

சைவ வழிபாடு: இந்து சமயத்தில் மும்மூர்த்திகளில் ஒருவராகப் போற்றப்படுபவர் சிவன். முழுமுதற் கடவுள், பிறப்பு - இறப்பு இல்லாத பரம்பொருள் என்பதால் பரமசிவன் எனப்படுகிறார். ஊழிக்காலத்திலும் நிலைத்திருக்கக்கூடியவர் என்பதால் சதாசிவன் என்கிற பெயரும் உண்டு. கைலாயம் முதல் தென்கோடி வரை மட்டுமின்றி இலங்கை, நேபாளம், கம்போடியா உள்ளிட்ட நாடுகளிலும் சிவ வழிபாடு உள்ளது.
ஜடாமுடியுடன் கூடிய உருவத் திருமேனியாகவும் லிங்கேஸ்வரராக அருவுருவத் திருமேனியாகவும் பல வகைகளில் இவர் வழிபடப்படுகிறார். நடராஜர் வழிபாடும் விசேஷமானது. படைத்தல், காத்தல், அருள் வழங்குதல், மறைத்தல், அழித்தல் ஆகிய ஐந்தொழில்களுக்கான இறைவனாக நடராஜர் வணங்கப்படுகிறார்.
மாசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் வரும் மகா சிவராத்திரி, மார்கழியில் வரும் திருவாதிரை நோன்பு ஆகியவை சிவனுக்கான பண்டிகைகள். இது மட்டுமின்றி பௌர்ணமி, சோமவாரம் (திங்கள்கிழமை) ஆகிய நாள்களிலும் சிவ வழிபாடுகள் நடைபெறுகின்றன. பிரதோஷ நாளில் சிவனோடு சேர்ந்து நந்திதேவருக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
வைணவ வழிபாடு: மும்மூர்த்திகளில் ஒருவரான மகாவிஷ்ணு மூவுலகையும் காப்பவராக வணங்கப்படுகிறார். பிறப்பு - இறப்பு இல்லாத பரம்பொருள் என்பதால், பரப்பிரம்மா, பரமாத்மா என்றும் அழைக்கப்படுகிறார். உலகில் அதர்மம் தலைதூக்கும்போது தர்மத்தை நிலைநாட்ட அவதாரம் எடுப்பார் என்கின்றன புராணங்கள். இவரது தசாவதாரங்களில் ராம அவதாரத்தை விவரிக்கும் ராமாயணமும் கிருஷ்ண அவதாரத்தை விவரிக்கும் மகாபாரதமும் இந்தியாவின் மாபெரும் இதிகாசங்களாகப் போற்றப்படுகின்றன.
குருக் ஷேத்திரப் போர்க் களத்தில் அர்ஜுனனுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அருளிய பகவத்கீதையும் ஆன்மிக வழிகாட்டு நூலாகக் கருதப்படுகிறது. ஸ்ரீரங்கம், திருப்பதி உள்பட பூலோகத்தில் உள்ள 106 ஆலயங்களுடன் திருப்பாற்கடல், பரமபதம் ஆகியவற்றை உள்ளடக்கிய 108 திருத்தலங்களும் வைணவ திவ்யதேசங்கள் என்று போற்றப்படுகின்றன. ஸ்ரீராமநவமி, ஸ்ரீருஷ்ண ஜெயந்தி, ஸ்ரீவாமன ஜெயந்தி, ஸ்ரீபரசுராம ஜெயந்தி என திருமாலின் அனைத்து வடிவங்களின் அவதார தினமும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகின்றன. இவை தவிர, ஏகாதசிக்கு விரதம் இருக்கும் நடைமுறை நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
சாக்த வழிபாடு: வளம், அன்பு, பக்தி, பெருவலிமை ஆகியவற்றின் அடையாளமாகச் சக்தி போற்றப்படுகிறார். காளி, தாரா, திரிபுரசுந்தரி, புவனேஸ்வரி, பைரவி, சின்னமஸ்தா, பகளாமுகி, கமலாத்மிகா ஸ்கந்தமாதா, காத்யாயனி எனப் பல பெயர்களில் சக்திதேவி வழிபடப்படுகிறார். சங்கு, சக்கரம், பாசம், அங்குசம், கண்ணாடி, மணி, கலப்பை, கரும்பு வில், மலர்ப் பாணம் போன்றவற்றை ஏந்தி, நான்கு அல்லது எட்டுக் கரங்களுடனும் சக்தி வணங்கப்படுகிறாள். அமைதி உருவான மீனாட்சி, காமாட்சி போன்ற வடிவங்களிலும், ஆக்ரோஷமான தோற்றம் கொண்ட காளி, துர்க்கை போன்ற வடிவங்களிலும் சக்திதேவி அருள்பாலிக்கிறாள்.
தட்சன் நடத்தும் யாகத்தைத் தடுப்பதற்காகத் தீயில் இறங்கினாள். பின்னர், சக்தியின் உடலுடன் சிவபெருமான் நடனமாட, மகாவிஷ்ணு தனது சக்கராயுதத்தால், சக்தியின் உடலை 51 துண்டுகளாக்குகிறார். அவ்வாறு பல்வேறு பகுதிகளிலும் சிதறி விழுந்த சக்தியின் உடல் பாகங்களும் ஆபரணங்களுமே சக்தி பீடங்களாகப் போற்றப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, காஞ்சிபுரம் மட்டுமின்றி இலங்கை, பாகிஸ்தான், நேபாளத்திலும் சக்திபீடத் தலங்கள் அமைந்துள்ளன. தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியாவிலும் சக்தியின் சிற்பங்கள், நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள் காணப்படுகின்றன.
கௌமார வழிபாடு: தமிழ்க் கடவுள் என்று அழைக்கப்படுபவர் முருகன். வட மாநிலங்களில் சுப்ரமணியர் என்கிற நாமத்துடன் வணங்கப்படுகிறார். இலங்கை, சிங்கப்பூர், மலேசியா எனத் தமிழர் நிறைந்திருக்கும் நாடுகளில் எல்லாம் கொண்டாடப்படுகிறார். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர். குருவாக இருந்து, தந்தைக்கே பிரணவ மந்திரத்தை உபதேசித்து, அதன் பொருள் சொன்னவர் என்பதால் ‘தகப்பன்சுவாமி’ என்கிற பெருமை மிக்கவர். வள்ளி - தெய்வானையை மணந்தவர்.
திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறு திருத்தலங்களும் முருகனின் அறுபடை வீடுகள் எனப் போற்றப்படுகின்றன. திருக்கார்த்திகை தினம், வைகாசி விசாகம், தைப்பூசம் ஆகிய நாள்கள் முருகனுக்கு உகந்தவை. காவடி எடுத்தல், பால்குடம் சுமந்து செல்லுதல், ஆகியவை முருகனுக்கான பிரதான நேர்த்திக் கடன்களாகக் கருதப்படுகின்றன. திருமுருகாற்றுப்படை, கந்தபுராணம் ஆகிய நூல்கள் முருகனின் பெருமையைக் கூறுகின்றன. கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், திருப்புகழ் ஆகியவை முருகனைத் துதித்துப் பாடுகின்றன. - எஸ்.ரவிகுமார்
சூரிய வழிபாடு: ஷண்மதத்தின் ஒரு பிரிவாகச் சூரிய வழிபாடு (சௌரம்) உள்ளது. உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு தினமும் பலர் சூரிய நமஸ்காரம் செய்கின்றனர். சூரியனுக்கு உரிய மந்திரங்களாகக் காயத்ரி மந்திரம், ஆதித்ய ஹ்ருதயம் உள்ளன. சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.
சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் உலா வருகிறார். காயத்ரி, பிருகதி, உஷ்ணிக், ஜகதி, திருஷ்டுப், அனுஷ்டுப், பங்கிதி ஆகிய ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாள்களைக் குறிக்கின்றன. இந்த ரதத்தை ரதசப்தமி தினத்தில் (தை மாதத்தில் சூரியனின் தேர்ப் பாதை தெற்கில் இருந்து வடக்கு நோக்கி மாறும் தினம்) திருமால் சூரியனுக்கு அளித்தார்.
ஒடிசாவில் கோனார்க், கயாவில் தட்சிணார்கா, ஆந்திரத்தில் அரசவல்லி, குஜராத்தில் மொதேரா, அசாமில் சூர்யபஹார், மத்தியப் பிரதேசத்தில் உனாவ், கேரளத்தில் ஆதித்யபுரம், காஷ்மீர் ஸ்ரீநகரில் மார்த்தாண்டா, தமிழகத்தில் சூரியனார்கோவில் ஆகிய இடங்களில் சூரியனுக்குக் கோயில்கள் உள்ளன.
சமணர் வழிபடும் தீர்த்தங்கரர்: பொதுமக்களுக்கும் சமூகத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பின்பற்றுவதற்கு எளிதாக இருந்ததால், மக்களை அதிகம் கவர்ந்த சமயங்களில் ஒன்றாக சமண சமயம் விளங்குகிறது. அகிம்சை, மனித ஆன்மாவைத் தவிர வேறு கடவுள் இல்லை, மறுபிறவியில் நம்பிக்கை, மனிதர்களுக்கு இடையே சாதிகள் கிடையாது, மக்கள் அனைவரும் சமம், முக்கிய பாவங்களை (பொய் கூறுதல், திருடுதல், தற்பெருமை பேசுதல், பொறாமை, புறங்கூறுதல், மது அருந்துதல்) தவிர்க்க வேண்டும் ஆகியவை சமண மதத்தின் கொள்கைகளாகக் கூறப்படுகின்றன. ஆன்மாவின் உள்ளார்ந்த குணம் தெய்விகம் என்று கூறப்படுகிறது.
எல்லையற்ற பேரின்பம், எல்லையற்ற சக்தி, அனைத்து ஆத்மாக்களும் கடவுளாகக் கருதப்படுகின்றனர். ரத்னகரந்தா ஷ்ரவகாசார என்கிற சமண நூலின்படி பசி, தாகம், முதுமை, நோய், பிறப்பு, இறப்பு, பயம், அகந்தை, பற்று, வெறுப்பு, மோகம், கவலை, அகந்தை, வெறுப்பு, வியர்வை, உறக்கம், ஆச்சரியம் அற்றவரே கடவுள் என்று அழைக்கப்படுகிறார். முதலாவது தீர்த்தங்கரர் ரிஷப தேவர் முதல் 24ஆவது தீர்த்தங்கரர் மகாவீரர் உள்ளிட்டோர் மோட்சத்துக்கான உண்மையான தத்துவத்தை உணர்த்தி அதற்கான பாதையைச் சீடர்களுக்குக் காட்டுகின்றனர்.
பௌத்தர்களின் மரியாதைக்கு உரியவர்: இயற்கையின் உண்மைகளைப் புரிந்துகொண்டு முழு மனித ஆற்றலைப் பெருக்க உதவும் வழிமுறைகளின் தொகுப்பாக பௌத்த சமயம் அமைந்துள்ளது. 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சித்தார்த்த கௌதம புத்தரின் தத்துவங்களை உள்ளடக்கியது இச்சமயம். புத்தர் கடவுளாக வழிபடப்படுவதில்லை. உலக இன்பங்களைத் துறந்தவர் என்கிற அடிப்படையில் அவருக்கு பௌத்தர்கள் மரியாதை செலுத்துகின்றனர்.
உலகம் தோன்ற இறைவனே காரணம் என்கிற கருத்தை மறுத்து, ‘ஒன்று தோன்ற ஒன்று சார்பாக உள்ளது’ என்கிற சார்புக் காரணத்தை (சார்பிற்தோற்றக் கொள்கை) பௌத்த சமயம் கொண்டுள்ளது. ஆசையே துன்பத்துக்கான காரணம். துன்பத்தைப் போக்க உதவும் எட்டு வழிகளான நற்காட்சி, நல்லெண்ணம், நன்மொழி, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கடைப்பிடி, நற்தியானம் ஆகியவற்றைப் பின்பற்றினால் துன்பத்தில் இருந்து எளிதில் விடுதலை பெறலாம்.
ஒருவருக்கொருவர் அன்பு பேணி, மன நிறைவு பெற்று சுய ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதையே தலாய் லாமா போன்ற குருமார்கள் அறிவுறுத்துகின்றனர். இந்தியா (மகாபோதி கோயில் – புத்தகயா) மட்டுமின்றி, தாய்லாந்து, திபெத், மயன்மார் (பர்மா) உள்ளிட்ட நாடுகளிலும் புத்தருக்குக் கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன.
காணபத்திய வழிபாடு: ‘ஓம்’ என்கிற பிரணவத்தின் உருவமாக உள்ள விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் இந்து சமயப் பிரிவு ‘காணபத்தியம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்து சமயத்தில் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் பிறந்த முதல் குழந்தையாக விநாயகர் போற்றப்படுகிறார். விநாயகருக்கே முதல் வணக்கம் செலுத்தப்படுகிறது.
பெருச்சாளியின் மீது அமர்ந்தபடி விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நான்கு கைகளில் பாசம், அங்குசம், மோதகம், எழுத்தாணி, ஐந்தாம் கையான துதிக்கையில் அமுத கலசம் ஏந்திக் காணப்படுகிறார். ஐந்தொழில் புரிபவராகவும், அனைத்து தெய்வங்களையும் தன்னுள் அடக்கியவராகவும், உபநிடத மகா வாக்கியம் ‘தத்துவமசி’ என்பதன் வடிவமாகவும் விநாயகர் போற்றப்படுகிறார்.
கணபதி உபநிடதம், ஹேரம்ப உபநிடதம், சுப்ரபேத ஆகமம், விநாயகர் கவசம், விநாயகர் அகவல், கணேச பஞ்சரத்னம், கணேச புராணம், முத்கல புராணம், வெற்றி வேட்கை, பிள்ளையார் கதை, மகா நிர்வாண தந்திரம் போன்ற நூல்கள் விநாயகரைப் போற்றும் காணபத்திய நூல்களாக அமைந்துள்ளன. - கே.சுந்தரராமன்
இஸ்லாத்தின் திருத்தூதர்: அல்லாஹ் என்கிற சொல் ஏகமாய் எங்கும் நிறைந்திருக்கின்ற ஒரு மாபெரும் ஆற்றலைக் (supreme power) குறிப்பதாக உள்ளது. அந்த மாபெரும் ஆற்றலோ அனைத்துக்கும் உரிமையுடைய ஒன்றாக விளங்குவதால், இஸ்லாமியர்கள் (இறைவனை) ‘அல்லாஹ் ஒருவனே’ என்று முழுமனதோடு கூறி உறுதிகொள்கிறார்கள்.
முகம்மது நபியை அல்லாஹ்வின் திருத்தூதராகவும் தங்களது வாழ்வியல் வழிகாட்டியாகவும் உளப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறார்கள். தங்களது ஒவ்வொரு தொழுகையிலும் இஸ்லாமியர்கள் அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் (அனைவருக்குமான அகிலவுலக ரட்சகன் அல்லாஹ் ஒருவனே, அவனுக்கே எல்லாப் புகழும்) என்று ஓதி தங்களுடைய தொழுகையை நிறைவேற்றுகிறார்கள்.
அல்லாஹ் எந்தப் பாலினத்தையும் சாராதவன், அதனைப் பிரதிபலிக்கும் விதமாக அல்லாஹ் என்கிற சொல்லும் அமைந்துள்ளது. இச்சொல்லுக்கு இருமையில்லை பன்மையில்லை! ஆண்பாலோ, பெண்பாலோ அல்லது பலவின்பாலோ என எவ்விதப் பாலினமும் கிடையாது.
எந்த வடிவமும் இன்றி ஏகமாக வியாபித்து யாவற்றையும் ஆட்சிசெய்கிற அல்லாஹ்வின் பேராற்றல் குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு பேசுகிறது: ‘நபியே! நீர் கூறுவீராக அவன் அல்லாஹ் ஒருவனே (112/01) அல்லாஹ் அவனைத் தவிர வேறு நாயன் இல்லை (அவன்) நித்திய ஜீவன் (என்றும்) நிலையானவன் அறிதுயிலோ (சிறு தூக்கமோ) ஆழ்ந்த நித்திரையோ அவனைப் பீடிக்கா(து) வானத்தில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கு உரியவையாகும் (2/255). - மு.முகம்மது சலாகுதீன்
இறைமகன் யேசு: உலகைப் படைத்து, அதை இயக்கும் கடவுள் ஒருவரே; அவரே வானுலகத் தந்தை என்பது கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கை. அவர் தனக்கென ஒரே ஒரு மகனைப் படைத்தார். அவரே யேசு. அவரை ‘படைப்புகளிலேயே முதல் படைப்பு’ என்று புனித பைபிள் (கொலோசெயர் 1:15) சொல்கிறது. தந்தையாகிய கடவுள் உலகைப் படைத்தபோது யேசு அவரோடு சேர்ந்து பணிபுரிந்தார் என்று நீதிமொழிகள் 8:30இல் வாசித்து அறியலாம். கடவுளாகிய தனது தந்தையின் திருச்சட்டங்களைக் கடைப்பிடித்து அறம் பிறழாது வாழும்படி யேசு அறிவுறுத்துவதால், அவரை ‘வார்த்தை’ என்றும் (யோவான் 1:14) பைபிள் சொல்கிறது.
பூமியின் துன்பங்களிலிருந்து மனிதர்களை விடுவிப்பதற்காகக் கடவுள் தனது ஒரே மகனை மரியாள் என்கிற கன்னிப் பெண்ணின் வயிற்றில் மனிதனாகப் பிறக்கச் செய்தார் (லூக்கா 1:34, 35). அவர் வளர்ந்து இளைஞராகி மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை ‘மலைப்பொழிவு’ பிரசங்கமாக எளிய உவமைகளின் வழியாக மக்களுக்குப் போதித்தார்.
கூடவே அவர் செய்த அற்புதங்கள், நோய்களைக் குணமாக்கியது, பழமைவாதத்தை எதிர்த்தது ஆகியவற்றைக் கண்டு ‘யேசு, உயிருள்ள கடவுளுடைய மகன்’ என்று மக்கள் புரிந்துகொண்டார்கள் (மத்தேயு 16:16). படுகொலைக்குப் பின் யேசு உயிர்த்தெழுந்து வானுலகில் தனது தந்தையின் வலப்புறம் அமர்ந்து பூமியை ஆட்சி செய்கிறார். உலக முடிவின்போது அவர் மீண்டும் பூமிக்கு வருவார். அதுவரை அவரது அதிகாரமும் அருளும் பூமியின் மீது இருக்கிறது என்று பல பிரிவு கிறிஸ்தவர்களும் நம்புகிறார்கள். - ஆர்.சி.ஜெயந்தன்