கண்முன் தெரிவதே கடவுள் - 16: விளிம்பில் நீடிக்கும் நிம்மதியின் சந்நிதி!

கண்முன் தெரிவதே கடவுள் - 16: விளிம்பில் நீடிக்கும் நிம்மதியின் சந்நிதி!
Updated on
2 min read

ஒன்று பிரமம் உளது உண்மை அஃது உன்

உணர்வு எனும் வேதம் எலாம் – என்றும்

ஒன்று பிரமம் உளது உண்மை அஃது உன்

உணர்வு எனக் கொள்வாயே.

இருப்பது ஒன்றுதான். அந்த ஒன்றுக்குத்தான் பிரம்மம் என்று பெயர் வைத்துக் குறிப்பிடுகிறார்கள். எங்குமாகவும், எதுவுமாகவும் அதுதான் இருக்கிறது. இதுதான் உண்மை. இதுதான் வேதம் பாடும் சத்தியம். இதுதான் வேதம் முழுவதும் கேட்கிறது. இதைத்தான் பாரதி, தனது விந்தைத் தமிழில் வீதியில் பறைசாற்றுகிறார்.

அந்த ஒன்று என்பதை நாங்கள் எப்படி உணர்வதாம் என்று நமக்குக் கேள்வி எழுகிறது. அதற்கு பாரதி சொல்லும் பதில் – ‘அஃது உன் உணர்வு.' அப்படித்தான் வேதம் சொல்கிறது என்கிறார். உணர்வு என்றால் என்ன? நாம் பொதுவாகக் குறிப்பிடும் அறிவு அல்ல அந்த உணர்வு. இதை பிரக்ஞை எனலாம். சித்தம் எனலாம். `சித்' என்றும் சொல்லிக்கொள்ளலாம். எந்த ஒன்றையும் இது, அது என்று புரிந்து கொள்ளும்போது, இந்த உணர்வு அறிவாகிறது. எதையும் தனியாகப் பிரித்துக் காணாமல் மொத்தமாய்க் கொள்ளும்போது, அந்த அறிவு தெளிவடைந்து ஞானம் என்னும் நிலையாகிறது. பகுத்தும் பார்க்காமல், மொத்தமாகவும் கொள்ளாமல், அது அதுவாய் இருக்கும் நிலையைத்தான் ‘உணர்வு' என்று வேதம் சொல்வதாக பாரதி குறிப்பிடுகிறார்.

விழித்திரு என்பதன் அர்த்தம்

உறக்கத்திலிருந்து விழிப்பு நிலைக்கு வருகின்ற தருணம். விழிப்பிலிருந்து உறக்கத்தில் மெல்ல நழுவி உள்ளே ஆழும் தருணம். இந்த இரண்டு தருணங்களில், சற்றே ஆர்வமுடன் நிதானித்தால் வேதமும், பாரதியும் ஒருசேரக் கூவும் ‘உணர்வு' புரிந்துவிடும். படுக்கையில் படுத்தபடி, தூக்கம் சொக்குகின்ற தருணத்திற்கு எளிதில் ஆட்பட்டு விடாமல், அதிலிருந்து விலகி அதைக் ‘கவனிக்க' வேண்டும். அதேபோல், விடுக்கென்று எழுந்துவிடாமல், மெல்ல, மிக மிக மெல்ல விழிக்க வேண்டும். அப்போது விழிப்பு இருக்கும், ஆனால் எந்த எண்ணமும் ஏற்பட்டிருக்காது. அதுதான் அந்த ‘உணர்வு.’ என்னைப் போன்ற சராசரிக்கும் கீழேயுள்ள சாமானியர்களுக்கு அது ஒரு கணப்பொழுதாக மட்டுமே இருக்கலாம். ஆனாலும், அது கனமான கணப்பொழுது.

எல்லா எண்ணங்களுக்கும் ‘நான்’ என்னும் உணர்வே அடிப்படை. அந்த ‘நான்’ என்னும் உணர்வுக்கும் அடிப்படையாக இருப்பதுதான் இந்த விழிப்புக்கும் உறக்கத்திற்கும் இடையில் இருக்கும் உணர்வு. இந்த உணர்வுதான் கடவுள்!

கனவுக்கும் நனவுக்கும் நடுவினிலே ஒரு

கள்ளத் தாழ்வாரம்

நனவுக்கும் துயிலுக்கும் நடுவினில்தான்

நான் எனும் வியாபாரம்

பொருள், பதவி, புகழ், திறமைகள் இவையா சாதனை? அந்தத் தாழ்வாரத்தில் ஒரு தீப்பந்தம் ஏந்திக்கொண்டு நடப்பதும், இந்த வியாபாரத்தை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்ப்பதும்தான் சாதனை. இதை நாம் செய்ய முயற்சி செய்தால் போதும். அதுவே அதற்குத் தேவையான வலிமையை வழங்கி அதைச் சாதகமாக்கும். இதை ஒரு பயிற்சியாகவோ, கொஞ்ச நேரம் உட்கார்ந்து பார்க்கும் தியானமாகவோ கருதி அத்தோடு முடித்துவிடக் கூடாது.

வள்ளலார் பெருமான் ‘விழித்திரு' என்று சொல்வது இதைத்தான் என்று நினைக்கிறேன். எப்போதும் இதில் ஈடுபட்டிருத்தலே விழிப்பு, அந்த விழிப்பே தவம், பூசை, வேள்வி, நிட்டை எல்லாம்.

இதை எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கலாம். எடுத்துக்காட்டாக, நான் விமானத்தில் அமெரிக்கா வந்தேன். மேகங்களைக் கடந்து மேலே போகும்போது கீழே இருந்த அட்லாண்டிக் பெருங்கடலைக் காணவில்லை. வானம் தொலைந்து போகவில்லை; ஆனால் நீலத்தைக் காணவில்லை. வெட்டவெளியின் பிரம்மாண்டம் நம்மைப் பரிகசிக்கிறது. எனில், விமானம் பறந்துகொண்டே இருப்பதால், இந்த வானம் எந்த வானம் என்னும் கேள்வி எழும்போது அறிவு விக்கித்துப் போகிறது. நேரம் என்பது கேலிக்குரியதாகி விடுகிறது. கடிகார முள்ளைத் திருப்பித் திருப்பி புதிய நேரத்தை நம்பிக்கொள்ள வேண்டியதாகிறது. நேரத்தின் பொய்மையைக் காட்டிக் கலகலவென்று சிரிக்கிறது காலம்.

சத்தியத்தின் திறவுகோல்

காலம், வெளி என்னும் கண்கட்டு வித்தை திடீரென்று கட்டுத் தளர்ந்து போகிறது. கட்டவிழ்ந்த போது அங்கே பிரவாகமாக எதுவும் வெளியேற வில்லை. கடலாய் இருந்தால் வெள்ளமாய்ப் பாய்ந்திருக்கலாம். ஆனால், அவிழ்த்துவிடப்பட்டது வானம் என்பது தெரியவரும்போதுதான் அது கட்டப்படக்கூடிய ஒன்றில்லை என்பதும் புரிகிறது. அங்கே மிஞ்சுவதுதான் உணர்வு.

தினம் தினம் விமானத்தில் ஏறி அமெரிக்காவுக்குப் பறக்க வேண்டியதில்லை! தினமும் உறங்குகிறோம். தினமும் விழிக்கிறோம். இதோ இந்தக் கணம்வரை இப்படித்தானே! உறங்கும் தருணத்தையும், விழிக்கும் தருணத்தையும் பயன்படுத்திக் கொள்வதே பாரதியும் வேதமும் பாடும் உணர்வை உணர்ந்துகொள்ளத் தோதான வழி. உணர்ச்சியைப் புரிந்துகொள்ளலாம். உணர்வை உணர்ந்து கொள்ளத்தான் முடியும்.

சத்தியத்தை அறிவதற்கான திறவுகோலை, இயற்கை ஒரு கள்ளச் சாவியாக இந்த உறக்க – விழிப்பு இடைத்தளத்தில் வைத்திருப்பதுதான், அதன் குசும்புக்கு அளவே இல்லை என்று காட்டு கிறது! எல்லாரும் சுவாசிக்கிறோம். எல்லாரும் உறங்குகிறோம். எல்லாரும் விழித்தெழுகிறோம். எல்லாரும்தான் அவரவர்க்கான நாளில் விழித்தெழாமல் இறந்தும் போகிறோம். ஆனால், ஒவ்வொருவருக்கும் இந்த நிலைகளின் விளிம்பில்தான் நீடித்த நிம்மதியின் சந்நிதியை வைத்திருக்கிறான் கடவுள். இவற்றைவிடப் பொதுவான அம்சங்கள் நமக்கேது?

நம்முடைய இருப்பைப் பற்றிய மர்மத்துக்கான இறுதி விடையை, எல்லோரும் எய்தும் வண்ணம் இந்த உறக்கம் – விழிப்பு – உறக்கம் என்னும் நிலைகளின் விளிம்புகளில் வைத்திருப்பதே இறை வனின் பாரபட்சமற்ற தன்மையைக் காட்டுகிறது.

இன்று உறங்கும்போது ஒரு முடிவோடு உள்ளே நுழையுங்கள். நாளை விழிக்கும் போது, ஒரு விடையாக எழுவீர்கள். தன்னைத் தீர்த்தவனே மன்னுயிர்க்கெல்லாம் புகலாகிறான்.

(தரிசனம் நிகழும்)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in