நல்லொழுக்கப் புரட்சியாளர் 02: விடியலுக்கு முன் அரேபியா

நல்லொழுக்கப் புரட்சியாளர் 02: விடியலுக்கு முன் அரேபியா
Updated on
2 min read

“எங்கள் இறைவனே! (என் சந்ததிகளாகிய) அவர்களில் இருந்து உன்னுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பித்து வேதத்தையும் ஆழ்ந்த கருத்துகளையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்து அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும் ஒரு தூதரை அவர்களுக்கு அனுப்புவாயாக! நிச்சயமாக நீதான் மிக்க வல்லவன், நுண்ணறிவுடையவன்.” (2:129-திருக்குர்ஆன்)

- இவ்வாறு இப்ராஹிமும் அவர் மகன் இஸ்மாயிலும் பெருவெள்ளத்தால் மறைந்த காஃபத்துல்லாஹ்வைக் கண்டுபிடித்து மீள் கட்டமைக்கும்போது இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். அவர்கள் வம்சாவளியில் வந்தவரே அண்ணல் நபி.

இப்ராஹிமின் ஓரிறைக் கொள்கை அவரின் சமகாலத்திலும் விமர்சிக்கப்பட்டது. அவரது காலத்திற்குப் பிறகு அரபி மக்களால் ஓரிறை வழிபாடு மறக்கப்பட்டு, உருவ வழிபாடு கோலோச்சியது. சொல்லப்போனால் இப்ராஹிமின் தலைமுறையில் பல கிளை வம்சாவளியினர்கூட உருவ வழிபாட்டில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர்.

காஃபத்துல்லாவும் உருவ வழிபாடும்: “ஏக இறைவனுக்காக அமைக்கப்பட்ட பிரார்த்தனைப் பீடத்தில் மனிதனால் செய்யப்பட்ட 360 சிலைகள் மக்களின் குறைபோக்கும் தெய்வங்களாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டன.” (ப.14, இறைத்தூதர் முஹம்மத்)

காஃபா அமைந்திருந்த மெக்காவிலும் மதீனாவிலும் இதர அரேபியப் பகுதிகளிலும் யூத மதம், கிறித்துவ மதம் தவிர மக்கள் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மழை, இடி, மின்னல், மரம், தேவர்கள், தேவிகள், குலதெய்வங்கள் என்று எல்லாவற்றையும் சிலைகளாக்கி வழிபடத் தொடங்கியிருந்தனர்.

இப்ராஹிமின் 51ஆவது தலைமுறை பிஹ்ர். இவர்களே ‘குறைஷ்’ (வணிகர்கள்) என்று அழைக்கப்பட்டார்கள். இந்த வணிகத் தலைமுறை, குஸையி, அப்துல் மனாப், ஹாஷிம், அப்துல் முத்தலிப், அப்துல்லாஹ், முகம்மது நபி என்கிற வம்சாவழியில் தொடர்ந்து காஃபாவில் ஓரிறை வழிபாட்டைப் பின்பற்றினர். ‘குறைஷ்’ வழித்தோன்றல்களில் ஓரிறைக் கொள்கையில் மிக்க நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் தங்களை ‘ஹனீஃப்’ என்று கூறிக்கொண்டனர்.

‘ஹனீஃப்’ என்பதற்கு ‘உருவமற்ற ஒரே இறை வழிபாட்டினர்’ என்று பொருள். இவர்கள் வழிபாட்டு முறைக்கு ‘தஹன்னுஃப்’ என்று பெயர். ‘ஒரே இறை வழிபாடு’ என்று இதற்குப் பொருள். இவர்கள் காஃபாவினுள் உருவ வழிபாடு செய்ய மாட்டார்கள். அல்லாஹ்வே இவர்கள் ஏக இறைவன்.

‘குறைஷ்’ வழித்தோன்றல்களில் பலர், ஓரிறைக் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களாக இருந்தாலும் அல்லாஹ்வைச் சென்றடைய சிறிய கடவுள்களின் உதவி தேவை என்று எண்ணினார்கள். அல்லாஹ்வை மழை கொடுக்கும் தெய்வம் என்று அவர்கள் எண்ணினார்கள். உஸ்ஸா, மனாஃப் என்கிற இருவர் அல்லாஹ்வின் மகள்கள் என்று நம்பினர். மழைக் கடவுளாக உஸ்ஸாவையும் விதியை எழுதும் கடவுளாக மனாஃபையும் அவர்கள் குறிப்பிட்டனர். சிலைகளுக்கு ஆண்டுதோறும் பலியிடுவதும் விழாக்கள் எடுப்பதும் நடந்தன.

இவை மட்டும் அல்லாது, தாங்கள் எண்ணியது நிறைவேறினால் தாங்கள் வணங்கும் கடவுள்தான் அதற்குக் காரணம் என எண்ணி விழா எடுப்பார்கள். அவ்வாறு எண்ணியது நிறைவேறாவிட்டால், தங்கள் கடவுளின் சிலைகளை உடைத்துத் தூற்றுவார்கள். இவ்வாறு நிலையற்ற இறைப்பற்றுடையவர்களாக அண்ணல் நபியின் காலத்தில் வாழ்ந்த மக்கள் இருந்திருக்கிறார்கள்.

சமூக அவலங்களும் மேன்மைகளும்: குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருத்தல், மிதமிஞ்சி குடிப்பதைக் கெளரவமாகக் கருதுதல், சூதாடுதல், அதன் தொடர்ச்சியாகப் பகை ஏற்பட்டுப் போர் செய்தல், பெண்களைப் போகப் பொருளாக மட்டுமே பார்த்தல், பெண் குழந்தைகள் பிறந்தால் அவமானத்தின் சின்னமாகக் கருதி பாலைவனத்தின் மணலில் உயிரோடு புதைத்தல், வரைமுறையின்றி அசைவம் உட்கொள்ளுதல், ஆண்களும் பெண்களும் ஆடைகளின்றி காஃபாவை வலம்வந்து வழிபடுதல் உள்படப் பல சமூகச் சீர்கேடுகள் 6ஆம் நூற்றாண்டு அரேபியாவில் வழக்கத்தில் இருந்தன. எழுத்தறிவிலும் அரேபியர்கள் அப்போது பின்தங்கியிருந்தனர்.

அண்ணல் நபி தோன்றிய காலத்தின் அரேபியாவாழ் மக்கள் இத்தகைய தீய வழக்கங்களைக் கொண்டிருந்தபோதும் அவர்களிடம் பல நிறைகளும் இருந்ததாக வரலாற்றாய்வாளர்கள் கருதுகிறார்கள்.

ரோமன் (சிரியா), பெர்ஷியா (ஈரான்) போன்ற பெரிய ஆட்சியாளர்களின் ஆதிக்கத்தின் கீழ் அவர்கள் எப்போதும் வந்ததில்லை. வாணிபரீதியிலும் அவர்களுடன் இணக்கமான சூழலையே அரேபியர்கள் தக்கவைத்திருந்தார்கள். சுதந்திர இனக்குழுவாக அரேபியர்கள் இருந்திருக்கிறார்கள். தங்களுக்குள் ஏற்படும் சிறு சிறு மோதல்கள் தவிர, பெரிய போர்கள் இடம்பெறாத இடமாகவே அரேபியா இருந்தது.

வாணிபத்திற்காக சிரியாவிற்கும் ஈரானுக்கும் ஏமனுக்கும் மட்டுமல்ல, கடல் கடந்தும் அரேபியர்கள் சென்றிருக்கிறார்கள். வாணிபத்தில் செய்துகொள்ளும் ஒப்பந்தங்களை அவர்கள் உயிரினும் மேலாக மதித்தார்கள். கடின உழைப்பாளிகளாக இருந்தார்கள். விருந்தோம்பலில் சிறந்து விளங்கினார்கள். தங்கள் தலைமுறை பெருமையைக் கட்டிக் காக்கும் வழக்கத்தையும் கொண்டிருந்தனர்.

அண்ணல் நபியும் ‘நான் பலியிட அழைத்துச் செல்லப்பட்ட இருவரின் வழித்தோன்றல்’ என்று கூறுவார். மூதாதையர் இஸ்மாயில் மற்றும் அண்ணல் நபியின் தந்தை அப்துல்லாஹ்வும்தான் அவ்விருவர். எழுத்தறிவு பெற்றவர்களையும் கவிஞர்களையும் அரேபியர்கள் உயர்வாக எண்ணினர். “அவர்களைப் பொறுத்தவரை தார்மிக ஒழுக்கம் என்பது அவர்களது வீரத்திலும் தயாள குணத்திலும் தங்கி இருந்தது.” (ப.27, இறைத்தூதர் முஹம்மத்)

புனித காஃபா யாத்ரிகர்கள் வந்துசெல்லும் புனிதத் தலமாக அண்ணல் நபியின் காலத்திற்கு முன்பிருந்தே இருந்து வந்ததால், அங்கு மக்களிடையே பல விரும்பத்தகாத செயல்பாடுகள் இருந்திருந்தாலும் தொடர்ச்சியான இறை வழிபாடும் வாணிபத்தின் பயனாகச் செல்வமும் மிகப்பெரிய போர்கள் அற்ற சுதந்திரச் செயல்பாடுகளும் இருந்தன.

இந்தச் சூழலில் ‘அல் அமீன்’ என்று பெயரெடுத்த ஹனீஃப்களில் ஒருவரான அண்ணல் நபி ஏக இறைத் தத்துவத்தை மக்களிடையே பரப்ப பல சோதனைகளைக் கடக்க வேண்டியிருந்தது.

(தொடரும்)

- bharathiannar@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in