மடப்புரம் குரு தட்சிணாமூர்த்தி சுவாமி: சும்மா இருக்கிறேன்!

மடப்புரம் குரு தட்சிணாமூர்த்தி சுவாமி: சும்மா இருக்கிறேன்!
Updated on
3 min read

திருவாரூரில் தியாகராஜர் சுவாமி கோயிலின் பிரம்மாண்டத் தேரும் கமலாலயத் திருக்குளமும் பிரசித்தி பெற்றவை. திருவாரூருக்கு இன்னோர் அடையாளமும் இருக்கிறது. அதுதான் குரு தட்சிணாமூர்த்தி சுவாமியின் மடாலயம். குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் இங்கே ஜீவசமாதி அடைத்துள்ளார்.

வியாதிகளுடனும் விரக்தியுடனும் வாழ்ந்தவர்களை நல்வழிப்படுத்தியவர் சுவாமி. நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணித்த இவர், திருவாரூர் மடப்புரம் பகுதியில் ஓடம்போக்கி ஆற்றின் கரையில் அமர்ந்து 1835ஆம் ஆண்டு ஜீவசமாதி ஆனார்.

குரு தட்சிணாமூர்த்தி சுவாமி ஜீவசமாதியான இடத்தின் மேலே ஒரு சிவலிங்கம் ஸ்தாபிக்கப்பட்டு தினமும் வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன. இதில் நண்பகல் 12 மணிக்கு நடக்கும் பூஜை சிறப்பானது. குரு தட்சிணாமூர்த்தி சுவாமி நண்பகல் 12 மணிக்கு ஜீவசமாதி ஆனதால், அந்த வேளையில் நடக்கும் பூஜையும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இறையே வடிவான குழந்தை

திருச்சிக்கு அருகே உள்ளது கீழ் ஆத்தூர். இங்கே சிவசிதம்பரம் பிள்ளை - மீனாம்பிகை தம்பதிகள் வசித்தனர். இந்தத் தம்பதிக்கு மக்கள்பேறு அமையவில்லை. ஒருமுறை இருவரும் திருவண்ணாமலைக்குச் சென்றனர்.அங்கே மலையுருவாகத் திகழும் மகாதேவனை வழிபட்டு கோயிலுக்குள் சென்று அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் தரிசித்தனர். இரவுப் பொழுதில் அங்கேயே தங்கினர். அன்றிரவு இருவரின் கனவிலும் அண்ணாமலையார் தோன்றி, “நானே உங்களுக்குக் குழந்தையாகப் பிறப்பேன்” என்று அருளினார்.

கனவு கண்டதுபோல் மீனாம்பிகை அம்மையார் மணிவயிறு வாய்க்கப் பெற்றார். திருவண்ணாமலை ஈசனின் அருளால் பிறந்தமையால் `அருணாசலம்' என்றே பிறந்த குழந்தைக்குப் பெயர் சூட்டினர். இவர்தான் பின்னாளில், குரு தட்சிணாமூர்த்தி சுவாமி என அறியப்பட்டார்.

குழந்தைகளுக்கே உண்டான சில குணங்களையும் தாண்டி அருணாசலம் வளர்ந்தான். சில நேரம் பத்மாசனம் போட்டு நிஷ்டையில் இருப்பான். சில நேரம் மவுனம் அனுஷ்டித்து எதையோ வெறித்துப் பார்த்தபடி இருப்பான். பிறந்த குழந்தை 5 வயதாகியும் பேசவில்லை. இந்த நிலையில் ஒருநாள் அவர்களது வீட்டுக்குக் காவி உடை, உடலெங்கும் திருநீறு, கழுத்தை அலங்கரிக்கும் ருத்திராட்ச மாலைகள் அணிந்த துறவி ஒருவர் வந்தார். சிவசிதம்பரம் பிள்ளை வந்திருந்த சிவனடியாரிடம், “தவம் இருந்து பெற்ற எங்கள் புதல்வன் அருணாசலம் பேசாமல் இருக்கிறான். ஏன் ஸ்வாமி?” என்று கேட்டார். “அந்தக் குழந்தையைப் பார்க்கலாமா?” என்று கேட்டார் துறவி.

உடனே துறவியை வீட்டின் உள்ளே அழைத்துச்சென்ற சிவசிதம்பரம் பிள்ளை, அருணாசலத்தைக் காட்டினார். அப்போது அந்தப் பிள்ளை கண்களை மூடியபடி தியானத்தில் திளைத்திருந்தது.

துறவியார், "இந்தப் பிள்ளை தெய்வ அனுக்கிரகத்தால் பிறந்த செல்வம். இந்த உலகத்தில் உள்ளோர் நற்கதி அடைவதற்காக அவதாரம் எடுத்திருக்கிறது. இப்போது உங்கள் புதல்வனுடன் பேசிப் பாருங்களேன்" என்றார்.

சிவசிதம்பரம் குரல் தழுதழுக்க, "குழந்தாய் அருணாசலம், ஏன் கண்களை மூடிக் கொண்டிருக்கிறாய்? பேசப்பா, உன் மழலை மொழியைக் கேட்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்" என்றார்.

அவ்வளவுதான் ஐந்து வருடங்களாகப் பேசாமல் இருந்த அந்த இறைவனின் அவதாரம் முதன்முதலாக பேசிய வார்த்தைகள் - “சும்மா இருக்கிறேன்”.

"சரிப்பா, சும்மா இருக்கிறாயா. நீ யார்?" என்றார் துறவி.

மூடிய கண்களைத் திறக்காமலேயே புன்னகையோடு “நீயேதான் நான். நானேதான் நீ“ என்று பதில் சொன்னது குழந்தை. அதைக்கேட்ட துறவி, "உனது பதில் சத்தியம். நான் புறப்படுகிறேன்" என்றார்.

தட்சிணாமூர்த்தி சுவாமி முற்றும் துறந்த மேனியோடே தமது வாழ்நாளில் பல ஊர்களுக்கும் பயணித்து பல அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார். நீலப்பாடி, சிதம்பரம். விருத்தாசலம், திருவண்ணாமலை, திருப்பதி, முதலிய தலங்களுக்குச் சென்று ஆங்காங்கே பல அற்புதங்களை நிகழ்த்தினார். திருப்பதியில் இருந்து புறப்பட்டு சென்னையை அடைந்தார். திருவொற்றியூரில் பட்டினத்தாரின் சமாதி அருகே சில நாள்கள் இருந்தார். இறுதியாக திருவாரூர் வன்மீகபுரத்தை அடைந்தார்.

சிதம்பரம் நடராஜப் பெருமானால் `தட்சிணாமூர்த்தி' என்று குறிப்பிடப்பட்டதால், `அருணாசலம் சுவாமி' அதன்பிறகு தட்சிணா மூர்த்தி சுவாமி என்றே அழைக்கப்படலானார்.

காக்கும் கைகள்

திருவாரூர் மடாலய ஆலயத்தின் பிரகாரத்தில் கொத்தனார் அருணாசலம் பிள்ளை என்பவரின் சந்நிதி உள்ளது. திருவாரூர்க்காரரான இவர் சுவாமியின் திருவருளுக்குப் பாத்திரமானவர். ஒருமுறை இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள் கோயிலின் ஏகாதசி விழாவுக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான பந்தலின் உச்சியில் அலங்கார வேலைகளைச் செய்துகொண்டிருந்தார். எப்போதும் சுவாமியின் சிந்தனையாகவே இருப்பவர். அன்றும் அப்படியே இருந்தபோது, திடீரெனத் தடுமாறிக் கீழே விழுந்தார். விழும்போது `தட்சிணாமூர்த்திக்கு அபாயம்' என்று குரல் கொடுத்தார். அப்போது திருவாரூர் கமலாலயத்தின் மேல்கரையில் அமர்ந்திருந்த சுவாமி, தமது வலது கரத்தை மேலே தூக்கி வைத்துக்கொண்டு வலுவான ஒரு பொருளைத் தாங்குவதுபோல கையை மெதுவாகக் கீழிறக்கி தரையில் வைத்தார். அங்கே கூடி இருந்த பக்தர்கள், "எங்கோ ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ளது. சுவாமியின் அருளுக்குப் பாத்திரமான பாக்கியவான் யாரோ?" என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

அங்கே ரங்கத்தில் பனைமர அளவுக்கு உயரத்தில் இருந்து கீழே விழுந்த அருணாசலம் பிள்ளை தம்மை யாரோ கைப்பிடித்துத் தாங்குவதுபோல் உணர்ந்தார். அவருக்கு ஒரு சிறு கீறல்கூட ஏற்படவில்லை. இதை அவரோடு பணியிலிருந்த சக தொழிலாளர்கள் கண்டு வியந்தனர். உடனே வேலையை அப்படியே போட்டுவிட்டு திருவாரூரை அடைந்து சுவாமியைத் தரிசித்தார் அருணாசலம் பிள்ளை. பிறகு சுவாமியின் ஆசியுடன் துறவு பூண்டார்.

பிரகாரத்தில் இருக்கிற இன்னொரு விக்கிரகம் சு. ஷண்முகானந்த சுவாமியுடையது. இவரது காலத்தில் 1971இல் ஆலயத்துக்கு முதல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதை அடுத்து 1998இல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. தவிர, தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சுதையால் ஆன ஒரு விக்கிரகமும் உத்ஸவ விக்கிரகமும் உள்ளன. வருடாந்திர வைபவங்கள் அனைத்தும் இங்கு குறைவில்லாமல் நடக்கின்றன.

மகான்களின் ஜீவன் ஒரு கட்டத்தில் அடங்குதல் என்பது காலத்தின் கட்டாயம். ஆனால், அவர்கள் எங்கும் வியாபித்துத் தங்களின் அருளை இந்தப் பூவுலகுக்கு வழங்கிக்கொண்டே இருப்பார்கள். இதற்குப்பரிபூரணமான ஒரு சாட்சி திருவாரூர்  குரு தட்சிணாமூர்த்தி சுவாமிதான்.

1835ஆம் ஆண்டு ஆவணி மாதம் 12 ஆம் நாள் உத்திரம் நட்சத்திரம் புதன்கிழமை, குரு தட்சிணாமூர்த்தி சுவாமி அன்பர்களிடம், ‘முடிந்தது! முடிந்தது!! முற்றிலும் முடிந்தது!' என்று கூறியபடி அகண்ட பரிபூரண சச்சிதானந்த இறைவனுடன் கலந்தார்.

தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் 188ஆவது குருபூஜை விழாவானது செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி (ஆவணி மாதம் 29ம் தேதி) வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது.

டாக்டர் எல். மகாதேவன்
mahadevan101@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in