

தமிழர் நாடக வரலாற்றின் தொடக்கம் என்பது இறைவனுடன் இணைந்த ஒன்று. இறைவன் ஆடிய கூத்தின் ஒரு பகுதியாகவே நாடக வகைகள் தோன்றின என்கிறது தமிழ் இலக்கிய வரலாறு.
அவ்வரிசையில் இவ்வாண்டு 200ஆவது நூற்றாண்டு காணும் வள்ளல் பெருமான் ராமலிங்க அடிகளாரின் வாழ்க்கை, நாடகமான வரலாற்றைப் பற்றித் தெரிந்துகொள்வோம். பல ஆயிரமாண்டுகள் வரலாற்றுப் பின்னணி கொண்ட தமிழ் மேடை நாடக வரலாற்றில், மேடையில் வள்ளலார் நாடகம் அரங்கேறியிருப்பது இருமுறைதான். 1966இல் ஒரு முறை 2023இல் ஒரு முறை!
வள்ளல் பெருமான் வள்ளலாரை உருவாக்கியதில் தருமமிகு சென்னைக்கு மிக முக்கியப் பங்கு இருக்கிறது. 33 ஆண்டுகள் வள்ளலார் வாழ்ந்தது சென்னையில்தான். அந்த சென்னையில் 1966இல் ‘வள்ளலார்’ என்கிற தலைப்பில் வள்ளலார் பற்றிய நாடகம் ஒன்று அரங்கேறியது. வள்ளலாரின் பாடல்களைப் பாடி, அந்நாடகத்தில் வள்ளலாராக நடித்தவர் பக்திப் பாடல்களைத் திறம்படப் பாடிப் பெரும் புகழ் பெற்ற பாடகர் வீரமணி. அதே நாடகத்தில் பால வள்ளலாராக நடித்தவர் பாடகர் திருச்சி லோகநாதனின் மூத்த புதல்வர் டி.எல். மகராஜன்.
“அப்போது எனக்கு 11 வயது. அடையாறில் இருந்த ஹைவேலம் இன்டஸ்டிரீஸ் என்கிற நிறுவனம்தான் அந்த ‘வள்ளலார்’ நாடகத்தைத் தயாரித்தது. ஹைவேலம் கல்யாண சுந்தரம் என்பவர்தான் என்னை அந்த நாடகத்தில் நடிக்க அழைத்திருந்தார். ‘சிவாஜி நாடக மன்ற’த்தின் சக்திவேல், நாடகத்தை இயக்கினார். இந்த நாடகத்தின் தனிச் சிறப்பு என்னவென்றால், இது ஓர் இசை நாடகம். பாடல்கள்தாம் அதிகம் இருக்கும். வசனம் குறைவு. நாடகத்தில் எனக்கு அண்ணியாக நடித்தவர் கலைஞர் மு. கருணாநிதியின் துணைவியார் தர்மா ( ராஜாத்தி அம்மாள்) அவர்கள்.
மயிலாப்பூர் ‘இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ்’ கலையரங்கில் இந்த நாடகம் ம.பொ. சிவஞானம் தலைமையிலும் செளந்தரா கைலாசம் முன்னிலையிலும் நடந்தது. இயக்குநர் ஏ.பி. நாகராஜன் இந்த நாடகத்தைப் பார்த்து விட்டுத்தான், அவர் எடுத்த திருவருட்செல்வர் படத்தில் என்னைப் பாடவைத்து, திரைப்படப் பாடகராக அறிமுகம் செய்தார். இந்நாடகம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று 50 காட்சிகளுக்கு மேல் மேடையேறியது” என்கிறார், 1966 இல் மேடையேறிய ‘வள்ளலார்’ நாடகத்தில் பால வள்ளலாராக நடித்த டி.எல். மகராஜன்.
“பால வள்ளலாராக நடித்த 11 வயதுச் சிறுவன் மகராஜன் மேடையில் கணீரென்ற குரலில் ‘அருளால் அமுதே சரணம் சரணம், அழகா முருகா சரணம் சரணம்’ என்று பாடும்போது அந்தச் சரணம் என்கிற சொல்லில் ப்ருகாக்களை எல்லாம் போட்டதும், சபையே எழுந்து நின்று அதைக் கைதட்டி வரவேற்றதை இப்போதும் என் மனக்கண்ணால் கண்டு ரசிக்கிறேன்” என்கிறார் 2023இல் அரங்கேறிய அருட்பிரகாச வள்ளலார் நாடகத்தை எழுதியுள்ள நாடகாசிரியர் கே.பி. அறிவானந்தம்.
“ஒரு காட்சியில் பால வள்ளலாராக நடிக்கும் மகராஜன் பாடியபடியே உள்ளிருந்து வந்து மேடையை வலம் வருவார். மீண்டும் ஒரு முறை வலம் வருவார். மூன்றாவது முறை அவர் உள்ளே போனவுடன் பாடகர் வீரமணி பாடியபடியே வெளியே வருவார் வள்ளலாராக” என்று தான் அன்று கண்ட காட்சியை இன்று கண்டது போல விவரித்தார் ‘பொதிகை’ தொலைக்காட்சியின் மேனாள் இயக்குநர் எம்.எஸ். பெருமாள்.
“வள்ளலார் பற்றிய நாடகம் போடுவது என்பது எளிதாக இல்லாதிருந்த போதும், துணிவாக அப்பாத்திரம் ஏற்று நடித்தார் என் தகப்பனார்” என்கிறார் பாடகர் வீரமணியின் புதல்வர் வீரமணி கண்ணன். “அந்த நாடகத்துக்காக என் தகப்பனார் சோமு இசையமைத்த அருட்ஜோதி தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம், அம்பலத்தில் ஆடுகின்ற ஆனந்த தெய்வம் என்கிற பாடல் அன்றும் இன்றும் மிகப் பிரபலமான வள்ளலார் பாடலாகத் தனிச் சிறப்புடன் ஒலித்துக்கொண்டிருக் கிறது” என்கிறார் பாடகர் வீரமணி ராஜூ.
1966இல் அரங்கேறிய வள்ளலார் மேடை நாடகத்துக் கான ஒளிப்பட ஆதாரங்களோ பத்திரிகை செய்தி ஆதாரங்களோ கிடைக்கப்பெறவில்லை எனினும், நாடகத்தில் நடித்த டி.எல். மகராஜன், வீரமணியின் வாரிசுகள், நாடகத்தைக் கண்டு ரசித்த கே.பி. அறிவானந்தம், எம்.எஸ். பெருமாள் ஆகியோர் வாழும் சான்றுகளாக வள்ளலார் நாடகத்தை உறுதிசெய்துள்ளனர்.
2023இல் மீண்டும் நாடக மேடை காண்கிறார் வள்ளலார். 2023, பிப்ரவரி ஐந்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபாவில் அரங்கேறியது ‘அருட் பிரகாச வள்ளலார்’ என்கிற நாடகம்.
நாடக காவலர் ஆர்.எஸ்.மனோகர் நெக்ஸ்ட் ஜெனரேஷன் என்கிற குழு அரங்கேற்றிய நாடகத்தை ஆர்.எஸ்.மனோகரின் சகோதரர் மகன் சிவபிரசாத்தும் எஸ். ஸ்ருதியும் இயக்கினார்கள். இந்நாடகத்தை எழுதியவர் நாடகாசிரியர் கே.பி. அறிவானந்தம்.
மொத்தம் 28 காட்சிகள் கொண்ட இந்நாடகத்தில் முதல் பத்து காட்சிகள் பால வள்ளலார், அடுத்த 18 காட்சிகள், வள்ளலார் வரும் காட்சிகள் எனப் பிரித்து அமைத்திருந்தார் ஆசிரியர்.
பள்ளியில் அறிவார்ந்த பல கேள்விகளைக் கேட்பது, சகோதரரின் கோபத்தால் வீட்டைவிட்டு வெளியேறுவது, மீண்டும் அண்ணியாரின் அன்புக்காக வீடு வந்து மாடியில் ஒரு அறையில் தங்குவது, அங்கு கண்ணாடியில் முருகன் தரிசனம் பெற்று பாடல்கள் புனைவது, சகோதரருக்குப் பதிலாகச் சொற்பொழிவாற்ற சென்று ‘உலகளாவிய’ என்கிற ஒரு சொல்லுக்கு இரண்டு மணி நேரம் பொருள் சொன்னது என இளம் பருவ வள்ளலாரின் வாழ்வை விரிவாகக் காட்சிப்படுத்தியிருந்தது இந்த நாடகம்.
வள்ளலாரின் அருள் சொல்லும் காட்சிகளை நேர்த்தி யோடு அமைத்திருந்தனர். நாடகத்தின் பிற்பகுதியில், திருவொற்றியூரில் வடிவாம்பிகை வந்து உணவு கொடுத்தது, காலில் சுற்றிய பாம்பிடம் வள்ளலார் பேசி இறங்கிப் போகச் செய்தது, தில்லையில் ரெட்டியார் வீட்டில் விளக்கில் தண்ணீர் ஊற்றி திரியை எரியச் செய்தது, ஜமீன்தார் வீட்டில் பிரம்மராட்சசன் பிடித்த ஒரு பெண்ணின் நோயைக் குணப்படுத்தியது, குரூபியாக இருந்த பெண்ணை அழகாக மாற்றியது, இரும்பைத் தங்கமாக்கிப் பின் அதைத் தூக்கி ஆற்றில் எறிந்து பேராசை கொண்டவனுக்கு இறைவனின் பெருமையை உணரவைத்தது என வள்ளலார் நிகழ்த்திய பல அற்புதங்களை விளக்கமாகக் காட்சிப்படுத்தியிருந்தனர்.
அதன்பின் வள்ளலார் வடலூர் வந்து சத்ய ஞான சபை, தர்மசாலை தொடங்கியதையும், ஏழு திரை விலக்கி வள்ளலார் அருட்ஜோதியுடன் கலக்கும் காட்சியுடனும் நாடகத்தை நிறைவுசெய்திருந்தனர்.
‘அருட்பிரகாச வள்ளலார்’ நாடகத்தின் ஆசிரியர் கே.பி. அறிவானந்தம், இத்தனை ஆண்டு கால நாடக வரலாற்றில் வள்ளலார் பற்றிய பதிவுகள் ஏன் அதிகம் வெளிவரவில்லை என்பதற்கான விளக்கத்தையும் அளித்தார்:
“வள்ளலார் ராமரைப் பற்றி, அல்லாவைப் பற்றி, யேசுவைப் பற்றியும் பாடியவர். பின்னாளில் மக்களிடையே மதச் சின்னங்கள்வழி பிரிவினை வேண்டாம் என்றே அவர் மதச் சின்னங்களை, உருவ வழிபாட்டைத் தவிர்த்தார். இதனை உடனிருந்தவர்களே புரிந்துகொள்ளாமல் அவரை விரோதியாகப் பார்க்கத் தொடங்கினார்கள்.
நான் நடத்திய நாடகத்தில் இவற்றையெல்லாம் தவிர்த்தேன். ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்கிற அவரின் கருணை உள்ளத்தை மட்டுமே வெளிக்கொண்டு வந்துள்ளேன்”.
வள்ளலார் வரலாற்றில் எதைத் தொடுவது, எதை விடுவது, எதைத் தொட்டால் எதிர்ப்பும், எதை விட்டால் ஆதரவும் கிடைக்கும் என்பதே ஒரு வினாவாகிய சூழலில், ஏன் தொட வேண்டும், பின் ஏன் விட வேண்டும் என்கிற தயக்கம்கூட இத்தனை ஆண்டுகளில் இரண்டு நாடகங்கள் மட்டுமே வெளிவந்திருப்பதற்குக் காரணமாக இருக்கலாம்.
ஒரு நாடக ரசிகனாக, ஒரு நாடக படைப்பாளியாக நினைத்துப் பார்க்கிறேன். பல தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லவேண்டிய வாழ்வியல் கருத்துக்கள் அடங்கிய வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு, மிக சுவாரசியமான, ரசிக்கத்தக்கக் காட்சிகளை உள்ளடக்கிய ஒரு அற்புதமான நாடகத்துக்கு உகந்த வரலாறு. எனினும் காலம் உண்டாக்கிய மாற்றுக் கருத்துகளால் வள்ளலார் வரலாறு அதிகம் மேடை காணவில்லை. இனி வரும் தலைமுறைக்கும் நாடக உலகிற்கும் இது ஒரு இழப்புதான். வள்ளலார் பாணியிலேயே சொல்ல வேண்டுமென்றால் - ‘கடை விரித்தார் கொள்வாரில்லை.’
- கட்டுரையாளர், ‘இருபத்தியோராம் நூற்றாண்டில் சென்னை சபாக்களில் தமிழ் நாடகங்கள்’ முனைவர் பட்ட ஆய்வாளர்; anbesivam24@gmail.com