

கர்னாடக இசையில் பிரபலமான வித்வானாக இருந்தாலும் சரி, இளம் கலைஞராக இருந்தாலும் சரி அவர்களின் விருப்பத்திற்குரிய கீர்த்தனைகளில் தவறாமல் இடம்பெறும் பெருமைக்குரிய கீர்த்தனையாக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் அருளிய `மகா கணபதிம்' கீர்த்தனை அமைந்திருக்கும்.
இந்தப் பாடலைப் பொதுவாக நாட்டை ராகத்தில் பாடுவார்கள். ஆலாபனை, ஸ்வரப்ரஸ்தாரம், கொன்னக்கோல் என வழக்கமான மரபை அடியொற்றிப் பாடப்படும் இந்தப் பாடலை, இன்றைய தலைமுறையும் தனக்கே உரிய பாணியில் பாடுவதைக் கேட்பதற்கும் அதை ரசிப்பதற்கும் பக்குவம் வேண்டும்.
பிரியங்கா, சைனிகாவின் குரலில் நாட்டை ராகத்தின் மேன்மையான சங்கதிகள் இம்மியளவும் பிசகாமல் இந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கின்றன. அக் ஷயின் சாரீர வளத்தில் கொன்னக்கோலில் தாளத்தின் சொற்கட்டுகள் துலக்கமாக வெளிப்படுகின்றன. ஒரு பிரம்மாண்டமான ஜுகல்பந்திக்கு நம்மைத் தயார்ப்படுத்தும் வகையில் பாடலின் இசை நேர்த்தி இருப்பது சிறப்பு. சரோட், சாரங்கியின் தந்திகளில் ஸ்வரங்களின் சஞ்சாரமும் அதற்கு இணையாக பிரியங்கா, சைனிகாவின் குரலிசையும் இனிமையான ஒத்திசைவுடன் இயைந்து ஒலிப்பது நயம்.
பாடலின் காணொளியைக் காண: http://surl.li/laqaw