

ஒருநாள் யேசு, கலிலேயா என்கிற நகருக்கு சமாரியா என்னும் ஊரின் வழியாகச் செல்லவேண்டியிருந்தது. அவர் சமாரியாவில் உள்ள சிக்கார் என்னும் ஊருக்கு வந்துசேர்ந்தார். அவ்வூரில் யூதர்களின் முன்னோர் யாக்கோபு என்பவரின் கிணறும் இருந்தது. பயணத்தால் களைப்புற்றிருந்த யேசு, கிணற்று ஓரமாக அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல். அப்போது அந்த சமாரிய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்தார்.
யேசு, அந்தப் பெண்ணிடம், “குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்” என்று கேட்டார். அந்தப் பெண்ணோ, “நீர் யூதர். நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?” என்று கேட்டார். ஏனெனில் யூதர்கள் சமாரிய மக்களோடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை.
ஆனாலும் யேசு அவரிடம், “கடவுளுடைய கொடை எது என்பதையும், ‘குடிக்கத் தண்ணீர் கொடும்’ எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால், நீரே அவரிடம் தண்ணீர் கேட்டிருப்பீர். அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்” என்றார்.
அந்தப் பெண்மணி யேசுவிடம், “ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை. கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்? எம் முன்னோர் யாக்கோபைவிட நீர் பெரியவரோ? அவரே எங்களுக்கு இக்கிணற்றை வெட்டித் தந்தார்.
அவரும் அவருடைய மக்களும் கால்நடைகளும் இதிலிருந்துதான் தண்ணீர் குடிப்பது வழக்கம்” என்றார். யேசு அவரைப் பார்த்து, “இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது. நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்” என்றார்.
அப்பெண் யேசுவை நோக்கி, “ஐயா, அத்தண்ணீரை எனக்குக் கொடும். அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது. தண்ணீர் மொள்ள நான் இங்கே வரத்தேவையும் இருக்காது” என்றார். யேசு அவரிடம், “நீர் போய் உம் கணவரை இங்கே கூட்டிக்கொண்டு வாரும்” என்று கூறினார். அப்பெண் அவரைப் பார்த்து, “எனக்குக் கணவர் இல்லையே” என்றார். யேசு அவரிடம், “எனக்குக் கணவர் இல்லை என நீர் சொல்வது சரியே.
உமக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என்றாலும் இப்போது உம்முடன் இருப்பவர் உம் கணவர் அல்ல. எனவே நீர் கூறியது உண்மையே” என்றார். அப்பெண் மிகவும் ஆச்சரியப்பட்டு அவரிடம், “ஐயா, நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன்” என்று சொல்லி, “கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்” என்றார். யேசு அவரிடம், “உம்மோடு பேசும் நானே அவர்” என்றார்.
உடனே அப்பெண் ஊருக்குள் ஓடி, “எல்லோரும் வாருங்கள் நாம் எதிர்பார்த்துக் காத்திருந்த யேசு என்ற மெசியா வந்துவிட்டார், என் வாழ்க்கையில் நடந்த எல்லாவற்றையும் அவர் உள்ளபடியே சொல்லிவிட்டார்” என்று கூப்பிட்டாள். “நான் செய்தவை அனைத்தையும் என்னிடம் சொன்னார்” என்று சான்று பகர்ந்த பெண்ணின் வார்த்தையை முன்னிட்டு அவ்வூரிலுள்ள சமாரியர் பலர் யேசுவிடம் நம்பிக்கை கொண்டனர்.
அவரது அதிகாரம் மிக்க போதனைகளைக் கேட்டு இன்னும் பலர் அவரை நம்பினர். அவர்கள் அப்பெண்ணிடம், “இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை. நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம். அவர் உண்மையிலே உலகின் மீட்பர் என அறிந்து கொண்டோம்” என்றார்கள்.
- merchikannan@gmail.com