

அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. பொருளின் உண்மையைப் புரிந்துகொள்ள முயல்கிறது அறிவியல். உண்மையின் பொருளை உணர முனைகிறது ஆன்மிகம்!
கம்பனைப் பற்றி பாரதி பாடும்போது, “எல்லையொன்றின்மை எனும் பொருள் அதனை, கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும்’ என்று ஆழமாகச் சொல்கிறார். முயற்சி! அறிவியலும் ஆன்மிகமும் அந்த முயற்சியைத்தான் மேற்கொள்கின்றன. அறிவியல் பார்வையுள்ள ஆன்மிக ஆர்வலர்களும், ஆன்மிக நோக்குள்ள அறிவியலாளர்களும் எப்போதும் இருந்துவருகிறார்கள். இந்த இரு துறைகளும் கைகுலுக்கிக்கொள்ளும் தளங்களும் தருணங்களும் உள்ளன.
நியூயார்க் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர், முனைவர் வெங்கட சுப்பிரமணியனை அண்மையில் நியூயார்க்கில் அவர் வீட்டில் சந்தித்தேன். வேதிப் பொறியியல் – செயற்கை நுண்ணறிவு, இயற்பியல், பொருளாதாரம் ஆகிய முத்துறை விற்பன்னர். பல நாடுகளில் வருகைதரு பேராசிரியராகவும் வலம்வருகிறார். நியூயார்க்கின் 110 ஆவது வீதியில் பன்னடுக்குக் குடியிருப்பில் பரந்த வீட்டில் ஓர் எளிய மனிதராக வாழும் என் இனிய நண்பருக்கு, அறிவியலில் ஆழங்கண்ட உலகத் தரம்வாய்ந்த அறிஞர்கள் அண்டை வீட்டுக்காரர்கள்.
உலகமே இறைவன்: ஒருமுறை கிரேக்க நாட்டில் உள்ள சாண்டோரினி தீவுக்குச் சென்றிருக்கிறார். கடல் மட்டத்திலிருந்து 1,200 அடி உயரத்தில் இருந்த தனது விடுதி அறையிலிருந்து ஒரு காட்சியைக் காண்கிறார். அது 3,500 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிவிட்ட ’கால்டெரா’ என்னும் எரிமலை.
அதன் வாயளவு என்ன தெரியுமா? வடக்குத் தெற்காக சென்னை புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து திருவான்மியூர் வரை, கிழக்கு மேற்காக சாந்தோம் மாதா கோயிலிலிருந்து பனகல் பூங்கா வரை! இதைப் பார்த்தவுடன் இந்த அறிவியலாளருக்கு எது நினைவுக்கு வந்ததாம் தெரியுமா? பொய்கை ஆழ்வாரின் பாடல்!
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று
ஆழ்வாருக்கு உலகமே அகல்விளக்காகத் தெரிந்திருக்கிறது. அதில் பெரும்பாலான பகுதியாக நிறைந்திருக்கும் கடலே நெய்யாம். மேலிருக்கும் கதிரவனே அகலில் எரியும் விளக்காம். தமிழில் பாடல் புனைந்து, இந்த மாபெரும் அகல் விளக்கை ஏற்றிப் பாடிக்கொண்டே அதைத் திருமாலுக்குக் காட்டி வணங்குகிறார். ஆக, உலகம், கடல், கதிரவன் இவை மூன்றும் ஒருபுறம். இவற்றைப் படைத்த இறைவன் ஒருபுறம். இடையில் இரண்டையும் பார்த்து அதைத் தமிழ் சேர்த்துப் பாடும் ஆழ்வார். என்ன காட்சி!
இதே காட்சி கவியரசர் பாடலொன்றில் இப்படி வருகிறது:
காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நான் அறிவேன்..
எல்லாம் எனக்குள் இருந்தாலும்
என்னைத் தனக்குள் வைத்திருக்கும்
- வெங்கட் இதைச் சொன்னவுடன், இருவருமாக மற்ற இரண்டு முதலாழ்வார்களின் பாடல்களை நெகிழ்வுடன் நினைவுகூர்ந்தோம்.
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று
- பேயாழ்வார்
பேயாழ்வார், படைக்கப்பட்ட இந்தஉலகத்தில் காணப்படும் எல்லா வடிவங் களிலும் உருவங்களிலும் மாலவனையே காணுகிறார். இந்தக் காட்சி, ’காக்கைச் சிறகினிலே நந்தலாலா’ உள்ளிட்ட பாரதியின் பல பாடல்களை நமக்கு நினைவுபடுத்துகிறது. இந்தப் பாடல் மூலம், இந்த உலகத்தில் மட்டுமல்ல, இந்த உலகத்தையே இறைவனாகக் காணும் வழியை அறிவிக்கிறார் ஆழ்வார். ’உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா!’ என்று உண்மையை உணர்கிறார் கவியரசர்.
பூதத்தாழ்வாரோ, உலகில் இருந்தபடி உலகத்தைப் பார்க்காமலும், உலகத்தில் இறைவனைத் தேடாமலும் இதைப் படைத்த இறைவனைத் தனக்குள்ளே தான் கண்ட காட்சியைக் கற்கண்டுத் தமிழில் பதிவு செய்கிறார்:
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக,
இன்புருகு சிந்தை யிடுதிரியா, – நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்.
- பூதத்தாழ்வார்
‘தெய்வம் இருப்பது எங்கே? அது இங்கே! வேறெங்கே? தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே!’ என்று காட்டுவார் கண்ணதாசன்.
ஞானத் தமிழ்: ஆக, ஒருவர் படைப்புக்கு அப்பாலிருக்கும் இறைவனையும் படைப்பையும் (God before creation) சேர்ந்து காண்கிறார். இன்னொருவர், படைப்பில் ஊடுருவி நிற்கும் இறைவனைக் காண்கிறார் - God in creation. மற்றொருவரோ, படைக்கப்பட்ட உலகம், படைத்த இறைவன் இரண்டையும் ஒருசேரத் தன்னுள்ளே காண்கிறார் - God in and beyond creation. இந்த மூன்று காட்சிகளுக்கும் தோதாக இருப்பது எது? தமிழ்க்கவிதை! அறிவியல் - ஆன்மிகம் இரண்டும் ஒன்றுபடும் இந்த முப்பரிமாணக் காட்சியைத் தருவது தமிழ்! ஞானத் தமிழ்!
‘கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்!’ என்னும் கவியரசர் பாடலிலோ இந்த மூன்று காட்சிகளையும் ஒருசேரக் காண்கிறோம். கடுந்தவம் இயற்றாமல், கண்முன் தெரிவதைக் கடவுளாகக் காட்டுகிறது தமிழ். கடவுளைக் காண்பது எளிது.
(தரிசனம் நிகழும்)