

நகுஷ், யயாதி, சிபி, சத்யவதி அரிச்சந்திரன் போன்ற மன்னர்கள் இந்திய நாட்டை ஆண்டு கொண்டிருந்தனர். தசரத மகாராஜா போன்ற உண்மையான பக்திமான்கள், உண்மையைக் கடைபிடித்த மன்னர்கள், ரிஷிகள், முனிவர்கள், தவ வலிமை கொண்ட மகான்கள் பாரத பூமியில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் உடலைத் தியாகம் செய்தவர்கள். ஆனால் ஒருபோதும் சத்தியத்தை விட்டுக் கொடுக்காது வாழ்ந்தவர்கள். இவர்களது அருளிச் செயல்களை நாம் என்றும் மறவாது இருத்தல் வேண்டும்.
ஸ்ரீராம ராஜ்ஜியத்தை நாம் என்றும் மறக்க முடியாது. ஸ்ரீராமபிரானின் பெயரையும் அவரது அரசாட்சியையும் நாம் என்றும் நினைவுகூர்வது அவசியம். ஸ்ரீராம ராஜ்ஜியம் என்றால் உடனே நம் நினைவுக்கு வருவது தர்மம், நீதி, நியாயம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, மோட்சம், சாந்தி, பிரேமை, மங்களகரம், பிறர் நலம் பேணுதல் ஆகியவையே. இதற்குக் காரணம் ஸ்ரீராமபிரானின் நற்குணங்கள் மற்றும் அவரது உன்னத வாழ்க்கைச் சரித்திரமும்தான். ராம நாமத்தால் நன்மையே நிகழும். தீய சக்தி ஒழியும் என்பதையே அவரது வாழ்க்கை எடுத்துக்காட்டுகிறது.
ஸ்ரீராமபிரானின் பெருமைகள் அளவற்றதாக உள்ளன. அவரது குணாதிசயமும், புகழும் எல்லையற்றவை. பல முனிவர்களும், மகான்களும் ஸ்ரீராமபிரானின் நற்குணங்களை வர்ணித்து பல காவியங்களைப் படைத்துள்ளனர். அரசப் பதவிக்கு வருவதற்கு முன்பே ராமபிரான் நற்குணங்களைக் கொண்டவராக, சமூகத்தின் மீதும், தன் குடும்பத்தின் மீதும் அதிக அக்கறை கொண்டவராக, பொதுமக்களை ஒன்றாகக் கருதுபவராக இருந்து, ஒரு சக்ரவர்த்தி எப்படி வாழ வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளார்.
ஒரு தனிமனிதர் தம்முடைய வாழ்வெனும் பயணத்தை எவ்வாறு முறையாக நடத்தி வாழவேண்டுமோ அவ்வாறு வாழ்ந்து காட்டினார். தியாகம், தவம் ஆகியவற்றின் அடிப்படை என்ன என்று உண்மையாக வாழ்ந்து காட்டினார் ஸ்ரீராமபிரான். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதற்கு ஏற்ப, அனைத்தையும் துறந்து கானகம் சென்று, ஒரு சாதாரண குடிமகனாக, நண்பனாக, தர்மத்தின் வேராகத் திகழ்ந்தவர் ஸ்ரீராமபிரான்.
ஸ்ரீராம ராஜ்யத்தில் அனைவரும் சமமாகக் கருதப்பட்டனர். பொருளாதாரம், தர்மம், நியாயம், நீதி, சமூக நலன், சமூக நீதி, அரச நீதி, ராஜ்ய பரிபாலன நீதி என்கிற தர்ம சிந்தனையில் ஸ்ரீராமபிரானின் ஆட்சி அமைந்திருந்தது. அனைவரும் வியக்கும்வண்ணம் அரசாட்சி நடந்து கொண்டிருந்தது. மனம் போன போக்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் நடைபெறவில்லை. உயரிய நோக்கங்களை மனதில் கொண்டு, மக்களின் நலன்களைப் பெரிதாக எண்ணி, நியாயத்தைக் கடைபிடித்து தர்மசீலனாக ஸ்ரீராமபிரான் திகழ்ந்துவந்தார்.
ஸ்ரீராமபிரான், அனைத்துத் தடைகளையும் உடைத்தெறிந்து மக்களின் நலன் கருதி ஆட்சி புரிந்தார் என்று துளசிதாஸர் கூறுகிறார். அரசருக்கும், ஒரு சாமானியனுக்கும் எவ்வித வேறுபாடும் இன்றி ஸ்ரீராமபிரான் ஆட்சி புரிந்தார் என்று கோஸ்வாமி கூறுகிறார்.
ஸ்ரீராமபிரானின் ஆட்சியில் அவரவர் கடமையை அவரவர் செய்துவந்தனர். அகில உலகமும் போற்றும்படி ஸ்ரீராம ராஜ்ஜியம் நடந்துவந்தது. அனைத்து நற்குணங்களின் சாட்சியாக ஸ்ரீராமபிரான் நின்றார். எளிமையான வாழ்க்கை வாழ்ந்து, அனைவரும் போற்றும்படி நல்லாட்சி புரிந்தார். சர்வ வல்லமை படைத்த, சர்வ நற்குணங்கள் கொண்ட, மரியாதைக்குரிய புருஷோத்தமனின் பாதம் பணிவோம்.
ஆசிரியர் குறிப்பு – ஆன்மிகச் சிந்தனையாளர். நிர்மோஹி அகாராவின் மஹந்த் மற்றும் வைஷ்ணவத்தின் ராமானந்தி பிரிவைச் சேர்ந்தவர். ஆங்கிலம், இந்தி, உருது மொழிகளில், மத தலைப்புகளில் பல கட்டுரைகளை எழுதியவர்.
- ஸாத்வி கமல் வைஷ்ணவ்