

புரட்சி என்பது என்ன? புரட்சியாளர் யார்? சமூகத்தில் ஏற்கெனவே வழக்கத்தில் இருக்கும் நம்பிக்கைகள், கொள்கைகள் அல்லது தத்துவங்கள் ஆகியவற்றை மாற்றுவதே புரட்சி என அழைக்கப்படுகிறது. அம்மாற்றத்தைத் தோற்றுவிப்பவரே புரட்சியாளர்.
அத்தகைய புரட்சி, மனித சமூகத்துக்கு ஏற்றம் தரக்கூடியதாக இருக்க வேண்டும். சமதர்மத்தை, சமத்துவத்தைத் தோற்றுவிக்கும் கூறு அதில் இருக்க வேண்டும். அப்போதுதான் அப்புரட்சியைச் செய்தவர் புரட்சியாளர் என அழைக்கப்படுவார். ஏற்கெனவே இருக்கும் நடைமுறைகளை அவ்வளவு எளிதில் மாற்ற முடியுமா? எளிதில் மக்களின் நம்பகத்தன்மையைப் பெற முடியுமா? எத்தகைய புரட்சியும் புரட்சியாளரும் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தே தங்களை நிரூபிக்க முடியும். வரலாறும் அதைத்தான் காட்டுகிறது.
அறிவியல் துறையிலும் ஆன்மிகத்திலும் சமூகப் பொருளாதாரத்திலும் மாற்றம் ஏற்பட்டபோது அதன் கண்டுபிடிப்பாளர்கள் கடும் எதிர்ப்பைச் சந்தித்தார்கள். முரண்பாட்டுச் சக்கரங்களே நூற்றாண்டுகளைக் கடந்து மனித இனத்தைத் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்து சேர்த்துள்ளன.
அந்த வகையில் மனிதன் எப்படி வாழ வேண்டும், வாழ்க்கையின் அர்த்தம் என்ன, மனிதனாகப் பிறந்ததன் பயன் என்ன என்கிற கேள்விகளுக்கான விடையை திருக்குர்ஆன் வழியாக உலகுக்கு அறிவித்தவர் அண்ணல் முகம்மது நபி (ஸல்).
அண்ணல் பிறந்த சூழல்: ஆதம் நபியால் பல ஆண்டுக்கு முன்னர் வணக்கத் தலமாக மெக்காவில் நிறுவப்பட்ட காஃபத்துல்லாஹ் (பள்ளிவாசல்), நூஹூ நபி காலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அழிந்ததாகக் கூறப்படுகிறது. பிறகு, இப்ராஹீம் நபியும் அவரது மகன் இஸ்மாயில் நபியும் அந்த இடத்தைக் கண்டடைந்து மீண்டும் காஃபத்துல்லாஹ்வைக் கட்டினர். அதனை இறைவனை வணங்கும் இடமாகக் கொண்டு வழிபட்டுவந்தனர். அவர்களே மெக்கா நகரை உருவாக்கினர் என்றும் கூறப்படுகிறது.
ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு மையமாக அரபு நாடு அமைந்திருந்தமையால் அங்கே வாணிபம் செழித்திருந்தது. மெக்கா வரும் வணிகர்களும் மெக்காவைவிட்டு வாணிபம் செய்ய விழைந்தோரும் புனித காஃபாவின் கட்டிடத்திலிருந்து கற்களை எடுத்துச் சென்று வழிபட ஆரம்பித்தனர்.
அது உருவ வழிபாடாக மாற்றம் பெற்றது. ஆனால் இப்ராஹீம் நபியால் உருவாக்கப்பட்டதோ ஓரிறைக் கொள்கை. அவர் தமது காலத்திலேயே உருவ வழிபாட்டை மறுத்திருந்தார். அதனாலேயே உருவமற்ற இறைவனை வழிபடும் வழிபாட்டுத் தலமான காஃபாவை உருவாக்கினார்.
இப்ராஹீமின் மகன் இஸ்மாயிலின் தலைமகன் நாபித். இவரின் 40ஆம் தலைமுறையில் பிறந்தவர் அத்னான். அத்னானின் 11ஆம் தலைமுறை பிஹ்ர். இவர்களே குறைஷ் (பெருவணிகர் அல்லது வீரமறவர்) என்று அழைக்கப்பட்டனர். பிஹ்ரின் மகன் குஸையி பொ.ஆ. (கி.பி) 398இல் காஃபாவின் நிர்வாகத்தை ‘தாருன் நக்வா’ என்கிற மன்றத்தைத் தோற்றுவித்துச் செயல்படுத்திவந்தார்.
அதன் மூலம் மெக்காவுக்கு வருகைதரும் புனித யாத்ரிகர்களுக்கான வசதிகளை அவர் செய்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது. குஸையின் மகன் வழிப் பெயரன் ஹாஷிம் புகழ்மிக்க வணிகராகவும் காஃபாவுக்கு வருபவர்களுக்கு வசதிகள் செய்து தருபவராகவும் நற்பெயர் பெற்றிருந்தார்.
ஹாஷிமின் மகன்தான் அப்துல் லத்தீப். இவரே அண்ணல் நபியை (ஸல்) வளர்த்த தாத்தா. அண்ணல் நபியின் (ஸல்) தந்தை அப்துல்லாஹ், நபி(ஸல்) அவர்கள் தாயின் கருவறையில் எட்டு மாதக் குழந்தையாக இருக்கும்போதே இயற்கை எய்தினார். நபிக்கு (ஸல்) ஆறு வயதாகும்போதே தாய் ஆமீனாவும் இறந்துவிட்டார்.
பிறகு தன் தந்தைவழி தாத்தாவுடனும் தனது பெரிய தந்தை அபூதாலீபுடனும் அண்ணல் வளர்ந்தார். அபூதாலீபுடன் வாணிபத்திற்காக அண்ணல் நபி (ஸல்) செல்வதை வழக்கமாக்கிக்கொண்டார். வாணிபத்தில் சிறந்து விளங்கிய அவர், இளம் வயதிலேயே ‘அல் அமீன்’ என்கிற பட்டத்தை மெக்கா மக்களிடம் பெற்றார். ‘அல் அமீன்’ என்றால் நேர்மையானவர், நம்பிக்கைக்கு உரியவர் என்று பொருள்.
மக்களிடம் நம்பிக்கைக்கு உரியவர் எனப் பெயர் பெற்றவர், எவ்வாறு உருவ வழிபாட்டில் நம்பிக்கை கொண்ட மெக்கா மக்களின் அவநம்பிக்கைக்கு உரியவர் ஆனார்? ஏற்கெனவே மெக்காவில் காஃபத்துல்லாஹ்வில் இறைவனை வழிபடுபவர்களும் விக்கிரகங்களை வழிபடுபவர்களும் நிறைந்திருந்த சமயத்தில் அம்மக்களுக்கு அண்ணல் கூற விழைந்தது என்ன? அம்மக்களிடையே எத்தகைய சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்த அவர் விரும்பினார்? அதற்கான தேவை அந்த அரபுப் பாலைநிலத்தில் இருந்தது.
(தொடரும்)