கண்முன் தெரிவதே கடவுள் - 19: உயிர், உணர்வாகும்போது எப்படி வெளிப்படும்?

கண்முன் தெரிவதே கடவுள் - 19: உயிர், உணர்வாகும்போது எப்படி வெளிப்படும்?
Updated on
2 min read

பிறக்கும் போது பிஞ்சு மனத்தில்

உறவு பகையெனும் உணர்வில்லை

இறக்கும் போதோ எதிரே இருந்தும்

உரிமை பிரிவென ஒன்றுமில்லை

இருக்கும் போதோ எத்தனை உறவுகள்

எத்தனை எத்தனை பிரிவுகளோ!

தருக்க மிலாமல் தவழும் மழலைத்

தருணம் மறுபடி வாராதோ!

ஒரு சின்னஞ் சிறிய இலையை அதன் பின்புறத்திலிருந்து பார்த்திருக்கிறீர்களா? கதிரவனின் ஒளி அதன்மீது விழும்போது, மொத்த அகலும் விளக்கானதுபோல அது ஒளியுறும். பின்புறம் பார்த்தால் சின்ன சின்ன நரம்புகள் சன்னமாகத் தெரியும். இந்த நரம்புகள் ஒற்றுமையின் கரங்கள்.

தோட்டத்தில் நடைப்பயிற்சி என்று விறைப்பாக மூச்சிரைக்க நடக்காமல் தென்றலின் போக்கில் உலாவந்து பார்த்திருக்கிறீர்களா? எத்தனை உயிர்கள்! உருவங்கள்! வடிவங்கள்! எத்தனை மலர்கள்! என்னென்ன நிறங்கள்! இந்த விதங்கள் (variety) ஒருபோதும் எந்தக் குழப்பத்தையும் உண்டாக்குவதில்லை. மாறாக, இவை பல்சுவையாகப் பல்கி மனத்தில் ரம்மியத்தை ஏற்படுத்துகின்றன.

ஆனால், மனிதர்களாகிய நாம் இதைப் புரிந்துகொள்வதில்லை. எந்த மலராவது நம்மிடம் வந்து, ‘ஐயா! நான்தான் நந்தியா வட்டை, நான் இருவாச்சி' என்று அறிமுகம் செய்துகொள்கிறதா? எல்லாமே இங்கே அவையவையாக இருக்கின்றன. அர்த்தமுள்ள வாழ்க்கைதான் வாழ்கின்றன.

எந்த உயிரினத்தின் வாழ்விலும் நம்மால் எந்தக் குற்றத்தையும் காண முடியாது. நம் கதை அப்படியல்ல. நமக்கு எல்லாவற்றுக்கும் பெயர் வைத்தாக வேண்டும். மனிதர்கள், பொருள்கள், கருத்துகள், வானம் எல்லாவற்றையும் கோடுபோட்டுப் பிரிக்கிறோம்.

கோடுபோட்டுக் கோடுபோட்டுக்

கொள்கையென்று கூச்சலிட்டுப்

பாடுபட்டு வந்த வாழ்வைப்

பாழடிக்கிறோம், நாம்

பரிவிலாமல் பிரித்துப் பிரித்துப்

பட்டுப் போகிறோம்..

ஆம், அன்பில்லாமல் நாம் போடுகிற கோடு களுக்கு நாம் பெயர்களை வைக்கிறோம். அவற்றைத்தான் நாம் தத்துவம், சித்தாந்தம், இயல்கள், வேதாந்தம் என்றெல்லாம் சொல்லிப் பிரிந்து கிடக்கிறோம். நம் வாழ்க்கை முழுவதை யுமே இந்தப் பிரிவினைகளைக் கொண்டாடியும் காவல் காத்தும் வீணடிக்கிறோம்.

இந்த உலகம் இப்படிச் சந்தைக் கடையாகக் கிடக்கும்வரை, இங்கே எந்தக் கருத்தும் வெல்லாது. ஒரே நேரத்தில் கோடானு கோடி அவலக் குரல்களாகக் கூச்சலும் கூக்குரலுமாக இருப்பதே மானிடம் என்றாகிவிடும். இதில் கடவுளைக் காண்பதெங்கே? இரைச்சலில் தொலைந்துவிடுகிறது இறைமை.

ஏழைகள் ஏழைகளாகவே இருப்பதில் யாருக்குச் சம்மதம் இருக்க முடியும்? வறுமையை நியாயப்படுத்துகிற எந்தக் கருத்தையும் எப்படி ஏற்க முடியும்? மனிதன், மனிதனைச் சுரண்டுவதை எப்படிக் கண்டும் காணாதிருக்க முடியும்? ஆனால், நாம் இவற்றைப் புரிந்துகொள்வதற்கு ஒரு பெரிய சித்தாந்தம் தேவையா என்ன? அட, கல்வியேகூட இதற்குத் தேவைப்படாதே!

சுவாசத்தை நடத்துவது யார்? - அப்படியே இங்கே வாருங்கள். நாம் சுவாசிக்கிறோமே, கழனியில் கமலை ஏறி இறங்குவது போலே காற்று நம்முள் ஏறி இறங்குகிறதே, நாம் உறங்கும்போதும் அது தானாக இயங்குகிறதே, இந்தச் சுவாசத்தை நாமா நடத்துகிறோம்? அதுவல்லவா தானும் இயங்கி நம்மையும் நடத்துகிறது? மேலே, வெளியில் கோள்கள் ஒரு நிச்சயித்த பாதையில் சுழல்கின்றனவே, அங்கே ஒரு பிசகும் நிகழவில்லையே, போக்குவரத்து நெரிசலே இல்லையே, உயிரற்றவை, அறிவற்றவை என்று சொல்லப்படும் அவற்றை ஒரு மகாசக்திதான் நிர்வகித்துக்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளச் சாத்திரங்கள் தேவையா? சாட்சியங்கள் வேண்டுமா?

நம்பிக்கை அவசியமா? - நம்பிக்கை என்பது சுவாசம் போன்றே ஏதோ ஒன்றால் நடத்தப்படும் இயல்பல்லவா! ஆனால், அந்தச் சக்திக்கு நாம் ஒரு பெயரை வைக்கும்போது, அது ஒருவனுக்குப் போதவில்லை. இன்னொருவனுக்கு அது எரிச்சலை ஊட்டுகிறது. மற்றொருவனுக்கு அந்தச் சக்தியை மறுப்பதற்கு அதுவே காரணமாக அமைகிறது. கடவுளை நம்ப ஒரு கட்சி தேவையா? நம்பிக்கையே பிரிவினைகளுக்குக் காரணமாகுமானால் அந்த நம்பிக்கை அவசியம்தானா? இல்லை, அது உண்மையில் நம்பிக்கைதானா?

கனிமங்கள், தாவரங்கள், விலங்கினங்கள், நுண்ணுயிர்கள் என்று நாம் மட்டுமல்லாமல் இங்கே கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன. இவற்றுள் பசி, உறக்கம், காமம், சண்டை என்பது எல்லா இனங்களுக்கும் பொது. ஆனால், வறுமை – செல்வம் மற்றும் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்னும் பூசல்கள் மனிதனுக்கே உரிய சொத்துகள். மற்ற உயிரினங்களின் அறியாமையில் இருக்கிற ஏற்புணர்வும் ஆனந்தமும் ஒருபக்கம். ஆறறிவு மனிதனின் குழப்பங்களால் விளைகிற அவலம் மறுபக்கம். இதில் கடவுள் எந்தப் பக்கம்!

விளையுமா ஆத்மானுபவம்? - எந்தப் பக்கமும் கடவுள்தான். கடவுள் எந்தப் பக்கமும் இல்லை. எந்தச் சித்தாந்தத்தாலும் வறுமை விலகப் போவதில்லை. அது விலகும் வரை, பண்புள்ள எந்த மனிதனின் குற்ற உணர்வும் விலகாது. அந்த உணர்வுதான் ஏற்றத் தாழ்வு அறவே வென்றுவிடாமல் நாம் நாகரிகமாக வாழ்வதற்குப் பாதுகாப்பு. எந்த வற்புறுத்தலாலும் கடவுளை அறிய முடியாது. அனுபவத்தின் விளக்கமாகச் சாத்திரங்கள் அமையலாம். அது தேவையுமில்லை. ஒருபோதும் சாத்திரங்களின் விளைவாக ஆத்மானுபவம் நேராது.

இந்த உலகத்தில் இருப்பது உயிர்தான். ஒரே உயிர்தான். உயிரொன்றுதான். இந்த உண்மை தொடரும் அனுபவமாக வேண்டும். நிற்கும் மரம், நெளியும் அழகி, நகரும் நதி, நகர்த்தும் காற்று, அலையும் விலங்கு, தாங்கும் ஆகாயம் - இவை அத்தனையும் அந்த ஒரே உயிரின் பல்வேறு முகங்கள் என்பதையும், படைப்பு என்பது அந்த உயிரின் விரிப்பே என்பதையும் அனுபவத்தில் காண வேண்டும். அது ஒரு சேதியாக இருப்பதில் எந்தப் பயனும் இல்லை.

நம்பி, ஆனால் காண முடியவில்லை என்றால் அந்த ஆத்திகம் முழுமையாகாது. ஒன்றைச் சரியாக அறிந்துகொள்ளாமல் அறவே மறுக்கிற அநாகரிகம் நாத்திகமுமாகாது. அந்த ஒற்றை உயிர் உணர்வாகும்போது அது அன்பாக மட்டுமே வெளிப்படும். அந்த அன்பில் மட்டுமே இறை தென்படும்.

அன்பே உயிர். அன்புதான் வெல்லும்.

(தரிசனம் நிகழும்)

- tavenkateswaran@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in