

நபிகளார் 40 ஆம் வயதில் தன்னை `இறைவனின் தூதர்' எனப் பிரகடனப்படுத்தியபோது, அதனை முதலில் ஏற்றவர் அவரின் அன்பு மனைவி கதீஜாவே ஆவார்.
நபிகளாருக்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் அவர் ஆற்றிய சேவை மகத்தானது. கதீஜா தனது செல்வத்தை எல்லாம் மார்க்கப் பணிக்காகத் தனது கணவரிடமே ஒப்படைத்துவிட்டார். கதீஜாவின் அரவணைப்பானது நபிகளாரின் இறைப் பணிக்குப் பெரிதும் உதவியாக இருந்தது. கதீஜாவின் தியாகத்தை நபிகளார் தனது வாழ்நாள் முழுவதும் மறக்கவே இல்லை. எப்போதும் கதீஜாவை நினைவுபடுத்திப் பேசக்கூடியவராக நபிகள் இருந்தார்.
ஏறக்குறைய 25 ஆண்டுகள் கதீஜாவுடனான திருமண வாழ்க்கையானது, இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்றாகவே திகழ்ந்தது. “அனைவருக்கும் இறைவன் ஒருவனே! அவனுக்கு இணை வைக்காதீர்கள். நான் அவனுடைய தூதர்” என்று சொன்னபோது, மக்காவின் அதிகாரமிக்க குரைசிகள் நபிகளாருக்கும் அவரைச் சார்ந்தோருக்கும் கடும் தொல்லை களையும் கொடுமைகளையும் தந்தார்கள்.
எளிய மக்களை வலியவர் நசுக்குவது, மனிதனை மனிதன் சுரண்டுவது, பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பது, வட்டி, மது, கொலை, கொள்ளை, சூதாட்டம், பாலியல்தொழிலில் ஈடுபடுவது, மனிதனைக் கொத்தடிமை ஆக்குவது போன்ற தீயசெயல்களை நபிகளார் ‘கூடாது’ என்று தடுத்தார். அவரது பிரச்சாரத்திற்கு மக்கள் ஆதரவு பெருகினாலும், அதிகாரமிக்க குரைசிகள் நபிகளாரைக் கொலை செய்யத் திட்டமிட்டனர்.
மக்காவின் அதிகாரமிக்க குரைசிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கவே, நபிகளார் மக்காவை விட்டும் 60 மைல் தொலைவிலுள்ள தாயிப் நகருக்குத் தனது வளர்ப்பு மகன் ஜைதுடன் இஸ்லாத்தைப் போதிக்க நடந்தே சென்றார்.
கல்லடி பட்ட நபிகளார்: அவர்கள் தாயிபை அடைந்ததும் அவ்வூரின் முக்கியத் தலைவர்களை நேரில் சந்தித்து இஸ்லாம் பற்றி எடுத்துக் கூறி அதை ஏற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர். அத்தலைவர்கள் அதனை உடனே நிராகரித்ததோடு, நபிகளாரைக் கேலியும் கிண்டலும் செய்தனர். பின்னர் ஊரை விட்டே வெளியேறும்படியும் கட்டளையிட்டனர்.
நபிகளாரும் ஜைதும் தாயிபை விட்டும் வெளியேற முயன்றபோது, ஊரின் இருபுறமும் கூடியிருந்த உண்மை புரியாதவர்களின் கூட்டம் கல்லாலும் கையில் கிடைத்த பொருள்களாலும் அவ்விருவரையும் தாக்கியது. நபிகளாரை ஜைத் நாலாபுறமும் சுற்றிவந்து ஒரு கேடயம்போலப் பல கல்லடிகளைத் தன்மீது வாங்கிக் கொண்டு காத்தார். இருந்தபோதிலும் அதனையும் மீறி பல கற்கள் நபிகளாரை வந்து தாக்கின.
நபிகளாரின் பாதங்களை நோக்கி எறியப்பட்ட ஒரு கல் அவரின் பாதங்களைக் காயப்படுத்தியது. அதனால் அவரின் காலணி (மரச்செருப்பு) ரத்தக்கறையானது. இவ்வாறு அடிவாங்கியபடியே இருவரும் மூன்று மைல் நடையும் ஓட்டமுமாகச் சென்றனர். இறுதியில் ஒரு திராட்சைத் தோட்டத்தில் அவர்கள் புகுந்த பின்னரே, அந்தக் கயவர் கூட்டம் கலைந்து சென்றது. ஜைத், நபிகளாரின் காயங்களைத் துடைத்து ஆசுவாசப்படுத்தினார்.
களத்திலும் கசிந்த மனித நேயம்: அப்போது நபிகளார் வலியோடும் காயத்தோடும் இறைவனிடம் ஒர் உருக்கமான பிரார்த்தனை செய்தார். அதன் பின்னர் அல்லாஹ், “ஜிப்ரீலை (வானவரை) அனுப்பி இரு மலைகளை ஒன்றோடு ஒன்று மோதச் செய்து தாயிப் நகரவாசிகளை அழித்துவிடலாமா?” என்று நபிகளாரிடம் கேட்டபோது, அதனை மறுத்துவிட்ட நபிகளார், “ஒருபோதும் நான் அதனை (மக்கள் அழிவதை) விரும்ப மாட்டேன்.
இன்று இல்லை என்றாலும் நாளை அவ்வூர் மக்களின் சந்ததியினர் அல்லாஹ்வின் மார்க்கத்தின் பக்கம் திரும்புவார்கள் என்று நான் அல்லாஹ்விடம் ஆதரவும் நம்பிக்கையும் வைக்கிறேன்” என்றார் அழிவை விரும்பாத கருணை நபிகளார்.
அன்பின் நேசர்: தாயிப் நகரத்திலிருந்து வெளியேறிய நபிகளார் அதன்பின் சில ஆண்டுகள் கழித்து, இறைவனின் கட்டளைப்படி தனது தோழர் அபூபக்கருடன் 53ஆவது வயதில் மக்காவைத் துறந்து மதீனாவுக்குப் புலம்பெயர்ந்து சென்றார். அங்கும் நபிகளாரை மக்கா வாசிகள் நிம்மதியாக இருக்கவிடவில்லை. அதுவரையில் அகிம்சை வழியில் போராடி வந்த நபிகளார், அதன்பின்னர் தன்னையும் தனது சமூக மக்களையும் பாதுகாப்பதற்காகப் போரைச் சந்திக்க வேண்டியதாயிற்று. எண்ணற்ற போர்களை எதிர்கொண்ட நபிகளார், போர்க்களத்திலும் மனிதநேயம் சிதைந்து போகாமல் பார்த்துக்கொண்டார்.
ஆதரவற்றோரின் வலியினை நபிகளார் உணர்ந்த காரணத்தால் அவர்களுடன் நெருக்கமாகவும் அதிக அக்கறையுடனும் நடந்துகொண்டார். ஏழை எளியோருக்கும் உதவி நாடி வருவோருக்கும் இல்லை என்று சொல்லாமல், வாரி வழங்கிடும் ஏழைகளின் நேசராக விளங்கினார்.
மதீனா வந்த எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நபிகளார் தனது தோழர்கள் 10,000 பேருடன் மக்கா சென்று முற்றுகையிட்டு, மிகக் குறைந்த உயிர்ச் சேதத்துடன் தான் பிறந்த புனித மண்ணான மக்காவை வென்றெடுத்தார்.
யாரிடமும் சென்று படிக்கப் பழகாத நபிகளார் தனது நுட்பமான அறிவாற்றல் கொண்டு பண்டிதர்களும் சொல்ல முடியாத விஷயங்களையும் கருத்துகளையும் செயல்களையும் இறையருளால் உலகில் நடைமுறைப்படுத்தி அதில் மாபெரும் வெற்றியைத் தன் வாழ்நாளிலேயே கண்டு மகிழ்ந்தார்
நபிகளார் மக்கா, மதீனாவின் அரசராக இருந்த போதிலும் எப்போதும் போல எளிமையாகவே வாழ்ந்துகாட்டினார். தான் உணர்ந்த சத்தியத்தை நிலைநாட்டிட அவர் எண்ணற்ற சகிக்க முடியாத கொடுமைகளையும் எதிர்கொண்டு நின்று சளைக்காமல் போராடி இறையருளால் இஸ்லாம் என்கிற இனிய மார்க்கத்தை உலகில் பரிபூரணப்படுத்தினார்.
தனது வாழ்நாளெல்லாம் மனிதக் குலத்தின் மேன்மைக்காக உழைத்த நபிகளார் தன்னுடைய 63ஆம் வயதில் மதீனாவில் மறைந்தார். அவரது எண்ணங்கள், சொற்கள், செயல்கள் யாவும் மறையாமல் உலகில் உயிரோட்டமாக என்றும் மனித மனங்களிலே வாழ்ந்துகொண்டே இருக்கின்றன.
நபிகளாரின் மேன்மை குறித்து இறைவன் குர்ஆனில் இவ்வாறு பேசுகிறான்:
(நபியே) அகிலங்கள் அனைத்திற்கும் அருட்கொடையாகவே அன்றி உம்மை நாம் அனுப்பவில்லை (21/107) (நிச்சயமாக நபியே நீர்) நேரான வழியின் மீதே இருக்கின்றீர் (36/04).
(நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர் (68/04).
(நபியே) உமது கீர்த்தியை உமக்காகவே நாம் உயர்த்தினோம் (94/04).