

நபிகளார் தனது தோழர் அபூபக்கருடன் மக்காவை விட்டும் புலம்பெயர்ந்து மதீனா நோக்கி பயணப்பட்டார்கள். நபிகளாரின் வருகைக்காக மதீனாவின் மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்தனர். சூரியனின் கதிர்கள் நபிகளாரது மற்றும் அபூபக்கரின் தூய வெண்ணிற ஆடையில் பட்டுப் பிரகாசித்தன. இக்காட்சியினைத் தனது வீட்டிலிருந்த ஒரு யூதர் தற்செயலாக கண்டார். அவர் மதீனாவின் மக்களிடம் `நீங்கள் எதிர்பார்த்திருந்த முஹம்மத் வந்துவிட்டார்' என உரத்த குரலில் கூறினார். அவரின் அழைப்பு ஊரெங்கும் பரவியது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் அங்கு வந்து கூடினர். நபிகளார் ஒரு ஈச்ச மரத் தோட்டத்திற்கு வந்து அமர்ந்து அம்மக்களிடையே உரையாற்றினார்.
“ஓ மக்களே! ஒருவருக்கொருவர் சாந்தியும் சமாதானமும் கொண்டு சோபனம் கூறுங்கள் (சாந்தியைப் பரப்பி உலக சமாதான வாழ்க்கைக்குப் பாடுபடுங்கள்) பசித்தவருக்கு உணவளியுங்கள் (இது தர்மங்களிலேயே மிகவும் மேலானது)
உறவினர்களுடனான பந்தங்களைக் கண்ணியப்படுத்துங்கள். (சொந்த பந்தங்களை மதித்து நடந்து குடும்ப உறவினை வலுப்படுத்துவது மனித வாழ்வாதாரத்தைப் பெருகச் செய்யும்)
மனிதர்கள் உறங்கும் (இரவு) வேளைகளில் (எழுந்து) இறைவனை வழிபடுங்கள் நீங்கள் சாந்தியுடன் சுவர்க்கம் புகுந்திட அவை உதவும்” என்று பொதுவானதோர் உரையினை அம்மக்களிடையே பேசினார்.
மற்றொரு சந்தர்ப்பத்தில் நபிகளார், "இறைவன் எனக்கு ஒன்பது அம்சங்களைக் கட்டளையிட்டுள்ளான். அதனை நான் ஏற்று நடக்கின்றேன்” என்றார்.
அந்த ஒன்பது நன்னடத்தைகள்:
1) ரகசிய நிலையிலும் வெளிப்படையான நிலையிலும் இறைவனை அஞ்சி வாழ்வது 2) கோப நிலையிலும் நிதான நிலையிலும் நீதி நேர்மையுடன் பேசுவது 3) வறுமை நிலையிலும் செல்வ நிலையிலும் நிதானம் தவறாமல் இருப்பது 4) உறவைத் துண்டித்தவரோடும் இணைந்து வாழ முயல்வது 5) எனக்குத் தராமல் என்னைப் புறக்கணித்தவருக்கும் தாராளமாக தந்து உதவுவது 6) எனக்கு அநீதி இழைத்தவருக்கும் மன்னிப்பு வழங்குவது 7) என்னுடைய அமைதி நற்சிந்தனையாக அமைவது 8) என்னுடைய பேச்சு இறை தியானமாக இருப்பது 9) என்னுடைய பார்வை அனுபவப் பாடமாக அமைவது மற்றும் நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பது.
இத்தகைய நன்னடத்தை உபதேசங்களை மனிதன் செயல்படுத்தும் போது அவன் நீடூழி வாழும் வித்தார வாழ்வை அடைந்து விடுகிறான்.