

கர்னாடக இசை உலகில் பல அரிய தமிழ் சாகித்யங்களை அளித்த பெருமைக்கு உரியவர் இசை மேதை பாபநாசம் சிவன். அதனாலேயே தமிழ்த் தியாகராஜர் என்று அழைக்கப்பட்டவர்.
கர்னாடக இசை மேடைகளில் இவரின் பாடல்களை அந்தக் காலத்தில் புகழின் உச்சியில் இருந்த சங்கீத மேதைகள் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், மகாராஜபுரம் விசுவநாத அய்யர், செம்பை வைத்தியநாத பாகவதர், முசிறி சுப்பிரமணிய அய்யர், செம்மங்குடி சீனிவாச அய்யர் உள்ளிட்டவர்கள் பாடிப் பிரபலப்படுத்தினர்.
பின்னாளில் எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற மேதைகளும் பாடினர். கர்னாடக இசை, திரையிசை, மேற்குலகின் ஓபரா எனப்படும் இசை நாடகங்களையும் அதன் இலக்கணங்களை அடியொற்றி அமைக்கப்பட்ட பதங்கள், ஜாவளிகளைக் கொண்டு கட்டமைத்த பெருமைக்குரியவர் பாபநாசம் சிவன்.
பாபநாசம் சிவனின் அரிய படைப்பான ‘ஸ்ரீ ராம சரித கீதம்’ சிறப்புகள் பற்றி சிவனின் மகள்வழிப் பேரனான பாபநாசம் அசோக்ரமணி நம்மிடம் பகிர்ந்து கொண்டார்:
“ராமாயணத்தை 24 ஆயிரம் ஸ்லோகங்களில் வால்மீகி பாடியிருக்கிறார். கம்பர், 2,400 பாடல்களில் எழுதியிருக்கிறார். பாபநாசம் சிவன் 24 ராகங்களில் 24 பாடல்களில் ராமனின் சரித்திரத்தை மிகவும் எளிமையாக எவருக்கும் புரியக்கூடிய தமிழில் அதே சமயத்தில் சுருக்கமாகவும் ஆழமான கருத்துகளுடனும் எழுதித் தந்திருப்பது மிகவும் சிறப்பானது.
இதை அந்தக் காலத்தில் ஹெச்.எம்.வி. இசை நிறுவனத்தினர் எஸ்.வி. வெங்கட்ராமன் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடி எல்.பி. ஒலித்தட்டாக வெளியிட்டனர். அந்தக் காலத்தில் இது மிகவும் பிரபலமான ஒலித்தட்டாக இருந்தது. இந்த இசை நாடகத்திற்கான ராகங்களின் பெயரோடு ஸ்வர, தாளக் குறிப்பையும் சேர்த்தே பாபநாசம் சிவன் எழுதியிருப்பார்.
சோசலை புதல்வனை என்று தொடங்கும் முதல் பாடலைக் கம்பீர நாட்டை என்னும் ராகத்தைப் பயன்படுத்தி அமைத்திருப்பார். முதல் பாடலே கம்பீரமான ஒரு தொடக்க மாக இருக்கும். ஒவ்வொரு பாடலிலும் உவமை, உருவகம் போன்ற இலக்கிய நயங்கள் அபரிமிதமாகப் பொதிந்திருக்கும்.
தந்தையின் உத்தரவை நிறைவேற்ற ராமன் நாட்டை விட்டுக் காட்டை நோக்கி நடக்கும்போது, கன்றோடு பசுவும் பறவைகளும் புல்பூண்டுகளும்கூட அழுதன என்பதை மிகவும் உருக்கமாகத் தன்னுடைய பாட்டில் சொல்லியிருப்பார் பாபநாசம் சிவன்.
அதேபோல், பரதன், ராமனிடம் நீங்கள் இருந்து அரசாளும் இடத்தில் நான் அரசாள்வதா என்பதற்கு, ‘ஆனை இருந்து அரசாளும் மண்டபத்தில் பூனை இருந்து புலம்பித் தவிப்பதுபோல் அரசாள நான் தரமோ’ என்னும் வரிகளை நயத்தோடு பயன்படுத்தியிருப்பார். இப்படி அதில் பொதிந்திருக்கும் இலக்கிய நயங்களையே ஒரு புத்தகமாகப் பதிப்பிக்கலாம்!
பாபநாசம் சிவன் அருளிய ‘ஸ்ரீ ராம சரித கீதம்’ பாடல்களை நாங்கள் புத்தகமாகவே பதிப்பித்திருக்கிறோம். பல காலகட்டங்களில் புகழ்பெற்ற பல நடனமணிகளால் பாபநாசம் சிவன் அருளிய ‘ ராம சரித கீதம்’ நாட்டிய நாடகமாக அரங்கேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் இந்த ஆண்டு நடைபெற்ற கிளீவ்லேண்ட் தியாகராஜர் இசை ஆராதனையில்கூட அங்கிருக்கும் சில நடனமணிகள் இந்த ராம சரித கீதத்தை நாட்டிய நாடகமாகச் செய்திருக்கின்றனர்.”
- ravikumar.cv@hindutamil.co.in