

கல்லென்றால் உனைநிறுத்திக்
கழுவி மகிழ்ந்திடுவேன்
சொல்லென்றால் உனைத்தொடுத்துச்
சுந்தரக்கவி பாடிடுவேன்
புல்லென்றால் பனியாகி
நுனியூஞ்சல் ஆடிடுவேன்
எல்லாமும் நீயானால்
ஏழைநான் என்செய்வேன்!
எல்லாரும் இறைவனை இப்படித் தொழலாம், அப்படித் தொழலாம் என்கிறார்கள். சிலர், எப்படித் தொழுவது சிறந்தது என்று கேட்கிறார்கள். இறைவனை, தொழ முடியுமா என்றுதான் நான் வியக்கிறேன்.
கோயிலுக்கு வெளியேயும் கடவுள்: கோயிலுக்குள் சென்று கும்பிடுகிறோம். ஆனால், கோயிலுக்கு வெளியே தெய்வம் கொள்ளை கொள்ளையாகக் கொட்டிக் கிடப்பதைக் காண மறுக்கிறோம். பார்க்கும் திசையெல்லாம் தெய்வக் காட்சிதான் பரந்து கிடக்கிறது. அழகும் அவலமும், சுத்தமும் அழுக்கும், உறவும் பிரிவுமாகப் புலப்படுவதெல்லாம் தெய்வமே. ஆனால், அறிவால் அறிய முடியாத அதனை, சிலவேளை அறியாமை அறியாமல் தொட்டு விடுகிறதே, அதுதான் விந்தையிலும் விந்தை. அங்குதான், கடவுளின் ஒரே தன்மையான காரணமற்ற கருணை என்பது புரிகிறது.
பிரபஞ்சத்தை ஒரு ரகசியம் இயக்குகிறது. அதென்ன தெரியுமா? விரும்பியதை அடைவதிலிருந்து தப்ப முடியாது. அது உடனே நடக்காமல் போகலாம். அது ஒருநாள் நடந்தே தீரும். இறைவன் யார், இறைவன் என்று ஒருவன் இருக்கிறானா என்கிற கேள்விகள் எழுந்துவிட்டால், அவற்றுக்கான விடையை அறியாமல் இருக்க முடியாது. எத்தனை பிறப்பெடுத்தாலும் இந்தக் கேள்விகள் பிடரியைப் பிடித்து விடையை நோக்கியே உயிரைச் செலுத்தும்.
ஆசையின் நிறைவேற்றம் என்பதுதான் படைப்பை ஆள்கிறது. கரையான் புற்றுகட்டி, அதில் நாகம் குடிபுகுந்து ஆள்வது போலில்லை படைப்பின் கதை. எது படைத்ததோ அல்லது எது படைப்பாக விரிந்ததோ அதுவேதான் அதனை நிர்வகிக்கிறது. ஆசை என்பது அந்தச் சக்தியை அறியும் விழைவாக மாறினால், அதை, கடவுளை, அறிவதிலிருந்து தப்ப முடியாது. தெலுங்கில் ஒரு வசனமுண்டு, ‘செத்தாலும் இனிமேல் மோட்சத்திலிருந்து தப்ப முடியாது’. பட்டிக்காட்டு வார்த்தைகள் போலப் பரம சத்தியத்தைத் துல்லியமாகச் சொல்லவல்லவை வேறேதுமில்லை.
ஆசைதான் அவனை அடைய முடியாமல், அறிய முடியாமல் – இரண்டும் ஒன்றுதான் - தடுக்கிறது. ஆசைதான் அவனை அடைவதைத் தவிர்க்க முடியாததாக ஆக்கிவிடுகிறது. ஆக, ஆசையை எங்கு வைக்கிறோம் என்பதைப் பொறுத்தே அமைகின்றன பந்தமும் விடுதலையும். அதனால்தான் பற்றற்றான் மீது பற்றுவைக்கச் சொன்னார் பரம ஞானியான திருவள்ளுவப் பெருமான்.
எல்லாரும், உடம்பு – மனம் – புத்தி – சித்தம் இவையெல்லாம் ஆத்ம நிலையை அறிவதற்கு, இறைவனை அடைவதற்குத் தடையென்கிறார்கள். அப்படியானால், அவற்றை எதற்காக இறைவன் கொடுத்தான் என்று கேட்டார் என் குருநாதர்.
சித்தம் சிவமயமா? - உடம்பு, பிறருக்குத் தொண்டு புரியவே. மனம், அவனை நினைக்கவே. புத்தி, நம்மை நாமே விசாரித்துக் கொள்ளவே. சித்தம், அவனை நிறைக்கவே. அடியார்க்குத் தொண்டு புரிந்தும், ஊர் நலனுக்காக ஒப்புரவு செய்துமே பலர் உடம்பைப் பயன்படுத்தி உண்மையை உணர்ந்தார்கள்.
பூசலார் மனத்தாலேயே கோயில் கட்டி, அதன் குடமுழுக்கிற்கு இறைவனையே வரவழைத்தார். ரமண மாமுனி, புத்தி முழுதும் ஒற்றைக் கேள்வியையே செலுத்தி உண்மையை அறிந்தார். சித்தர்களைச் சித்தர்கள் என்று நாம் சொல்வது அவர்கள் சித்துவேலை செய்வார்கள் என்பதால் அல்ல. அவர்களுடைய சித்தத்தில் சிவனை மட்டுமே நிறைத்தார்கள். அவர்களுக்கென்று வேறோரு நோக்கம், காரணம், திட்டம் இல்லாமல் இருந்தார்கள்.
எனவே, நம்மிடம் இருப்பவை உடம்பு, மனம், புத்தி, சித்தம் இவையே. எல்லாருக்கும் இருப்பவை இவை. அல்லது, இவைதான் எல்லாருக்கும் இருப்பவை. இவற்றைப் புரிந்துகொண்டு, இவற்றை நிர்வகிக்கக் கற்றால், இவை ஒவ்வொன்றின் மூலமும் நாம் கடவுளைக் காணலாம், நினைக்கலாம், அறியலாம், கடவுளாக விரியலாம்.
“சித்தம் அமைதியில், மனம் ஆனந்தத்தில், உடம்பு ஓய்வில்” இதுதான் சரியான வழி என்பார் என் குருநாதர். மனம் அமைதியை அறியாதது. சித்தத்தில் ஆனந்தம் என்கிற உணர்ச்சி கிடையாது. ஆன்மா அல்லது சித்தத்தின் அமைதி தெறிக்கும்போது மனம் அதை ஆனந்தம் என்றே உணர்கிறது.
உடம்பு ஓய்வில் என்றால் திண்ணையில் கிடப்பதென்று பொருளில்லை. அமைதி – ஆனந்தம் இவை வாய்க்கப்பெற்றால் உடம்பில் பரபரப்பு, துவளுதல், படபடப்பு இவை இருக்காது. உடம்பே ஊடுருவக் கூடிய ஆகாயம் போல ஆகிவிடும். தேகம், கற்பூரமாகி விடுவதைத்தான் கற்பூர தேகம் என்பார்கள். குணத்தில் இது எளிவான தன்மை. தன்மையில் இது ஆகாயம்.
நிலத்தை நீர் தாங்குகிறது. நீரை நெருப்பு தாங்குகிறது. நெருப்பைக் காற்று ஏந்துகிறது. காற்றை ஆகாயம் தாங்குகிறது. ஆகாயத்தை எது தாங்குகிறது? சத்தியம்! உடம்பில் உயிரும் உணர்வும் இருக்கும்போதே நாம் சத்தியத்தை அறிதல் சாத்தியம். அந்தச் சத்தியமே நாம் என்பதே சத்தியம்.
கடவுளை இப்படியும் காணலாம்! - ஒரு சாதாரண மனிதனாக வாழ்ந்தபடி, அந்தப் பரம சத்தியமாகவே நாம் வாழலாம். முடியும். அப்போது, யார் யாரை எப்படித் தொழுவது சொல்லுங்கள்! யார், யாரை யாராகப் பார்ப்பது சொல்லுங்கள்! அந்த மரத்தைப் பாருங்கள். ஆழத்தில் வேர் இருக்கிறது. ஆகாயத்தில் மலர்கள் துளிர்க்கின்றன. பக்கமெல்லாம் கிளைகள். கிளைகளெங்கும் இலைகள். உச்சாணிக் கொம்பும் உண்டு. பெஞ்சில் உட்கார்ந்தவன் தோள்பட்டை வரை கிளைகள் தாழ்வதும் உண்டு.
இப்படித்தான் நாம் கடவுளைக் காணலாம். கண்டு தொழலாம். தொழுது நெகிழலாம். நெகிழ்ந்து பாடலாம். பாடி அமைதியாகலாம். அமைதியில் ஏதுமின்றி இருக்கலாம். ஏதுமின்றி இருந்து எல்லாருக்கும் இலக்காகலாம்.
இவை எல்லாமும் கடவுளாக நாம் இருந்தபடியே நடக்கலாம். கடவுள் என்பது கற்பனை என்றால், மனிதன் மட்டும் சத்தியமா? கற்பனை நிஜமாவதுதான் பிரபஞ்ச நியதியாயிற்றே! கொஞ்சம் கடவுளாக இருந்து பாருங்களேன்!
- (தரிசனம் நிகழும்)
- tavenkateswaran@gmail.com