

தில்லானா மோகனாம்பாள் புதினத்தை எழுதியதன் மூலம் உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்திருப்பவர் கொத்தமங்கலம் சுப்பு. ‘பிரிக்கமுடியாதது’ என்னும் பட்டியலில் கொத்தமங்கலம் சுப்புவின் இல்லத்தில் புரட்டாசி சனிக்கிழமை கச்சேரிகளுக்கும் இடமுண்டு. ஏறக்குறைய 80 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் புரட்டாசி சனிக்கிழமை உற்சவங்கள் கொத்தமங்கலம் கிராமத்திலேயே தொடங்கிவிட்டன.
அவரின் மயிலாப்பூர் இல்லத்தில் நடக்கும் கச்சேரிகளில் இடம்பெற்றுப் பாடும் பிரபலங்கள் அனைவருமே சன்மானம் எதுவும் வாங்காமல்தான் நிகழ்ச்சி நடத்தினர். இந்த இல்லத்தில் பாடாத பிரபலங்களே இல்லை எனலாம். இந்த இல்லத்தில் பலமுறை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார் சீர்காழி கோவிந்தராஜன். அதன்பின் அவர் வெளியூர்களில் கச்சேரிகள், திரைப்படங்களில் பின்னணி பாடுவதில் அதிகமாக கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்.
அதனால் அவரைத் தன் வீட்டில் நடக்கும் புரட்டாசி மாதக் கச்சேரிகளில் பாடுவதற்கு அழைக்காமல் தவிர்த்தார் கொத்தமங்கலம் சுப்பு. ஒருமுறை எதேச்சையாக சீர்காழி கோவிந்தராஜன், கொத்தமங்கலம் சுப்புவிடம் “இப்போதும் புரட்டாசி சனிக்கிழமை கச்சேரிகள் நடக்கிறதா, என்னை ஏன் அழைப்பதில்லை” என்று விசாரித்திருக்கிறார் கோவிந்தராஜன். அதற்கு சுப்பு, "இசைத் துறையில் நீங்கள் பிஸியாக இருப்பதால் தங்களை அழைக்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. இந்த ஆண்டு புரட்டாசி கடைசி சனிக்கிழமை அன்று உங்கள் வீட்டில் நான் பாடப்போகிறேன்” என்று உரிமையோடு சுப்புவிடம் கூறிவிட்டாராம் சீர்காழி. இப்படிப்பட்ட இசை மேதைகள் பலராலும் நடத்தப்பட்ட புரட்டாசி சனிக்கிழமை கச்சேரிகள் தற்போது கொத்தமங்கலம் சுப்புவின் மகன் சீனிவாசன் மற்றும் அவரின் மகள்களின் இல்லங்களிலும் தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதற்கு வெளி மாவட்டங்களிலிருந்தும் காத்திரமான கர்னாடக இசை ரசிகர்கள் திரள்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு.
வரும் 23, மயிலாப்பூர் கொத்தமங்கலம் சுப்பு இல்லத்தில் நந்திதா கண்ணன், வித்வான் ஸ்வர்ணரேதஸ், வரும் 30 அன்று காலை நாராயணீயம் பாராயணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை 6 மணிக்கு சிவ ஸ்கந்த பிரசாத்தின் நாமசங்கீர்த்தனமும், வரும் அக்டோபர் 14 அன்று மாலை வீரமணி ராஜு குழுவினரின் கச்சேரியும் நடைபெறுகின்றன.
அக்டோபர் 7 அன்று கொத்தமங்கலம் சுப்புவின் மகள், அன்னபூரணி சாம்பசிவம் இல்லத்தில் விஷ்ணுவின் தசாவதாரங்கள் என்னும் தலைப்பில் கவிதா கோபாலகிருஷ்ணனின் உரையும், கொத்தமங்கலம் விஸ்வநாதனின் `பகவத் கீதை பயன்கள்' உரையும் நடைபெறும்.
இதே நாளில், கொத்தமங்கலம் சுப்புவின் தம்பி மகன் சுந்தர்ராஜன் இல்லத்தில் மாலை ரஞ்சினி கௌஷிக்கின் அபங் நிகழ்ச்சியும் நடைபெறும்.
தொடர்புக்கு: 99621 99901