுடன் கதீஜாவின் நிர்வாகத் திறமையால் மேலும் சொத்துக்கள் சேர்ந்தன. திறமையுடன் வாணிபம் செய்துவரும் வேலையாள்களுக்கு அவர்கள் மனம் நிறையும் அளவு ஊதியம் கொடுப்பார் கதீஜா.
பெண் குழந்தைகளை அவமானச் சின்னமாகக் கருதி பாலை நிலத்தில் புதைத்த மூடர்கள் அரேபியாவில் இருந்திருந்தாலும், அதற்கு நேர் எதிராக அதிகாரம் மிக்கப் பெண்களும் இருந் துள்ளனர் என்பதற்கு கதீஜாவே சான்று. வாணிபத்தில் நேர்மையாகவும் பணியாள்களிடம் அன்பாகவும் இருந்ததால், மக்கா வாழ் மக்கள் கதீஜாவை ‘தாஹிரா’ (தூய்மையானவள்) என்று அழைத்தார்கள்.
ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட கண்ணியம் மிக்கவராக கதீஜா இருந்தார். அப்போது, அவருக்குத் தனது வாணிபத்தைக் கவனித்துக்கொள்ள உண்மையான ஒரு செயலாளர் தேவைப்பட்டார். தொலைதூர வாணிபத்தைப் பாதுகாப்பாக நேர்மையான முறையில் செய்துவர மக்காவில் யார் இருக்கிறார்கள் என்னும் தேடலில் கதீஜா இருந்தார்.
அல் அமீனான அண்ணல் நபியும் தாஹிராவான கதீஜாவும் சந்திக்கும் தருணம் வந்தது.
(தொடரும்)
- தொடர்புக்கு: bharathiannar@gmail.com